under review

ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 68: Line 68:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|02-Dec-2022, 15:57:38 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]

Latest revision as of 13:49, 13 June 2024

ம.வே.திருஞானசம்பந்தம் பிள்ளை

ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளை (சம்பந்தர்) (1885 - 1955) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். ஆறுமுகநாவலர் மரபில் வந்த சைவ சமய அறிஞர். சைவசமய பார்வையுடன் கதை கட்டுரைகளை எழுதினார். இதழாளர். ஈழ இலக்கிய முன்னோடி.

பிறப்பு, கல்வி

திருஞானசம்பந்தபிள்ளை தமிழறிஞர் ம.க. வேற்பிள்ளையின் மகனாக யாழ்ப்பாணம் மேலைப்புலோலியில் 1885-ல் பிறந்தார். (மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திரம்)[1] இவருடைய தந்தை சைவ உரையாசிரியர். இவருடைய தாய்மாமன் சு.சிவபாதசுந்தரம் பிள்ளை சைவ அறிஞர். இவருடைய உடன்பிறந்தவர்கள் வழக்கறிஞர் வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம.வே. மகாலிங்கசிவம் ஆகியோர்.

ஆரம்பக் கல்வியை புலோலியில் வேலாயுதப் புலவர் என்பவர் தொடங்கிய பள்ளியில் பயின்றார். தந்தையிடம் கல்வி கற்ற திருஞானசம்பந்த பிள்ளை தந்தை சென்னைக்கு நாவலர் பள்ளி ஆசிரியராகச் சென்றுவிடவே தன் தாய்மாமனாகிய சைவ அறிஞர் சிவபாதசுந்தரத்திடம் தமிழ் கற்றார்.

தனிவாழ்க்கை

தன் தந்தை தொடங்கிய மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1912-ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இதழியல்

உலகம் பலவிதம்

திருஞானசம்பந்தப்பிள்ளை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் நடத்தப்பட்ட இந்து சாதனம் இதழின் துணைஆசிரியராக 1912 முதல் பணியாற்றினார். ஆறுமுகநாவலர் சரிதத்தை எழுதியவரான த. கைலாசப்பிள்ளையால் நாவலரது பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டு செப்டெம்பர் 11, 1889 முதல் வெளிவந்த இதழ் இந்து சாதனம். Hindu Organ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. 1920-ல் அதன் ஆசிரியராக இருந்த கைலாசபிள்ளை மறையவே திருஞானசம்பந்தப் பிள்ளை அதன் ஆசிரியராக 1921 பொறுப்பேற்றார். 1951 வரை அதன் ஆசிரியராக இருந்தார்.

நாடக வாழ்க்கை

சரஸ்வதி விலாச சபை (1914) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக சபையில் நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார். இவருடன் செ.இராச நாயகம் ஆகியோர் சேர்ந்து பணியாற்றினர். உருக்மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், அரிச்சந்திரன், சீதா கல்யாணம். ஆரணியகாண்டம் ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

இந்து சாதனம் இதழில் ’உலகம் பலவிதம்’ என்ற நெடுந்தொடரை எழுதினார். மாணவர்களுக்கான தமிழ்ப்பாட நூல்களாக 'பாலபாடங்கள்’ என்ற நூல்தொகையை பதிப்பித்தார். அரிச்சந்திர புராணம் (மயான காண்டம்), நளவெண்பா, கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என பழைய நூல்களுக்கு உரை எழுதினார். மூன்று நாவல்களை எழுதினார். கோபால நேசரத்தினம், துரைரத்தினம் நேசமணி, காசிநாதன் நேசமலர் மூன்றுமே சைவ சமயப்பிரச்சார நோக்கம் கொண்டவை

