சீ. முத்துசாமி: Difference between revisions
No edit summary |
|||
Line 55: | Line 55: | ||
{{finalised}} | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:மலேசிய ஆளுமைகள்]] |
Revision as of 14:22, 21 June 2022
சீ. முத்துசாமி மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி. 70-களில் நவீன இலக்கியம் மலேசியாவில் வேர்விட 'நவீன இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள் போன்ற இடைவிடாத இலக்கியப் பங்களிப்புகள் வழியே மலேசிய இலக்கியச் சூழலை வளப்படுத்தும் படைப்பாளி.
பிறப்பு, கல்வி
சீ. முத்துசாமி பிப்ரவரி 22, 1949 அன்று கெடாவில் சீரங்கன்-முத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். இரண்டு சகோதரிகள் மூன்று சகோதர்கள் உள்ள குடும்பத்தில் இவரே மூத்த பிள்ளை. ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் படிவம் ஆறு வரை இடைநிலைக்கல்வியைத் தொடர்ந்தார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தார்
தனிவாழ்க்கை
சீ.முத்துசாமி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். இடையிலேயே அரசாங்க பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, காப்புறுதி முகவராகப் பணியைத் தொடர்ந்தார். 1973-ல் திருமணம் செய்தார். மனைவியின் பெயர் தேவி. இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இலக்கிய வாழ்க்கை
சீ. முத்துசாமி இடைநிலைப்பள்ளியில் பயிலும்போதே ஆங்கில இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியிருந்தார். ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வந்த ஜெயகாந்தனின் புனைவுகளை வாசித்ததன் வழி தமிழ் இலக்கிய வாசிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1971-ல் தனது 22-ஆவது வயதில் பீடோங்கில் நடந்த சிறுகதை போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றதன் வழி தொடர்ந்து புனைவிலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1978-ல் 'இரைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் 1980-ல் 'விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை' என்ற குறுநாவலையும் எழுதி வெளியீடு செய்தவர் 1980-களின் தொடக்கத்தில் முழுமையாக இலக்கியச் சூழலில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராயிரத்தின் தொடக்கத்தில் மீண்டும் எழுதத் தொடங்கினார். 2006-ல் 'மண் புழுக்கள்' நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் கவனமும் அவரை மீண்டும் உற்சாகமாக எழுதத் தூண்டியது. இதே காலக்கட்டத்தில் காதல், வல்லினம் போன்ற இலக்கிய இதழ்களின் வரவால் தன் எழுத்துக்குப் பொருத்தமான களம் கிடைத்ததாக சீ. முத்துசாமி நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
இலக்கியச் செயல்பாடுகள்
எம். ஏ. இளஞ்செல்வன், நீலவண்ணன் ஆகியோருடன் இணைந்து ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றினார். ஆகஸ்டு 25, 1979-ல் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை அவ்வியக்கம் வழி ஏற்பாடு செய்தார். 2006-ல் சுங்கைப் பட்டாணியில் மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நூல் வெளியீடுகளையும் புத்திலக்கிய அறிமுகக் கூட்டங்களையும் நடத்தினார்.
தனி ஈடுபாடு
சீ.முத்துசாமி நாய்கள் வளர்ப்பதிலும், புதிய இனங்களை உருவாக்குவதிலும் ஈடுபாடுள்ளவர்.
இலக்கிய இடம்
பொத்தாம் பொதுவான அரசியல் நோக்கில், தோட்டப்புற வாழ்வு எழுதப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் இருந்து விடுபட்டு, அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்தவர் சீ. முத்துசாமி. புறவயமான வாழ்வை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மலேசிய இலக்கிய உலகத்தில் அகவயமாக பேசத்தொடங்கிய முதல் கலைஞன். லட்சியவாதங்களை முன்வைத்த புனைவுகளுக்கு மத்தியில், வாழ்வின் இருண்மையைத் தொடர்ந்து பேசிவந்தவர். அவ்வகையில் மலேசிய நவீன இலக்கிய உலகின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
பரிசும், விருதுகளும்
- 'இரைகள்' சிறுகதை தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் (1977) முதல் பரிசு பெற்றது. இக்கதை தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதத்தின் சிறந்த சிறுகதையாகவும் (நவம்பர் 1977) தேர்வு பெற்றது.
- செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு (2002).
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் 'மண்புழுக்கள்' நாவல் முதல் பரிசு பெற்றது (2005).
- விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார் (2017-ஆம் ஆண்டுக்கான விருது).
வாழ்க்கைவரலாறுகள் ஆவணப்படங்கள்
- சீ.முத்துசாமி பற்றி ம.நவீன் இயக்கிய ‘ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்’ என்னும் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது
- சீ.முத்துசாமியின் படைப்புகள் குறித்து சீ.முத்துசாமி -மலேசியத் தமிழிலக்கிய முன்னோடி என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
நூல்கள்
சிறுகதை
- இரைகள் (சிறுகதைத் தொகுப்பு, 1978)
- அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சிறுகதைகள், 2012)
குறுநாவல்
- விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை (குறுநாவல், 1980)
- அம்மாவின் கோகெட் வெட்டும் 'கொங்யெட்டின்' மணிப்புறா கூடுகளும் (குறுநாவல்கள், 2011)
- இருளுள் அலையும் குரல்கள் (குறுநாவல்கள், 2014)
நாவல்
- மண்புழுக்கள் (நாவல், 2006)
- மலைக்காடு (நாவல், 2019)
மொழிப்பெயர்ப்பு
- கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள், 2020)
உசாத்துணை
- சீ. முத்துசாமி: மலேசிய நவீனத் தமிழிலக்கிய முன்னோடி - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
இணைய இணைப்பு
- சீ. முத்துசாமி நாவல்கள் - ம. நவீன்
- சீ. முத்துசாமி சிறுகதைகள் - ம. நவீன்
- சீ. முத்துசாமி ஆவணப்படம்
- சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி
- சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!
- சீ முத்துசாமி மலேசிய நவீன இலக்கியத்தின்நேர்மையான குரல்
- சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
- https://www.youtube.com/watch?v=0RU9dKvfj10
- https://tamilasiabooks.com/product/சீ.முத்துசாமி
✅Finalised Page