அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், செந்தூல், கோலாலம்பூர்: Difference between revisions
(Added First published date) |
(Corrected typo errors in article) |
||
Line 13: | Line 13: | ||
முருகனுக்குப் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று வெள்ளி ரத்தில் முருகப்பெருமான் லெபோ அம்பாங்கிலிருந்து புறப்பட்டுச் செந்தூல் நகரை வலம் வருகிறார். அதோடு, சஷ்டி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தைப்பூசத்திற்காக பத்துமலையை நோக்கிச் செல்லும் வெள்ளி ரதம் இம்முருகன் ஆலயத்தைக் கடந்தே செல்கிறது. அப்போது முருகனுக்குச் சிறப்பு பூசைகளும் தைப்பூசத்தன்று சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. சித்திரையில் வருடப் பிறப்பு சிறப்புப் பூசையும் திருநாவுக்கரசர் குருபூசையும், சித்திரா பௌர்ணமி சிறப்புப் பூசையும் செய்யப்படுகின்றன. வைகாசியில் விசாக தின சிறப்புப் பூசையும் திருஞானசம்பந்தர் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆனியில் மாணிக்கவாசகர் குருபூசை செய்யப்படுகின்றது. ஆடி மாதத்தில் ஆடிக்கார்த்திகைப் பூசையும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூசையும், புரட்டாசியில் நவராத்திரி பூசையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஐப்பசியில் தீபாவளி சிறப்புப் பூசையும், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகமும் கந்தர் சஷ்டி விழாவும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. கார்த்திகையில் திருக்கார்த்திகை சிறப்புப் பூசையும் சோம வாரப் பூசையும் நடைபெறுகின்றது. மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, தினசரி சிறப்புப் பூசை, லட்சார்ச்சனை பூர்த்தி ஆகியன செய்யப்படுகின்றன. தை மாதத்தில் பொங்கல் சிறப்புப் பூசையும், தைக்கார்த்திகை பூசையும் தைப்பூச சிறப்பு பூசையும் செய்யப்படுகின்றது. மாசியில் சிவராத்திரி சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. திருகார்த்திகை தினத்திலும் சோமவார சிறப்புப் பூசைகளின் போதும் மார்கழி மாதம் நடைபெறும் லட்சார்ச்சனை பூர்த்தியின் போதும் தைப்பூசம், தைக் கார்த்திகை நாட்களிலும் முருகப்பெருமானின் உட்பிரகாரத் திருவுலா நடைபெறுகிறது. | முருகனுக்குப் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று வெள்ளி ரத்தில் முருகப்பெருமான் லெபோ அம்பாங்கிலிருந்து புறப்பட்டுச் செந்தூல் நகரை வலம் வருகிறார். அதோடு, சஷ்டி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தைப்பூசத்திற்காக பத்துமலையை நோக்கிச் செல்லும் வெள்ளி ரதம் இம்முருகன் ஆலயத்தைக் கடந்தே செல்கிறது. அப்போது முருகனுக்குச் சிறப்பு பூசைகளும் தைப்பூசத்தன்று சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. சித்திரையில் வருடப் பிறப்பு சிறப்புப் பூசையும் திருநாவுக்கரசர் குருபூசையும், சித்திரா பௌர்ணமி சிறப்புப் பூசையும் செய்யப்படுகின்றன. வைகாசியில் விசாக தின சிறப்புப் பூசையும் திருஞானசம்பந்தர் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆனியில் மாணிக்கவாசகர் குருபூசை செய்யப்படுகின்றது. ஆடி மாதத்தில் ஆடிக்கார்த்திகைப் பூசையும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூசையும், புரட்டாசியில் நவராத்திரி பூசையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஐப்பசியில் தீபாவளி சிறப்புப் பூசையும், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகமும் கந்தர் சஷ்டி விழாவும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. கார்த்திகையில் திருக்கார்த்திகை சிறப்புப் பூசையும் சோம வாரப் பூசையும் நடைபெறுகின்றது. மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, தினசரி சிறப்புப் பூசை, லட்சார்ச்சனை பூர்த்தி ஆகியன செய்யப்படுகின்றன. தை மாதத்தில் பொங்கல் சிறப்புப் பூசையும், தைக்கார்த்திகை பூசையும் தைப்பூச சிறப்பு பூசையும் செய்யப்படுகின்றது. மாசியில் சிவராத்திரி சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. திருகார்த்திகை தினத்திலும் சோமவார சிறப்புப் பூசைகளின் போதும் மார்கழி மாதம் நடைபெறும் லட்சார்ச்சனை பூர்த்தியின் போதும் தைப்பூசம், தைக் கார்த்திகை நாட்களிலும் முருகப்பெருமானின் உட்பிரகாரத் திருவுலா நடைபெறுகிறது. | ||
