standardised

பொய்த்தேவு: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
No edit summary
Line 51: Line 51:
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்கள்]]


{{ready for review}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:01, 24 April 2022

பொய்த்தேவு

பொய்த்தேவு ( 1946) க.நா.சுப்ரமண்யம் எழுதிய நாவல் .நாவல் என்ற வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். சோமு முதலி என்ற பாத்திரத்தின் முழு வாழ்க்கையை முன்வைத்து, வாழ்க்கையின் சாராம்சம் என்னவென்று தேடும் படைப்பு இது. நிலச்சுவான்தார் முதல், விளிம்புநிலை மனிதர்களான பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் வரை பலரையும் பாத்திரமாக கொண்டு, அவர்களது வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், எப்படி ஒவ்வொரு விஷயம் பிரதான லட்சியமாய்த் தோன்றி வாழ்வை நிகழ்த்திச் செல்கிறது என்பதை கவித்துவத்துடன் சித்தரிக்கும் நாவல் இது.

எழுத்து, பதிப்பு

தமிழ் இலக்கியத்தின் சிறந்த விமர்சகர் என கருதப்படும் எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய இரண்டாவது நாவல் இது. இந்த நாவல் பற்றி தன்னுடைய முகவுரையில், ‘அத்தேவர் தேவரவர் தேவர் என்றிங்ஙண் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே கற்களை’ என்ற மாணிக்கவாசகரின் 'திருவாசகம்' வரிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார், அவருடைய நாவலுக்கு தலைப்பே அதில் வரும் 'பொய்த்தேவு' என்கிற சொல் தான். 'இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. நாத்தழும்பேற நாத்திகம் பேசுகிறவனுக்குங்கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, தெய்வம் அவசியமாகத் தான் தோன்றுகிறது. மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது. இந்த விநாடியின் ஒரே தெய்வம் அடுத்த விநாடி பொய்த்துவிடுகிறது; பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.' என்று இத்தலைப்பை விளக்குகிறார்

இந்த நூலுக்கு க.நா.சு அவர்கள் எழுதிய சமர்ப்பணம் ’பொய்த்தேவு (1946) நாவலுக்குச் சிதம்பரத்திலிருந்து, விய ஆண்டு விஜயதசமி அன்று எழுதிய சமர்ப்பணம் கடவுளுடன் தொடர்புடையது. இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முணுக்கு முணுக்கென்று ஒரே விளக்கு. அதிக வெளிச்சம் தராமல் எரியும் கர்ப்ப கிருஹத்திலிருந்துகொண்டு என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்து வந்த சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்ளையாருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.’

எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம்

கதைச்சுருக்கம்

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் என்னும் சிற்றூரில், கருப்பன் என்ற ரவுடிக்கும், வள்ளியமைக்கும் பிறந்த சோமு முதலி, தனது வாழ்க்கையை தானே உருவாக்கி கொள்கிறான். சோழமன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் மணியோசைதான் சோமுவின் முதல் ஞாபகமாக பதிவாகிறது. கருப்பனின் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு அடித்து நொறுக்கபடும் கணத்தில், இந்த உலகம் பற்றிய வியப்பே சோமுவின் மனதில் இருக்கிறது. விவசாயம் செய்யும் குடியானவர்கள், பானை செய்யும் குயவர்கள், பிசாசு ஓட்டுபவர்கள், வாழைப்பழ கடை, பட்டாணி கடை என சாத்தனூரிலேயே பார்த்து தீராத அற்புதங்கள் சோமுவிற்கு உண்டு. அந்த அற்புதங்கள் வழியாக உலக அனுபவத்தை கண்டுகொள்ளும் சோமுவிற்கு பள்ளிகூடம் சென்று படிக்க ஆசை பிறக்கிறது.

