being created

ஜார்ஜ் ஜோசப் (வழக்கறிஞர்): Difference between revisions

From Tamil Wiki
Line 68: Line 68:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://kalirajathangamani.blogspot.com/2022/ ஜார்ஜ் ஜோசப்: புகழ்பெற்ற வழக்கறிஞர்: kalirajathangaman]
* [https://kalirajathangamani.blogspot.com/2022/ ஜார்ஜ் ஜோசப்: புகழ்பெற்ற வழக்கறிஞர்: kalirajathangaman]
* மதுரையில் வாழ்ந்த ரோசாப்பூ துரை - maduraivaasagan
* [https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?3191 George Joseph - amritmahotsa]
* [https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?3191 George Joseph - amritmahotsa]
* [https://www.vikatan.com/government-and-politics/159179-freedom-fighter-george-joseph-birthday மதுரை மக்கள் கொண்டாடும் ரோசாப்பூ துரை - ஒரு நிஜ நாயகனின் கதை!]
* [https://www.vikatan.com/government-and-politics/159179-freedom-fighter-george-joseph-birthday மதுரை மக்கள் கொண்டாடும் ரோசாப்பூ துரை - ஒரு நிஜ நாயகனின் கதை!]

Revision as of 15:46, 21 May 2024

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் (ரோசாப்பூ துரை) (ஜூன் 5, 1887 – மார்ச் 5, 1938) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வழக்கறிஞர், இதழாசிரியர், தொழிற்சங்கவாதி. வைக்கம் போராட்டத்தில் முன்னின்றவர்களில் ஒருவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதாடியவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கள்ளர்கள் இவருடைய பெயரை இன்றளவும் தங்கள் குழந்தைகளுக்கு இடுவதோடு அவருடைய இறந்த நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

பிறப்பு, கல்வி

ஜார்ஜ் ஜோசப் கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கனூரில் ஜூன் 5, 1887-ல் பிறந்தார். சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் பிறந்தவர் பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு மாறினார். கேரளாவில் பள்ளிக் கல்வியை முடித்தார். 1903-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். லண்டன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். லண்டனில் உள்ள மிடில் டெம்பிலில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1908-ல் இந்தியா வந்தார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் தர முனைந்த பதவிகளைத் துறந்தார்.

தனிவாழ்க்கை

ஜார்ஜ் ஜோசப் சூசன்னாவை மணந்தார். சூசன்னாவின் குடும்பமும் ஆங்கிலேய அரசில் உயர்பதவியில் இருந்தது. அவர்கள் வேண்டிக் கொண்ட போதும் அரசாங்கப் பதவிகளைத் தவிர்த்தார். இருவரும் 1910-ல் மெட்ராஸ் சென்றனர். அங்கு அவர் தென்னிந்திய அஞ்சலுக்கு கட்டுரைகள் எழுதினார். 1909-ல் மதுரைக்குக் குடியேறினார். அங்கு வழக்கறிஞராகவும், இதழாசிரியராகவும் இருந்தார். 1920-ல் தேசிய அளவில் அரசியலில் சேர மதுரையை விட்டு வெளியேறினார்.

பணி

குற்றவியல் வழக்கறிஞரும் தனது நண்பருமான கோபால மேனன் மூலம் மதுரைக்கு வந்து 1910-ல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். ஒரு சில ஆண்டுகளில் ஜோசப் பிரபல வழக்கறிஞரும் இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான எர்ட்லி நார்டனை முன்மாதிரியாகக் கொண்டு மதுரையில் முன்னணி குற்றவியல் வழக்கறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

குற்றப்பழங்குடியினர் சட்டம்

கள்ளர், மறவர் போன்ற சாதிகளை குற்றப்பரம்பரை என்று வகைப்படுத்திய குற்றப் பழங்குடியினர் சட்டத்தை (CTA, 1911) ஜார்ஜ் ஜோசப் எதிர்த்தார். 1919-20ல் 1,400 கள்ளர்கள் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதன் மூலம் குற்றவியல் பழங்குடியினரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 10(a)-ன் கீழ் அவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை காவல் நிலையத்தில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கள்ளர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது மற்றும் அவர்களின் பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டது. ஏப்ரல், 1920-ல் பிறமலைக் கள்ளர்கள் மதுரையில் கலவரம் செய்தனர். ஜார்ஜ் ஜோசப் நீதிமன்றங்களில் அவர்களுக்காகப் போராடினார். செய்தித்தாள்களில் விரிவாக எழுதினார். பிரிவு 10(a) வருங்காலத்தில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

விருதுநகர் சதிவழக்கு

1933-ல் ‘விருதுநகர் சதி வழக்கில்’ காமராஜரை சேர்த்தபோது அவர் சார்பாக ஜோசப் மற்றும் வரதராஜுலு நாயுடு ஆகியோர் வாதிட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபித்தனர்.