==ஆலய வெள்ளி ரதம்== | ==ஆலய வெள்ளி ரதம்== | ||
ஆலயத்திற்கு சொந்தமாக வெள்ளி ரதம் ஒன்று உள்ளது. 1924- | ஆலயத்திற்கு சொந்தமாக வெள்ளி ரதம் ஒன்று உள்ளது. 1924-ம் ஆண்டு இதன் முதல் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த ரதம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பிப்ரவரி 1, 2009-ல் மீண்டும் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது. | ||
==ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி== | ==ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி== | ||
ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி 1963-ம் ஆண்டு செட்டியார் கூட்டமைப்புக் கழகத்தின் முயற்சியால் அரசாங்கத்தின் துணை ஆதரவோடு உருவாக்கப்பட்டதாகும். இப்பள்ளிக்கூடத்தின் நிலம் செட்டியார் கழகத்திற்கு சொந்தமானது. ஆலயத்திற்கு வலது புறத்தில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க வேண்டும் என்ற முயற்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதால், இப்பள்ளித் தொடக்கத்தில் ஈப்போ சாலை ஆங்கிலப்பள்ளி (Ipoh Road English School) என்ற பெயரில் இயங்கியுள்ளது. பின்னர், செட்டியார் பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயரைப் பள்ளிக்கு வைக்க முடியாது என்ற காரணத்தினால் அரசாங்கம் இப்பெயரைத் தடைச் செய்துள்ளது. அதன் காரணமாக ஸ்ரீ தண்டாயுதபாணி ஆங்கிலப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்ட இப்பள்ளி, மீண்டும் ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டோடு இப்பள்ளி மூடப்பட்டது. | ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி 1963-ம் ஆண்டு செட்டியார் கூட்டமைப்புக் கழகத்தின் முயற்சியால் அரசாங்கத்தின் துணை ஆதரவோடு உருவாக்கப்பட்டதாகும். இப்பள்ளிக்கூடத்தின் நிலம் செட்டியார் கழகத்திற்கு சொந்தமானது. ஆலயத்திற்கு வலது புறத்தில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க வேண்டும் என்ற முயற்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதால், இப்பள்ளித் தொடக்கத்தில் ஈப்போ சாலை ஆங்கிலப்பள்ளி (Ipoh Road English School) என்ற பெயரில் இயங்கியுள்ளது. பின்னர், செட்டியார் பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயரைப் பள்ளிக்கு வைக்க முடியாது என்ற காரணத்தினால் அரசாங்கம் இப்பெயரைத் தடைச் செய்துள்ளது. அதன் காரணமாக ஸ்ரீ தண்டாயுதபாணி ஆங்கிலப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்ட இப்பள்ளி, மீண்டும் ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டோடு இப்பள்ளி மூடப்பட்டது. |
Latest revision as of 12:42, 12 July 2024
மலேசியா, செந்தூல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது. ஆலயமாக மட்டுமல்லாமல் பண்பாட்டு செயல்பாடுகளுக்கும் கோலாலம்பூரில் களமாக இயங்கி வருகிறது.
ஆலய வரலாறு
நகரத்தார் சமூகத்தினரின் முயற்சியால் 1893-ம் ஆண்டு செந்தூல் தண்டாயுதபாணி ஆலயம் உருவாக்கப்பட்டது. இவ்வாலயத்தின் முதல் குடமுழுக்கு 1902-ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மீட்சியின்போது, ஆலய நிர்வாகம் மீண்டும் அக்டோபர் 31, 1961-ல் ஆலயத்திற்குக் குடமுழுக்குச் செய்தது. ஆலயத்தின் நான்காம் குடமுழுக்கு நவம்பர் 11, 1971-லும் ஐந்தாம் குடமுழுக்கு ஜூன் 8, 1984-லும், ஆறாம் குடமுழுக்கு பிப்ரவரி 9, 1998-லும் செய்யப்பட்டது. ஆலயத்தின் ஆறாம் குடமுழுக்கு திரு. அ. க. அ. சிதம்பர செட்டியாரின் ஆதரவில் நடைபெற்றுள்ளது. இக்குடமுழுக்கின் போது ஆலயம் முழுவதும் சீரமைப்புச் செய்யப்பெற்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகளால் ஆலயத்தின் கோபுரம் அமைக்கப்பட்டது.