தனது அம்மா வேலைப்பார்க்கும் அய்யமார் வீட்டு திண்ணையில் உட்காரவைக்கப்படும் சோமு, தானாகவே நடந்து உள்ளே சென்று, அங்கு கிடக்கும் துணியில் படுத்து தூங்கி, பிறகு புளியமிளாறால் எழுப்பப்பட்டு தீண்டாமையை கண்டுக் கொள்கிறான். ஊர் பெரிய மனிதர் ரங்காராவிடம் வேலைக்கு சேரும் சோமு, முதல் நாளே சாயவேட்டி வேண்டும் என்று சொல்லி அதை பெற்றுக் கொள்கிறான். பிறகு தனது அறிவுகூர்மை மற்றும் துணிச்சலினால், தன்னுடைய எஜமானனை, கொள்ளைக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றும் சோமு, பிரதி உபகாரமாக தன்னுடைய படிப்பாசையை நிறைவேற்றிக் கொள்கிறான்.  

கொஞ்சகொஞ்சமாக தான் பிறந்த மேட்டுத் தெருவின் சகல கீழ்மைகளிலிருந்தும் வெளியேவந்துவிட்டோம் என்று நினைக்கிற பொழுதில், குடியும், பெண் சகவாசமும் சோமுவை பிடித்துக் கொள்கிறது. தனது தந்தை கருப்பனை போலவே குடித்துவிட்டுவந்து மனைவியை அடித்து நொறுக்குகிறான். மனைவி இறந்தபின் பாப்பத்தியம்மாளை சேர்த்துக் கொள்கிறான். பிறகு ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியின் மூலம் தனது லட்சியமான மளிகைக்கடையை சாத்தனூரில் திறந்து மளிகை மெர்ச்செண்டு சோமு முதலியார் ஆகிறான். அங்கிருந்து தனது அடுத்த லட்சியமான பணத்தை நோக்கி பயணிக்கிறான். செல்லுமிடமெல்லாம் தனது வாக்கு சாதூர்யத்தாலும், வெறித்தனமான உழைப்பாலும் மேன்மேலும் உயர்ந்து கும்பகோணத்தில் மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிறான்.

ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியோ, அளவுகடந்த தானதர்மத்தாலும், பக்தியாலும் சொத்துக்களை இழந்து, மனைவியும் இறந்த பின்பு தஞ்சை சென்று பாலாம்பாள், கமலாம்பாள் என்னும்  சகோதரிகளிடம் சிக்கி கொள்கிறார். சம்பாமூர்த்தியை மீட்க செல்லும் சோமு முதலியார் அந்த பெண்களிடம் மாட்டிக் கொள்கிறார். சம்பாமுர்த்தி தூக்கத்திலிருந்து மீண்டவர் போல, மீண்டும் பாண்டுரங்கன் கோஷம் சொல்லி சாத்தனூருக்கு திரும்புகிறார்.

வணிகக் கூட்டமைப்பிற்கு தலைவராகி, நாட்டின் பல சூழ்நிலைகளையும் தமக்கு சாதகமாக்கி பணத்தை குவிக்கிறார் சோமு முதலியார். கும்பகோணத்திலேயே மிகப்பெரிய பங்களாவை கட்டி சாத்தனூரைவிட்டு வெளியேறுகிறார். ஏதேச்சையாக தனது பழைய வாத்தியார் சுப்ரமணிய அய்யரின் மகன் சாமாவை சந்திக்கிறார். இலட்சிய வேகமும், படிப்பும் கொண்ட சாமா, அவரை நிராகரிக்கிறான். அவனை எப்படியாவது தனது பங்களா திறப்புவிழாவிற்கு அழைப்பதன்மூலம் அவனது அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் சோமு முதலியார். எதை தனது வாழ்வின் லட்சியமாக, வெற்றியாக கொண்டிருக்கிறாரோ, எதை அடைந்துவிட்டோம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து மகிழ்கிறாரோ, அது சாமா போன்ற ஒருவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற உண்மை சோமு முதலியாரை குடைகிறது. சாம்பமூர்த்தி பாண்டுரங்கனை வழிபட சென்று, அவனது பாதங்களிலேயே உயிர் நீத்த செய்தி வாழ்வின் இன்னொரு கோணத்தை காட்டுகிறது.

