second review completed

தணிகை உலகநாதன் (புலவர்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 102: Line 102:
* [https://www.youtube.com/watch?v=7fcOEzbZHMc தணிகை உலகநாதன் வாழ்க்கைக் குறிப்பு, யூ ட்யூப் தளம்]  
* [https://www.youtube.com/watch?v=7fcOEzbZHMc தணிகை உலகநாதன் வாழ்க்கைக் குறிப்பு, யூ ட்யூப் தளம்]  
* ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை
* ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை
{{Ready for review}}
 
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:48, 26 October 2024

தணிகை உலகநாதன் (கவிமணி தணிகை உலகநாதன்; புலவர் தணிகை உலகநாதன்; பாரியப்பன்; குருவிக்குடிலார்) (அக்டோபர் 01, 1921 - நவம்பர் 19, 1993) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

உலகநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட தணிகை உலகநாதன், அக்டோபர் 01, 1921 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்) திருவத்திபுரம் என்ற ஊரில், (இன்றைய செய்யாறு) தணிகாசலம் - சுந்தரம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், மேற் கல்வி பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தணிகை உலகநாதன் மணமானவர். சென்னை இந்து தியாலஜிகல் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தணிகை உலகநாதன் மாணவர்களுக்காகப் பல பாட நூல்களை எழுதினார். சிறார்களுக்காகப் பல குழந்தைப் பாடல்களையும், சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதினார். ”பொம்மை பொம்மை பொம்மை பார்”, “குருவி பறந்து வந்ததாம்” போன்ற, சிறார்களின் விருப்பத்திற்குரிய பாடல்களை இயற்றியவர். குருவிக்குடிலார், பாரியப்பன் போன்ற புனைபெயரில் பல படைப்புகளை எழுதினார். முதல் பாடல் தொகுப்பு ‘பாடும் பாப்பா’ 1960-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிறார்களுக்காக இவர் எழுதிய பாடல்களும், கதைகளும், நாடகங்களும் பள்ளிப் பாட நூல்களில் இடம்பெற்றன.

சிறார் படைப்புகளோடு, நாடகங்கள், பாடநூல்கள், உரைநூல்கள், கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார்.

நாடகம்

தணிகை உலகநாதன் சிறார்களுக்காக மட்டுமல்லாமல், பொது வாசிப்புக்குரிய வகையில் பல நாடகங்களை எழுதினார். பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சிறார் மற்றும் முதியோர் கல்வி நாடகங்களை எழுதினார். இவர் எழுதிய ’கண்திறந்தது’, ’கணக்குத் தீர்ந்தது’ என்ற இரு நாடகங்களும், சென்னைத் தொலைக்காட்சியில், வயது வந்தோர் கல்விக்கான பகுதியில் ஒளிபரப்பப்பட்டன. சிறார்களைக் கொண்டே பல நாடகங்களை மேடையேற்றினார். நகைச்சுவை நாடகங்கள் பலவற்றை எழுதினார்.

அமைப்புப் பணிகள்

தணிகை உலகநாதன், மயிலை சிவமுத்துவுடன் இணைந்து குழந்தை இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். மாணவர்களிடையே எழுத்தார்வத்தையும், வாசிப்பார்வத்தையும் வளர்த்தார். மாணவ எழுத்தாளர்கள் சிலரை உருவாக்கினார். அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் பல வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்தார். நாமக்கல் கவிஞரின் பாடல்களைத் தொகுத்தாளித்தார். மயிலை சிவமுத்துவின் சிறார் பாடல்களைத் தொகுத்து ‘முத்துப் பாடல்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

பொறுப்பு

  • சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவர்
  • சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் துணைத் தலைவர்
  • சென்னை மாணவர் மன்றச் செயலாளர்
  • குழந்தை எழுத்தாளர் சங்க ஆலோசகர்

விருதுகள்

  • கவிமணி பட்டம்
  • கவிமாமணி பட்டம்
  • பாப்பாவின் பாவலர்
  • செந்தமிழ்ப் பாவலர்
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது (1974)

மறைவு

புலவர் தணிகை உலகநாதன், நவம்பர் 19, 1993 அன்று, தனது 72-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

புலவர் தணிகை உலகநாதன் பள்ளிப் பாட நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும், நாடகங்களையும் எழுதினார். அழ. வள்ளியப்பா உள்ளிட்ட பலரை ஊக்குவித்தார். சிறார்களுக்காக தணிகை உலகநாதன் எழுதிய பாடல்கள் இன்றளவும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று சிறார்களால் பயிலப்படுகின்றன. தமிழின் மூத்த மற்றும் முன்னோடி குழந்தை இலக்கியப் படைப்பாளியாகயும், நாடக ஆசிரியராகவும் புலவர் தணிகை உலகநாதன் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

பாடல்/கவிதை நூல்கள்
  • பாடும் பாப்பா
  • பூவின் விருந்து
  • மாணவர் தமிழ் விருந்து
கதை நூல்கள்
  • பூஞ்சோலை
  • தேன்சுவைக் கதைகள்
  • மறையாத மாமணிகள்
  • கனவு தந்த தீர்ப்பு (கதைப் பாடல்)
பள்ளிப் பாட நூல்கள்
  • சிறியவரும் பெரியவரே
  • எங்கள் உரைநூல்
  • வீணை வித்தகன்
  • தமிழ் கற்பிக்கும் முறைகள் (பி.கே. வைத்யநாதனுடன் இணைந்து எழுதியது)
உரை நூல்கள்
  • கந்தரனுபூதி தெளிவுரை
வாழ்க்கை வரலாறு
  • வீரத்துறவி விவேகானந்தர்
நாடகங்கள்
  • சிறுவர் நாடக விருந்து
  • நல்ல நாடகங்கள்
  • வளநாடும் இளங்கன்றும்
  • வாழையடி வாழை
  • எலிவேட்டை
  • பாம்பு பாம்பு
  • பூம்பூம் மாடு
  • வேலையும் கூலியும்
  • அன்றே சொன்னார்
  • யாருக்குப் பரிசு
  • எது அழகு
  • புத்தாண்டுப் பரிசு
  • அழகுப் போட்டி
  • தூண்டுகோல்
  • காலம் கடந்தவன்
  • செல்லப்பிள்ளை
  • பழைய புத்தகம்
  • தீமைக்கு நன்மை
  • மெய்ப்பொருள் நாயனார்
  • எங்கும் பொங்கல்
  • பராக்குப் பார்த்தவன்
  • கண்ணன் காட்டிய வழி
பதிப்பு
  • மருத்துவ மேதைகள் (ஆசிரியர்: வித்துவான் வெ. வேதாசலம்; பதிப்பாசிரியர்: புலவர் தணிகை உலகநாதன்)

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.