முருகப்பெருமானின் தோற்றம்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறான். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையைத் தொடை மீது வைத்தபடி இருக்கும்படியாக அவனது திருவுருவம் அமைந்துள்ளது. முருகனின் வலது திருவடிக்கு அருகில் வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் உற்சவத் திருமேனி நாற்கரங்களோடு அமைந்துள்ளது. முன்னிரு கரங்களில் அபய வரதமும் பின்னிரு கைகளில் ஆயுதங்களும் தாங்கியிருக்கும்படி இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பு கோபுரத்தின் மேலே முருகன் வேல் மற்றும் மயிலோடு அபயவரதம் காட்டி நிற்கும் சுதை சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. அதனைக் கடந்து ஆலயத்தின் முகப்பு மண்டபம் அமைந்துள்ளது. முகப்பு மண்டபத்தின் மேல் சுவற்றில் தெய்வத் திருவுருவங்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேல் சுவற்றின் இருபுறத்திலும் முருகனின் துதிப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் வலது புறத்தில் விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. விநாயகரின் சந்நதிக்கு அருகில் அரசமரம் உள்ளது. அரசமரத்திற்கு முன்பு நாகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. முகப்பு மண்டபத்தின் இடது புறத்தில் மயில் கூண்டு உள்ளது. ஆலயப் பிரதான வாயிலுக்கு இருபுறமும் திண்ணை அமைக்கப்பட்டுள்ளது. வலது திண்ணைக்கு மேலே கவியரசு கண்ணதாசன் முருகனுக்காக எழுதிக் கொடுத்த கவிதை வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நடுவே முருகப்பெருமானின் கருவறை அமைந்துள்ளது. கருவறைக்கு நேரே மயில்வாகனமும் பலிபீடமும் வைக்கப்பட்டுள்ளன. மயில் வாகனத்திற்கு முன்பு வேல் ஒன்று உள்ளது. கருவறை முகப்பிற்கு மேலே விநாயகர், முருகன் மற்றும் லஷ்மியின் சுதை திருவுருவங்கள் உள்ளன. அதற்கு கீழே கருவறை வாயிலை திருவாச்சி ஒன்று அலங்கரிக்கிறது. மயில் வாகனத்திற்கு மேலே சுற்றி தெய்வத் திருவுருவங்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய முருகனின் மேல் சுவர் ஓவியமும் உள்ளது.முருகனின் கருவறைக்கு நுழையும் பகுதிக்கு முன்பகுதியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது. கருவறைக்கு வலது புறத்தில் சூல வடிவில் இடும்பனுக்குச் சந்நதி உள்ளது. கருவறைக்குப் பின்புறத்தில் விநாயகருக்கு மற்றுமொரு சந்நதி உள்ளது. கருவறைக்கு நேர் பின்னால் கோஷ்டத்தில் தண்டபாணியின் சுதை சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்பு மயில் வாகனத்திற்கு வலது புறத்தில் தேங்காய் உடைக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நேரே அறுபடை வீடுகளின் ஒளிப்படங்களும் எட்டு லஷ்மிகளின் ஓவியங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. இடது புறத்தில் மரத்தால் ஆன கதவொன்று உள்ளது. அதற்கடுத்து ஆலய அலுவலகம் உள்ளது. ஆலய திருசுற்றிற்கு வெளியே மடப்பள்ளியும் ஆலயப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளும் உள்ளன.
ஆலயத் திருவிழா
முருகனுக்குப் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று வெள்ளி ரத்தில் முருகப்பெருமான் லெபோ அம்பாங்கிலிருந்து புறப்பட்டுச் செந்தூல் நகரை வலம் வருகிறார். அதோடு, சஷ்டி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தைப்பூசத்திற்காக பத்துமலையை நோக்கிச் செல்லும் வெள்ளி ரதம் இம்முருகன் ஆலயத்தைக் கடந்தே செல்கிறது. அப்போது முருகனுக்குச் சிறப்பு பூசைகளும் தைப்பூசத்தன்று சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. சித்திரையில் வருடப் பிறப்பு சிறப்புப் பூசையும் திருநாவுக்கரசர் குருபூசையும், சித்திரா பௌர்ணமி சிறப்புப் பூசையும் செய்யப்படுகின்றன. வைகாசியில் விசாக தின சிறப்புப் பூசையும் திருஞானசம்பந்தர் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆனியில் மாணிக்கவாசகர் குருபூசை செய்யப்படுகின்றது. ஆடி மாதத்தில் ஆடிக்கார்த்திகைப் பூசையும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசையும் செய்யப்படுகின்றன. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூசையும், புரட்டாசியில் நவராத்திரி பூசையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஐப்பசியில் தீபாவளி சிறப்புப் பூசையும், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகமும் கந்தர் சஷ்டி விழாவும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. கார்த்திகையில் திருக்கார்த்திகை சிறப்புப் பூசையும் சோம வாரப் பூசையும் நடைபெறுகின்றது. மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, தினசரி சிறப்புப் பூசை, லட்சார்ச்சனை பூர்த்தி ஆகியன செய்யப்படுகின்றன. தை மாதத்தில் பொங்கல் சிறப்புப் பூசையும், தைக்கார்த்திகை பூசையும் தைப்பூச சிறப்பு பூசையும் செய்யப்படுகின்றது. மாசியில் சிவராத்திரி சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. திருகார்த்திகை தினத்திலும் சோமவார சிறப்புப் பூசைகளின் போதும் மார்கழி மாதம் நடைபெறும் லட்சார்ச்சனை பூர்த்தியின் போதும் தைப்பூசம், தைக் கார்த்திகை நாட்களிலும் முருகப்பெருமானின் உட்பிரகாரத் திருவுலா நடைபெறுகிறது.
