first review completed

யவனராணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 29: Line 29:
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/chozhairvaralaru.pdf சோழர்கள் - ராசமாணிக்கனார், இணையநூலகம்]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/chozhairvaralaru.pdf சோழர்கள் - ராசமாணிக்கனார், இணையநூலகம்]


{{standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:16, 23 April 2022

யவனராணி
பூவழகி-லதா ஓவியம்
யவனராணி- லதா ஓவியம்

யவனராணி (1969) சாண்டில்யன் எழுதிய சரித்திர சாகச நாவல். சங்ககாலச் சோழர் வரலாற்றின் பின்னணியில் புனையப்பட்டது. கரிகால் பெருவளத்தான் இதன் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்று

எழுத்து, வெளியீடு

யவனநாணி சாண்டில்யனால் 1969- முதல் குமுதத்தில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி

இந்நாவல் சங்ககாலப் பின்னணியில் நிகழ்கிறது. சங்ககாலத்து மன்னர்களைப் பற்றி முதன்மைக் கல்வெட்டுச்சான்றுகள் ஏதுமில்லை. புறநாநூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட நூல்களின் குறிப்புகளைக் கொண்டே வரலாறு எழுதப்பட்டுள்ளது.

சங்ககால மன்னர்களில் கரிகாலன் என்பவரைப் பற்றி பாடல்களில் ஓரிருவரிக் குறிப்புகளே உள்ளன. அவை உதிரியாகவும் முன்பின் தொடர்பற்றவையாகவும் உள்ளன. யானையில் ஊர்பவன் (கரியை காலாக்கியவன்) எனும் பொருளில் கரிகாலன் என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம்.தீயில் கால் கருகியதனால் அப்பெயர் வந்தது எனன்றும் சில நூல்குறிப்புகளை வைத்துச் சொல்லப்படுகிறது. (இந்நாவலில் அந்த கதையே எடுத்தாளப்படுகிறது). பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்) பொருநராற்றுப்படை (முடத்தாமக் கண்ணியார்) போன்ற நூல்களில் காணப்படும் குறிப்புகள் ஒட்டுமொத்தமாக இவை.

கரிகாலனை அவன் எதிரிகள் சிறையிட்டனர், மதயானை வாரிக்குழியில் இருந்து தப்புவதுபோல அவன் தப்பிச்சென்று எதிரிகளை வென்றான். அவன் எதிரிகள் அவனுக்கு தீயிட்டனர். வெண்ணிப்பறந்தலை (பிற்காலத்தில் கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) என்னும் பொட்டல்காட்டில் தன் எதிரிகளை வென்றான். சேரமன்னன் பெருன்சேரலாதன் கரிகாலனிடம் தோற்று புறப்புண் நாண் வடக்கிருந்தான். இருங்கோவேள் தலைமையில் படையெடுத்துவந்த வேந்தர்களும் பதினொரு வேளிர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.

கே.என். சிவராஜ பிள்ளை சங்ககால கரிகாலர்கள் இரண்டுபேர் இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார். முதற் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இரண்டாம் கரிகாலனை முடத்தாமக் கண்ணியார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள் என்கிறார். கரிகால்சோழனின் காலம் பொ.மு. முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என பொதுவாக ஊகிக்கப்படுகிறது. திட்டவட்டமான ஆய்வுமுடிவுகள் எவையும் இல்லை.

கதைச்சுருக்கம்

இந்நாவலின் கதைத்தலைவன் சோழநாட்டின் படைத்தலைவன் இளஞ்செழியன் என்னும் கற்பனை கதாபாத்திரம். இளஞ்செழியனின் சாகசப்பயணமாகவே இந்நாவல் அமைந்துள்ளது. இளஞ்செழியன்பூம்புகார் நகரின் கடற்கரையில் யவனப் பெண் ஒருத்தி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு காப்பாற்றுகிறான். அவள் சோழநாட்டுக்கு அரசியாக முடிசூட்டப்பட்டு , சோழநாட்டை வெற்றிகொள்ளும்படி அனுப்பப்பட்ட யவனநாட்டு இளவரசி என தெரியவருகிறது. அவளுக்கு துணையாக யவனவீரன் டைபீரியஸ் வந்திருக்கிறான். இளஞ்செழியனின் காதலி பூவழகி.

அப்போது சோழநாடு ஆட்சிச்சிக்கலில் இருக்கிறது. சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி கொல்லப்பட்டு இளவரசர் திருமாவளவன் அவன் தாய்மாமன் இரும்பிடர்தலையாரால் காப்பாற்றப்பட்டு தலைமறைவாக இருக்க இளவரசனை கொல்ல சதி நடக்கிறது. திருமாவளவன் இருந்த மாளிகைக்கு வேளிர்கள் தீவைக்க கால் மட்டும் கருகிய நிலையில் திருமாவளவன் தப்பிச் செல்கிறான். பிரம்மானந்தர் என்னும் துறவி திருமாவளவனுக்கு உதவுகிறார். யவனராணி இளஞ்செழியன் மேல் காதல்கொண்டிருப்பதை அறிந்து டைபீரியஸ் இளஞ்செழியனை அடிமைக்கப்பலில் ஏற்றி அனுப்புகிறான். அவன் அங்கிருந்து தப்பி சாம்பிராணி நாடு சென்று அலிமா என்னும் அடிமைப்பெண் உதவியுடன் தப்பி திரும்பி வருகிறான்.

சோழநாட்டை கைப்பற்றியிருக்கும் இருங்கோவேள் அதை யவனர்களுக்கு அளிக்க முடிவுசெய்கிறான். திருமாவளவன் தன் மாமன் இரும்பிடர்த்தலையார் உதவியுடன் படைதிரட்டி வருகிறான். வெண்ணிப்பறந்தலை போரில் இருங்கோவேளை திருமாவளவன் வெல்கிறான். பூம்புகாரில் ஒரு ரதப்போட்டி நிகழ்கிறது. அதில் வெல்லும் திருமாவளவன் யவனர்களையும் போரில் வெல்கிறான். யவனராணியை டைபீரியஸ் ஈட்டி எறிந்துகொல்கிறான். டைபீரியஸை இளஞ்செழியன் கொல்கிறான். பூவழகியை இளஞ்செழியன் மணக்கிறான்.

இலக்கிய இடம்

மிகக்குறைவான செய்திகள் மட்டுமே கிடைக்கும் சங்ககாலப் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் உதிரியான இலக்கியச் செய்திகளைக் கொண்டு ஒரு கற்பனை நிலைத்தை உருவாக்குகிறது. பூம்புகாரில் யவனர்களின் மருவூர்ப்பாக்கம் அமைந்திருப்பது, நகர்காவலுக்கு யவனவீரர்கள் இருப்பது ஆகியவற்றை சிலப்பதிகாரம் பட்டினப்பாலை ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனை செய்கிறது. பூம்புகாரின் கோட்டைகள், யவனர்கள் உருவாக்கிய கைவிடுபடைகள் போன்றவற்றை பெருங்கதை போன்ற நூல்களை கொண்டு கற்பனை செய்கிறது. தொல்தமிழ் வாழ்க்கையை கற்பனையால் உருவாக்கும் முயற்சியில் இந்நாவல் ஒரு முக்கியமான நிகழ்வே. பிரிட்டிஷ் கடற்சாகசக் கதைகளின் அடிப்படையில் அன்றைய கடல்வணிகத்தின் சித்திரத்தையும் அளிக்கிறது. மிகைக்கற்பனையும் சாகசத்தன்மையும் கொண்ட இந்நாவல் பொதுவாசிப்புக்கு உரியது

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.