விடுதலைப் போராட்டம்

லண்டனில் தங்கியிருந்த போது இந்தியப் புரட்சியாளர்கள் மற்றும் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்பு கொண்டார். 1925 முதல் 1938 வரை ஜோசப் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் தன்னைத் தொடர்பு படுத்தி கொண்டார்.

ரெளலட் சட்டம்

மார்ச் 29, 1919 அன்று மதுரையில் காந்திக்காக ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் ஜோசப் முக்கிய பங்கு வகித்தார். அதில் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். ரெளலட் சட்டத்தை எதிர்க்கும் செயலாக அவர்களுக்கு ‘சத்யாகிரக உறுதிமொழி’ வழங்கப்பட்டது. ஏப்ரல் 6, 1919-ல் ஹர்த்தால் கடைப்பிடிக்க மதுரை மக்கள் முழு அளவில் தயாராகிவிட்டனர் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 5, 1919-ல் ஜோசப் மதுரையில் ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தார். கூட்டத்தில், பணியை நிறுத்திவிட்டு நாளை மறுநாள் கடைகளை அடைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது ஒரு ஆங்கிலேயருக்கு எதிரான பெரிய கிளர்ச்சி நடவடிக்கையாக நடைபெற்றது. அனைத்து கடைகளும் ஏப்ரல் 6, 1919 அன்று மூடப்பட்டன. ஜோசப் அந்த தருணத்திலிருந்து மதுரையில் காந்தியின் நம்பகமான ஆதரவாளராக ஆனார். 1919-ல் சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் பேசினார்.

வைக்கம் போராட்டம்

காந்தியின் விருப்பத்திற்கு மாறாக, மார்ச் 1924 இல் வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கோவில் நுழைவு இந்துக்களின் பிரச்சனை என்றும் அதை அவர்களே தீர்க்கட்டும் என்றும் காந்தி ஏப்ரல் 6, 1924 அன்று கடிதம் எழுதினார். ஜோசப், வைக்கம் போராட்டத்தை கோயில் நுழைவுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இயக்கமாகப் பார்க்காமல் ‘தீண்டத்தகாதவர்களுக்கு’ பொது இடத்தில் சுதந்திரமாக நுழைவதற்கான அடிப்படை குடிமை உரிமையை மறுப்பதாக உணர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். ஏப்ரல் 11, 1924 அன்று ஜார்ஜ் ஜோசப் கைதுசெய்யப்பட்டு ஆறுமாதம் சிறைலடைக்கப்பட்டார்.

பிற போராட்டங்கள்
  • 1918-ல் அன்னிபெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் கல்லூரி மணவர்கள், இளைஞர்கள் சேரக் கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்தரவு போட்டபோது அதை எதிர்த்துப் போராடினார்.
  • மதுரையில் நூற்பாலைகளை ஆங்கிலேயர் நிறுவிய நேரத்தில் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சங்கங்களை நிறுவி, கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
  • 1920-ல் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டினார்.
  • ஜனவரி, 1925-ல் ஜோசப் மனைவியுடன் மதுரைக்குத் திரும்பினர். அங்கு அவர்கள் காந்தியின் ஆக்கபூர்வமான திட்டங்களான காதியை ஊக்குவிப்பது, தீண்டாமையை அகற்றுவது மற்றும் மத நல்லிணக்கத்தை மீட்டெடுப்பது ஆகிய திட்டங்களில் ஈடுபட்டனர்.
  • 1928-ல் ஜார்ஜ் ஜோசப்புடன் இளைஞரான காமராஜரும் சைமன் கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்காக திருமலை நாயக்கர் மஹால் அருகே ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தனர்.
  • ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார்.

தேர்தல் அரசியல்

1929ல் காங்கிரசின் வேண்டுகோளின்படி நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார். ஜூலை 1937-ல் அவர் மதுரா-கம்-ராம்நாட்-திருநெல்வேலி தொகுதியிலிருந்து மத்திய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காப்பீட்டுச் சட்டம், முஸ்லீம் சரியத் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களின் மீது அதிகளவில் விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார்.

