under review

புலவராற்றுப்படை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 29: Line 29:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|05-Nov-2023, 09:17:51 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:15, 13 June 2024

புலவரை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் புலவராற்றுப்படை (புலவர் ஆற்றுப்படை) என்னும் புறத்துறை. புலமை நிறைந்த பாடல்களைப் பாடுவதால் புலவரது வாய் முதுவாய். வள்ளல்களிடம் இரந்து வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடித்துவந்தமையால் அவன் இரவலன். எனவே புலவனை முதுவாய் இரவலன் என்பது சங்க கால வழக்கு. முதுவாய் இரவலனை வள்ளல் ஒருவரிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் புலவராற்றுப்படை.

புலவராற்றுப்படை ஆற்றுப்படை நூல்களில் ஒன்று.

இலக்கணம்

கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆற்றுப்படை பற்றி மட்டும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (ஆற்றுப்படை). கடவுளைத் தொழும்படி புலவனை ஆற்றுப்படுத்துவது புலவராற்றுப்படை என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது[1]. திருமுருகாற்றுப்படை நூலில் முதுவாய் இரவலன்(புலவன்) முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். இதனால் இந்த நூலைப் புலவராற்றுப்படை எனவும் வழங்குகின்றனர்.

பாடல்கள்

புலவர் ஆற்றுப்படை என்னும் துறையில் புறநானூற்றுத் தொகுப்பில் மூன்று பாடல்கள்[2] உள்ளன.

  • பொய்கையார் என்னும் புலவர் தன் கண்ணில் பட்ட முதுவாய் இரவலனைத் தொண்டி அரசன் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இரண்டுக்கு இத் துறையின் பெயர் தரப்பட்டுள்ளது[3][4].
  • பரணர் புலவன் ஒருவனை ’இரவல’ என விளித்து அரசன் பேகனிடம் ஆற்றுப்படுத்துகிறார். போர்த்திக்கொள்ளாது, உடுத்திக்கொள்ளாது என்பது தெரிந்திருந்தும் பேகன் மயிலுக்குப் போர்வையை அளித்தவன். எனவே அவனிடம் செல் என்று சொல்லிப் புலவரை அவர் ஆற்றுப்படுத்துகிறார்[5]. இப்பாடல் பாணாற்றுப்படையிலும் வைக்கப் படுகிறது.

பிற்கால ஆற்றுப்படை நூல்களில் ஒன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை. இது நாகூர் வா . குலாம் காதிறு நாவலர் எனும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது. பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் பரிசு பெற்ற புலவர் ஒருவர் பரிசில் தேடிக்கொண்டிருக்கும் புலவரொருவரை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு ஆற்றுப்படுத்துவதாய் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல்களுள் வழி கூறுவோர் நடைப்பயணத்திற்கான வழியைக் கூறுவர். நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் தான் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ப புகைவண்டியில் செல்லுமாறு கூறுகிறார்[6].

எடுத்துக்காட்டு

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்,
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!

பொருள்: சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்? தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. (அவன் செல்லுமிடங்களில் பறப்பவை போர்க்களத்தில் புலால் உண்ணும் பறவைகள்)பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.

திணை: பாடாண் - ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: புலவராற்றுப்படை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும் புலவனை ஆற்றுப் படுத்தன்று

    - புறப்பொருள் வெண்பாமாலை - 230

  2. புறநானூறு 48, 49, 141
  3. புறநானூறு 48
  4. புறநானூறு 49
  5. புறநானூறு 141
  6. மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை - நாகூர் வா . குலாம் காதிறு நாவலர்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2023, 09:17:51 IST