ஆர்வி: Difference between revisions
(Link text corrected) |
(Corrected Category:இதழாளர்கள் to Category:இதழாளர்Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
Line 73: | Line 73: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
[[Category: | [[Category:இதழாளர்]] |
Latest revision as of 11:54, 17 November 2024
To read the article in English: RV (R. Venkatraman).
ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) (டிசம்பர் 6, 1918 - ஆகஸ்ட் 29, 2008) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதழாளர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர்.
பிறப்பு, கல்வி
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் டிசம்பர் 6, 1918-ல் ராமையர்- சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தார். திருத்துறைப்பூண்டியில் பள்ளியிறுதிவரை படித்தார்.
தனிவாழ்க்கை
ஆர்விக்கு 18 வயதில்(1936) 13 வயதான பட்டம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. ஆர்விக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர்.
அரசியல்
பள்ளியிறுதி படித்துக்கொண்டிருந்தபோது இந்திய விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். வேதாரண்யம் உப்புசத்யாக்கிரகத்தை ஆதரித்து பணியாற்றினார். 1941-ல் நடைபெற்ற தனிநபர் சத்யாக்கிரகத்தில் கலந்துகொண்டு மூன்றுமாதம் சிறைத்தண்டனை பெற்று பாபநாசத்தில் சிறையில் இருந்தார். கதர்பிரச்சாரம், கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகியவற்றுக்காக ஊர் ஊராக அலைந்து பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இதழியல்
1942-ம் ஆண்டு அன்றைய இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியரான க. சந்தானம் ஆர்வியை சென்னைக்கு வரவழைத்து கல்கி இதழில் ஆசிரியராகச் சேர பரிந்துரைத்தார். நடுவே கி.வா. ஜகன்னாதனைச் சந்தித்த ஆர்வி கலைமகள் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் பலர் கலைமகளில் எழுத ஆர்வி காரணமாக அமைந்தார். கலைமகள் இதழ் 1950-ல் கண்ணன் என்னும் சிறுவர் இதழைத் தொடங்கியபோது அதன் ஆசிரியரானார். 22 ஆண்டுகள் கண்ணன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இயக்கச்செயல்பாடுகள்
1956-ல் கல்கியை தலைவராகக் கொண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக முன்முயற்சி எடுத்தார். அதன் இணைசெயலாளராகப் பணியாற்றினார். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம் அமைத்து கூட்டுறவு முறையில் நூல்களை வெளியிட்டார். விக்ரமன், சாண்டில்யன், த.நா. குமாரசாமி ஆகியோர் அதில் அவருடன் செயல்பட்டனர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1968-ல் அன்றைய ஜனாதிபதி ஜாகீர் ஹூசெய்ன் தலைமையில் குழந்தை எழுத்தாளர் மாநாட்டை பெரிய அளவில் நடத்தினார். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சென்னை கிளையின் நிறுவனர், ஆதர்ஸ் கில்ட் என்னும் எழுத்தாளர் கூட்டமைப்பின் செயல் உறுப்பினராகச் செயலாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர்வி பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எழுதத் தொடங்கினார். 1934-ல் இவருடைய முதல்கதை 'தனிக்குடித்தனம்’ வெளியாகியது. முதல் நாவல் 'உதயசூரியன்’ 1942-ல் சுதேசமித்திரனில் பிரசுரமாயிற்று. 1956-ம் ஆண்டு வெளிவந்த இவருடைய 'அணையாவிளக்கு' நாவல் அப்போது விவாதிக்கப்பட்டது. ’ஆதித்தன் காதல்' என்ற சரித்திர நாவலும் புகழ்பெற்ற ஒன்று. ’திரைக்குப் பின்', 'கண்கள் உறங்காவோ’ முதலியவை விரும்பப்பட்ட நாவல்கள். இவை அனைத்துமே சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை.
இலக்கிய இடம்
ஆர்வியின் கதைகள் பொதுவாசிப்புக்கு உரியவை. எளிமையான நடையில் உரையாடல்களும் நிகழ்வுகளுமாக நாடகீயமான சந்தர்ப்பங்களுடனும் நெகிழ்வுகளுடனும் திருப்பங்களுடனும் எழுதப்பட்டவை. 1950-60-களின் பொதுவான தரத்திற்கு சற்று மேலாகவே பாலியலை எழுதியவர். பிற்காலத்தைய பொதுவாசிப்புக்குரிய எழுத்தாளர்களான பாலகுமாரன் போன்றவர்களுக்கு முன்னோடியானவர். பெரும்பாலும் பிராமணப் பின்னணியில், தஞ்சை வட்டாரச்சூழலில் கதைகளை எழுதினார். அணையாவிளக்கு அவருடைய குறிப்பிடத்தக்க நாவல்.
விருதுகள்
- ஆர்வியின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன.
- காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
- பாரதி லட்சுமணன் அறக்கட்டளையும், இலக்கியச் சிந்தனையும் இணைந்து வழங்கிய பம்பாய் ஆதி லட்சுமணன் நினைவுப் பரிசு (2003).
- 2004-ம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்விக்கு வழங்கப்பட்டது.
- காரைக்குடி 33-ம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.
நூல்கள்
குழந்தை இலக்கியம்
- அசட்டுப்பிச்சு
- சைனா சுசூ
- ஐக்கு
- ஐக்கு துப்பறிகிறான்
- சந்திரகிரிக் கோட்டை
- காளி கோட்டை இரகசியம்
- புதிய முகம்
- ஜம்பு
- காலக் கப்பல்
- ஒருநாள் போதுமா?
- லீடர் மணி
நாவல்
- உதயசூரியன்
- இருளில் ஒரு தாரகை
- திரைக்குப் பின்
- அணையாவிளக்கு
- யுவதி
- சவிதா
- தேன்கூடு
- காணிக்கை
- மேம்பாலம்
- முகராசி
- சொப்பன வாழ்க்கை
- பனிமதிப்பாவை
- மனித நிழல்கள்
- யௌவன மயக்கம்
- வெளிவேஷங்கள்
- அலை ஓய்ந்தது
- ஆதித்தன் காதலி
சிறுகதை
- குங்குமச் சிமிழ்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:52 IST