ம.வெ.திருஞானசம்பந்தப் பிள்ளையின் நடை நகைச்சுவையும் அங்கதமும் கொண்டது. சான்று

புளீச்சற் கள்ளையும், ஈரலையறுக்குஞ் சாராயத்தையும் விட்டு ஜின்னையல்லவோ குடிக்க வேண்டும். அது அதிகம் மஸ்து உள்ளதானாலும் குடிவகையல்ல. எல்லா வியாதிகளுக்கும் மருந்து தம்பீ. கொஞ்சம் விலை கூடத்தான். அதுக்கென்ன செய்கிறது" என்றார். அவருடன் இன்னுங் கொஞ்ச நேரந் தாமதித்துப் பேசினால் அவர் நம்மையும் மதுபானஞ் செய்யும்படி தூண்டி விடுவார் போலிருந்தமையினால் நான் சரி அண்ணே போய் வாருமென்று சொல்லிக் கடத்தி விட்டேன் என ஒரு வித்தியாசாலை உபாத்தியாயர் கூறினார்." [உலகம் பலவிதம்; 1922 டிசம்பர் 14 பக்கம் 97][2]

வாழ்க்கை வரலாறு

ம.பா. மகாலிங்கசிவம் எழுதிய ம.வே.திருஞானசம்பந்தம் பிள்ளை வாழ்க்கை வரலாறு கொழும்பு தமிழ்ச்சங்கத்தால் 2007-ல் வெளியிடப்பட்டது.

இலக்கிய இடம்

யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவசமய புத்தெழுச்சியின் மூன்றாவது தலைமுறை என திருஞான சம்பந்தர் கருதப்படுகிறார். ஆறுமுகநாவலரின் பெறாமைந்தரும் மாணவருமான த.கைலாச பிள்ளையின் மாணவர். சைவ சமயக்கருத்துக்களை நூல்பதிப்புகள், இதழியல் கட்டுரைகள், நாவல்கள் வழியாக முன்னெடுத்தவர். ஈழ இலக்கியத்தின் முன்னோடி புனைகதையாசிரியராகவும் கருதப்படுகிறார். அவருடைய நகைச்சுவையும் அங்கதமும் கொண்ட நடை ஈழ இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று.

படைப்புகள்

சிறுகதைகள்
  • ஓம் நான் சொல்லுகிறேன் (இந்து சாதனம் பொன்விழா மலர்), 1914
  • சாந்தநாயகி (இந்து சாதனம் வைரவிழா மலர்), 1939
நாவல்கள்
பதிப்புநூல்கள்
  • தொகுப்புப் பதிப்புகள்
  • சோமவார விரத மான்மியம், 1929
  • செந்தமிழ்வாசக சிந்தாமணி, 1935
  • சமயக்குரவர் சந்தானக்குரவர் சரித்திர சுருக்கம், 1948
  • பிரதோஷ விரத மான்மியம், 1951
  • தேவார திருவாசகத் திரட்டுl 1955
  • கலாமஞ்சரி
  • சிவராத்திரி விரத மான்மியம்
உரைப்பதிப்புகள்
  • அரிச்சந்திர புராணம் மயான காண்டம், 1929
  • திருக்குறள் முதல் 20 அதிகாரங்கள், 1931
  • கதிர்காமவேலன் திருவருட்பா, 1931
  • வில்லி பாரதம் இராசூயச் சருக்கம், 1931
  • கல்வளை அந்தாதி, 1934
  • மயூரகிரி புராணம், 1937
  • நமச்சிவாயமாலை, 1949
  • புட்பயாத்திரைச்சுருக்கம், 1952
  • நளவெண்பா கலிநீங்கு காண்டம்
  • கிருஷ்ணன் தூது சருக்கம்
  • திருக்குறள் 23-34 அதிகாரங்கள்
  • ஈழமண்டல சதகம் ம.சபாபதிப்பிள்ளை உரை
  • ஈழமண்டல சதகம் ம.க.வேற்பிள்ளை உரை
  • புலியூர் அந்தாதி
  • திருவாதவூரடிகள் புராணம் விருத்தியுரை, 1915
  • திருவாதவூரடிகள் புராணம் பொழிப்புரை, 1947
சுருக்கப்பதிப்பு
  • மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திர சுருக்கம், 1954
  • செந்தமிழ் மொழிவளம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Dec-2022, 15:57:38 IST