தனது ஆசைநாயகிகளான பாலாம்பாள், கமலாம்பாள் சகோதரிகளிடம், தனது மகன் நடராஜன் கொஞ்சிகுலாவி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். மேட்டுத் தெரு கருப்பன், தன்னை விடாமல் தொடர்வதை உணர்ந்து கொள்கிறார். சிவன் கோயில் மணியோசை காதுகளில் ஒலிக்க தொடங்குகிறது. வாழ்வின் பொருள் என்னவென்று சோமு முதலியார் கண்டுக் கொள்கிறார். இறுதியில் சிறைச் சென்று மீண்டு, பண்டாரமாக மாறி சாலையில் இறக்கும் சோமு பண்டாரம் சொல்வதாக வருகிறது இந்த வரிகள். “இந்த உலகம் தோன்றியதில் இருந்து எவ்வளவு வினாடிகள் உண்டோ அவ்வளவு தெய்வங்கள் உண்டு. இனி பிறக்கபோகும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு தெய்வமுண்டு”

கதைமாந்தர்

  • சோமு முதலி - நாவலின் மைய பாத்திரம்
  • கருப்பன் - சோமு முதலியின் தந்தை, ரவுடி
  • நடராஜன் - சோமு முதலியின் மகன்
  • சாம்பாமூர்த்தி ராயர் - நிலச்சுவான்தார் ரங்காராவின் மருமகன்
  • சாமா - சோமு முதலியின் ஆசிரியர் சுப்ரமணிய அய்யரின் மகன்
  • பாலாம்பாள், கமலாம்பாள் - புகழ்ப் பெற்ற தாசிகள்
  • ரங்காச்சாரி - சோமு முதலியின் நண்பர்
  • கோமாளவல்லி - ரங்காச்சாரியின் மனைவி

இலக்கிய இடம், மதிப்பீடு

இந்த நாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், ’தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு. ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம். சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசாத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.’ என்று கூறுகிறார். தமிழின் முதல் பத்து நாவல்கள் வரிசையில் இந்த நாவலை வைக்கிறார் ஜெயமோகன்.

இந்த நாவல் குறித்து விமர்சனம் எழுதிய சி.சு செல்லப்பா அவர்கள், ’எனக்குத் தெரிந்தவரை இது சுயமான நாவல். உத்திவகையில், எழுதுகிற முறையில் மேல்நாட்டு செல்வாக்கும் இதில் காணமுடியலாம். அதன் விஷயம் உள்ளடக்கம் அர்த்தம் நம்முடையது தான். அதேபோல தமிழ் நாவல் இலக்கியத்தில் இது சிறந்து நிற்பது தான். பொய்த்தேவு இலக்கியத் தரமான தலைசிறந்த தமிழ் நாவல், பல உலக இலக்கிய சிறந்த நாவல்களை படிக்கிறபோது ஏற்படுகிற அநுபவம், திருப்தி கிடைக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் சிறந்த நூறு நாவல்கள் வரிசையில் பொய்த்தேவு நாவலை வைக்கிறார்.’மிக இயல்பான நடையில், மூன்றாம் மனிதர் சோமுவின் வாழ்வை சொல்லிச்செல்லும் தொனியில் கதை அமைந்துள்ளது. வாழ்க்கை மீதான தனது தரிசனத்தை, சோமுவின் வாழ்வின் மூலம் சொல்கிறார் க.நா.சு. ஒரு நாவலுக்குண்டான முழுமை இந்த வாழ்க்கை தரிசனத்தால் கூடிவந்துள்ளது. காவிரிக் கரை, அந்தக் கால தஞ்சை மண்ணின் சித்தரிப்புக்கள் என நாவல் சில பக்கங்களிலேயே நம்மை ஈர்த்துக்கொள்கிறது’.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.