under review

மாயா (ஓவியர்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 57: Line 57:
*[https://artistmayaweddingcards.com/ மாயா வெட்டிங் கார்ட்ஸ்]
*[https://artistmayaweddingcards.com/ மாயா வெட்டிங் கார்ட்ஸ்]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:45, 5 March 2025

ஓவியர் மாயா (படம் நன்றி: அந்திமழை இணைய இதழ்)

மாயா (ஓவியர் மாயா; மகாதேவன்) (பிப்ரவரி 26, 1927 – ஜனவரி 22, 2025) ஓவியர், வடிவமைப்பாளர். தமிழின் முன்னணி இதழ்களில் ஓவியராகப் பணியாற்றினார். அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். மணியம் நூற்றாண்டு நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது, அகரம் ஃபவுண்டேஷன் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

மகாதேவன் என்னும் இயற்பெயர் கொண்ட மாயா, பிப்ரவரி 26, 1927-ல், கேரளாவில் உள்ள வைக்கத்தில், ராமசுப்பிரமணியம் – பாகீரதி இணையருக்குப் பிறந்தார். பூர்விக ஊரான திருநெல்வேலி அருகில் உள்ள கோபால சமுத்திரத்தில் சில ஆண்டுகள் வசித்தார். செங்கல்பட்டில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு பயின்றார்.

தனி வாழ்க்கை

ஓவியர் மாயா மணமானவர். மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன்; நான்கு மகள்கள்.

ஓவியர் மாயா - இளம் வயதுப் படம். (படம் நன்றி: https://kalkionline.com/ தளம்)

ஓவிய வாழ்க்கை

தொடக்கம்

மாயா, இரண்டாம் வகுப்புப் படிக்கும் போதே ஓவியங்கள் வரைந்தார். நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்து இதழில் பல படங்களை வரைந்தார். 1945-ல், ‘பேசும் படம்’ நிறுவனம் நடத்திய ’பிக்சர் போஸ்ட்’ (Picture Post) என்ற இதழில் ஓவியராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ’பேசும் படம்’ இதழில் ஓவியராகப் பணியாற்றினார். ‘பாலபாரதி’ இதழில் (வ.வே.சு. ஐயர் நடத்திய இதழ் அல்ல) பணியாற்றும்போது ‘வீர சிவாஜி’ என்னும் படக்கதையை வரைந்தார். ’தேவன்’ என்ற பெயரில் படங்களை வரைந்தார்.

மாயா ஓவியம் (படம் நன்றி: காமிக்ஸ் பி.டி.எஃப் டைம்ஸ் தளம்)
ஆனந்த விகடன்

1955-ல் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்தார். மாயாவின் முதல் ஓவியம், 1955-ம் ஆண்டில், விகடனின் ஜனவரி இதழில், ‘சாமிக்கண்ணு’ எனும் சிறுகதைக்காக வெளியானது. தொடர்ந்து ‘தேவன்’ என்ற பெயரிலேயே ஓவியங்கள் வரைந்தார். அப்போது தேவன் ஆசிரியராக இருந்தால், ‘மாயா’ என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டார். 1959 செப்டம்பர் மாதம் ’அவனும் அவளும்’ என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் ‘மாயா’ என்ற பெயர் இடம் பெற்றது. தொடர்ந்து ‘மாயா’ என்ற பெயரிலேயே வரைந்தார். விகடனில் ‘மாயா’ வரைந்த ‘ஜமீன்தார் மகன்’ ஓவியத் தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

மாயா ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, பரணீதரன், கோபுலு, சாவி, மணியன், தாமரைமணாளன், வாணி உள்ளிட்ட பல படைப்பாளிகளுடன் நட்பில் இருந்தார். அவர்களில் பலரது கதைகளுக்கு ஓவியம்வரைந்தார். மாயா, தமிழ் இதழ்களில் முதன் முதலில் வண்ணப் படத்தை வரைந்த ஓவியராக அறியப்படுகிறார். 1978 வரை ஆனந்த விகடனில் பணியாற்றினார்.

இதயம் பேசுகிறது

1978 முதல் 1986 வரை இதயம் பேசுகிறது இதழில் பணிபுரிந்தார். மணியன் மற்றும் தாமரை மணாளனின் பல தொடர்களுக்கு வரைந்தார்.

இதயம் பேசுகிறது இதழிலிருந்து விலகிய பின் சுதந்திர ஓவியராக கல்கி குழும இதழ்கள் உள்பட பல இதழ்களுக்கு வரைந்தார். குமுதத்தில் வெளியான ஜெயலலிதாவின் தொடர் ஒன்றிற்கு ஓவியம் வரைந்து அவரது பாராட்டுதலைப் பெற்றார்.

ஓவியப் பள்ளி

மாயா, ‘மாயா சித்ராலயா’ எனும் பெயரில் ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தினார். கோவிட் தொற்றுக்காலம் வரை அப்பள்ளி செயல்பட்டது.

மாயா வெட்டிங் கார்ட்ஸ்

மாயா, 2002-ல், தனது 75-வது வயதில் ’மாயா வெட்டிங் கார்ட்ஸ்’ என்ற அழைப்பிதழ்களை உருவாக்கி அச்சிட்டு தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழி பேசுபவர்களின் பல்வேறு குடும்ப நிகழ்வுகளுக்கு, பாரம்பரியம், கலாசாரப் பின்னணியுடன் ஓவியங்களை வரைந்தளித்தார்

மணியம் நூற்றாண்டு - வாழ்நாள் சாதனையாளர் விருது (படம் நன்றி. விகடகவி.இன்)

விருதுகள்

  • மணியம் நூற்றாண்டின் போது வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணப்பரிசும்
  • அகரம் ஃபவுண்டேஷன் அளித்த மூத்த ஓவியருக்கான விருதும், பணப்பரிசும்.

மறைவு

மாயா, ஜனவரி 22, 2025 அன்று, தனது 98-ம் வயதில் வயது மூப்பால் காலமானார்.

மதிப்பீடு

மாயா, அட்டைகளில் தமது கைகளினால் வரைவதையே பெரிதும் விரும்பினார். தனது ’ஸ்ப்ரே பெயின்டிங்’ ஓவியங்களால் தனித்து அறியப்பட்டார். பார்த்தவுடன் இது ’மாயாவின் ஓவியம்தான்’ என அடையாளம் காணும் வகையில் தனித்துவம் உள்ளதாக மாயாவின் பல ஓவியங்கள் அமைந்தன.

வர்மா, ராஜு, சில்பி, கோபுலு போன்ற மூத்த ஓவியர்கள் வரிசையில், அடுத்த தலைமுறையின் சிறந்த ஓவியர்களுள் ஒருவராக மாயா மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page