அ. தேவநாதன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 61: | Line 61: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|21-Feb-2025, 06:13:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:04, 22 February 2025

அ. தேவநாதன் (ழகரம் தேவநாதன்; கவிஞர் கடலூர் அ. தேவநாதன்; ழகர ஞாயிறு அ. தேவநாதன்; அ தேவநாதப் பாவாணர்) (ஜூலை 01, 1933 – டிசம்பர் 01, 2018) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சொற்பொழிவாளர். ’தமிழ் ழகரப் பணிமன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.
பிறப்பு, கல்வி
அ. தேவநாதன் என்னும் ‘ழகரம்’ அ. தேவநாதன், ஜூலை 01, 1933 அன்று கடலூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியை உப்பலவாடியிலும் உயர்நிலைக் கல்வியை மஞ்சக்குப்பம் புனித ஜோசப் பள்ளியிலும் படித்தார்.
தனி வாழ்க்கை
அ. தேவநாதன், கடலூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் அரசுத் தேர்வெழுதி தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தமிழ்நாடு சட்ட ஆலோசனைக்குழு அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை
அ. தேவநாதன், தமிழ் மொழியின் சிறப்புக் குறித்தும், ‘ழ’கரத்தின் பெருமை, முக்கியத்துவம் குறித்தும் தமிழ் மாருதம், தமிழ்ப் பாவை, தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, கல்கண்டு, தமிழ் மூவேந்தர் முரசு போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பிழையின்றித் தமிழ் பேசுவது குறித்தும், ‘ழ’கரத்தைச் சிறப்பாக உச்சரிப்பது குறித்தும் உரையாற்றினார்.
தமிழ் ழகரப்பணி மன்றம்
அ. தேவநாதன், ழகரத்தை அனைவரும் பிழையின்றிப் பேச வேண்டும் என்பதற்காக ‘தமிழ் ழகரப்பணி மன்றம்’ என்ற அமைப்பை 1995-ல் தொடங்கினார். 2002, 2006-ல் தமிழ் ‘ழ’கர மாநில மாநாடுகளை நடத்தினார். ழகரப் பணிமன்ற ஆண்டுவிழா, திருவள்ளுவர் பிறந்தநாள் விழா, பொங்கல் விழாக்களில் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ழகரப் பயிற்சி அளித்தார். பல பிரசுரங்களை அச்சிட்டளித்தார்.
ழகரப் பணிமன்றத்தின் பல்வேறு கிளைகள் மூலம் ஆர்வமுள்ளவர்களுக்கு ழகரப் பயிற்சி அளிக்கப்பட்டு, பங்கேற்றோருக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அமைப்புச் செயல்பாடுகள்
அ. தேவநாதன், மொழிப் போரில் பங்கேற்று இருமுறை சிறை சென்றார். தலைநகர் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத்தமிழ்ச் சங்கம், கண்ணதாசன் இலக்கியப் பேரவை, கவிதை உறவு அமைப்பு, உலகத் திருக்குறள் மையம், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி கலைக்கழகம், வானவில் பண்பாட்டு மையம் போன்ற பல அமைப்புகளுடன் இணைந்து பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார்.
பொறுப்பு
‘தமிழ் ழகரப்பணி மன்றம்’ அமைப்பின் நிறுவனர்.

இதழியல்
அ. தேவநாதன், ‘மீண்டும் கவிக்கொண்டல்’, ’செந்தமிழ் முரசு’ இதழ்களில் துணை ஆசிரியராகவும், ’தமிழ் மூவேந்தர் முரசு’ இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். ’உழைப்பவர் உலகம்’ இதழின் இதழாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார்.
விருதுகள்
- ழகர ஞாயிறு
- ழகர நாயகர்
- ழகர ரத்தினா
- ழகரத் தேனீ
- ழகரக் காவலர்
- ழகரப் பவழம்
- ழகரச் சிற்பி
- கவிப்புனல்
-என 45-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றார்
வாழ்க்கை வரலாறு
அ. தேவநாதன் குறித்து ‘வன்னியர் குல நட்சத்திரங்கள் கடலூர் அ.தேவநாதன்’ என்ற தலைப்பில் சி.என். இராமமூர்த்தி நூல் ஒன்றை எழுதினார்.
மறைவு
அ. தேவநாதன், டிசம்பர் 01, 2018 அன்று, தனது 85-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
அ. தேவநாதன், மக்களிடையே ழகர உச்சரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பல கூட்டங்களை நடத்தினார். இதழ்களில் எழுதினார். ”‘ழ’கர ஒலியை எப்போது எல்லாத் தமிழர்களும் சரியாகப் பேசுகிறார்களோ, அப்போது தான் அது ’செம்மொழி’ ஆகும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ழகரத்தைப் பிழையின்றிப் பேசவேண்டும் என்பதற்காக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து, இறுதிவரை அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவராக அ. தேவநாதன் அறியப்படுகிறார்.
நூல்கள்
- ழகரம் தமிழின் சிகரம்
- வானருவி
- ழகரத் தமிழமுதம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2025, 06:13:27 IST