ஆலய வெள்ளி ரதம்
ஆலயத்திற்கு சொந்தமாக வெள்ளி ரதம் ஒன்று உள்ளது. 1924-ம் ஆண்டு இதன் முதல் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த ரதம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பிப்ரவரி 1, 2009-ல் மீண்டும் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி
ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளி 1963-ம் ஆண்டு செட்டியார் கூட்டமைப்புக் கழகத்தின் முயற்சியால் அரசாங்கத்தின் துணை ஆதரவோடு உருவாக்கப்பட்டதாகும். இப்பள்ளிக்கூடத்தின் நிலம் செட்டியார் கழகத்திற்கு சொந்தமானது. ஆலயத்திற்கு வலது புறத்தில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க வேண்டும் என்ற முயற்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதால், இப்பள்ளித் தொடக்கத்தில் ஈப்போ சாலை ஆங்கிலப்பள்ளி (Ipoh Road English School) என்ற பெயரில் இயங்கியுள்ளது. பின்னர், செட்டியார் பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயரைப் பள்ளிக்கு வைக்க முடியாது என்ற காரணத்தினால் அரசாங்கம் இப்பெயரைத் தடைச் செய்துள்ளது. அதன் காரணமாக ஸ்ரீ தண்டாயுதபாணி ஆங்கிலப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்ட இப்பள்ளி, மீண்டும் ஸ்ரீ தண்டாயுதபாணி தேசியப்பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டோடு இப்பள்ளி மூடப்பட்டது.
செட்டியார்கள் மண்டபம்
1920-ம் ஆண்டு செட்டியார்கள் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வலது புறத்தில் மண்டபம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி
Sri, Dhandayuthapani Temple, Jalan Sultan Azlan Shah, Jalan Ipoh, 51200 Kuala Lumpur, Selangor
ஆலய பூசை நேரம்
காலை 6.30 தொடங்கி மதியம் 12.00 வரை
மாலை 3.30 தொடங்கி இரவு 8.30 வரை
ஏனைய தகவல்கள்
கவிஞர் கண்ணதாசன் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு கவிதையும் புனைந்து கொடுத்துள்ளார். சொ.சொ.மீ சுந்தரம் அவர்களின் சொற்பொழிவும் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது. 1946-ம் ஆண்டு செட்டியார்கள் மண்டபத்தில் மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஐந்தாம் திகதி வரை அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றுள்ளது.
கண்ணதாசன் கவிதை
நலம்யாவும் வீடு வரும் குறையாத செல்வ மிகும்
ஆலோலம் பாடுகின்ற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
ஆதார மான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யாள வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
விளைவாக நின்ற பெருமான்
கோலாலம்பூரில் வளர் கோன் தண்டபாணி – இவன்
கோவில் கொண் டாடு மனமே!
கூற்றேதும் வாராது கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே!
“ஓ” மென்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
நடவாது வேல னிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
நலம்யாவும் வீடு வருமே!
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம்பூர் செந்தூல்
கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தண்டா யுதத்தானை
குறையாத செல்வ மிகுமே!
மேற்கோள்
- கௌமாரம்.(2017-2030).ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்செந்தூல் (KL) கூட்டரசு மாநிலம் மலேசியா. கௌமாரம்.
- கோலாலம்பூர் நகரத்தார் ஆருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வரலாற்று குறிப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Jan-2023, 07:57:04 IST