காந்தியும் ஜோசப்பும்

காந்தி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கினார். காந்தி அரை நிர்வாண ஆடைக்கு மாறியபோது அருகிலிருந்து ஏழை மக்களின் நிலையை எடுத்துரைத்தவர் ஜார்ஜ் ஜோசப். காந்தியுடனான ஜார்ஜ் ஜோசபின் கடிதங்கள் வழியாக அவர்களுக்கிடையேயான ஏற்பும் மறுப்புமான உரையாடலைக் காண முடிகிறது. காந்தி அந்நியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றபோது அதில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்த ஜார்ஜ், கதர்த் துணி வாங்க அதிக செலவாகும், அதனால் உள்ளுர்த் தயாரிப்பான காக்கியை வாங்கலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

காந்தி கிறுஸ்தவரான ஜார்ஜ் ஜோசப் வைக்கம் போராட்டத்தில் பேனா மூலம் மட்டுமே ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், இந்துக்களின் பிரச்சனைகளுக்காக இந்துக்கள் போராடுவதே முறை என்றும் கூறினார். அதையும் மீறி போராட்டத்தில் செல்திசை காரணமாக வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் பங்கேற்றார். காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் முன்னணிப் போராளியாக இருந்தார்.

பங்களிப்புகள்

ஜார்ஜ் ஜோசப்பின் 1936 நாட்குறிப்பில் பல்வேறு பிரச்சினைகளின் பொருட்டு ஆலோசனை பெற வந்த கள்ளர் பிரதிநிதிகளின் வருகைகள் பற்றிய பதிவுகள் உள்ளன.

தொழிற்சங்கங்கள்

இந்தியாவில் ஆரம்பகால தொழிற்சங்கங்களில் ஒன்றை மதுரையில் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஜஸ்டிஸ் கட்சியின் ஜே.என்.ராமநாதன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் ஆகியோரின் உதவியுடன் 1918 இல் மதுரை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. மதுரா மில்லில் தொழிலாளர்களுக்கான அவர்களின் உரிமைகளை வலியுறுத்தினார்.

இதழியல்

பிப்ரவரி 1920-ல் மோதிலால் நேரு ஜோசப்பை அலகாபாத்தில் உள்ள ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தித்தாளின் ஆசிரியராக்கினார். இந்த செய்தித்தாளில் வெளியான கட்டுரைக்காக ஆங்கிலேய அரசு இவரிடம் மன்னிப்பு கோரக் கேட்டபோது மறுத்தார். இதன் காரணமாக ஜோசப் நேரு குடும்ப உறுப்பினர்களுடன் டிசம்பர் 6, 1921 அன்று தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பதினெட்டு மாதங்கள் நைனீட்டால் சிறையில் இருந்தார். 1923-ல் சிறையிலிருந்து வெளிவந்தபின் காந்தியின் ‘யங் இந்தியா’ இதழின் ஆசிரியராக ஆறு மாதங்கள் பொறுப்பேற்றார். 'தி சவுத் இந்தியன் மெயில்’, ’சத்தியார் கிரதி’ என்ற கையெழுத்து இதழ், ’தேசபக்தன்’ போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தார்.

எழுத்து

ஜார்ஜ் ஜோசப் சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் மற்றும் இலக்கிய சங்கத்தில் அடிக்கடி காணப்படுவார். மதுரையில் விக்டோரியா எட்வர்ட் நூலகத்திலும் அவர் அதிக நேரம் செலவளிப்பவர். இவரின் அர்சியல்-சமூகவியல் சார்ந்த கட்டுரைகள் தி இந்து ஆங்கில நாளிதழில் அதிகம் வெளிவந்தது. இவர் ஆசிரியராகப் பணியாற்றிய யங் இந்தியா போன்ற நாளிதழ்களில் விடுதலைப் போராட்டம் பற்றியும், சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் கட்டுரைகளை எழுதினார். அவரது பிற்கால நாட்களில், ஜோசப் காங்கிரஸ் மற்றும் காந்தியின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார் மேலும் “தி இந்துவில் காந்திஜியின் புதிய சூத்திரம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், காதி, உப்பு சட்டம் மற்றும் தடை பற்றிய காந்தியின் கருத்துக்களை விமர்சித்தார். பி.ஆர். அம்பேத்கருக்கு வைக்கம் போராட்டம் மற்றும் வெகுஜன மதமாற்றம் குறித்து, கடிதம் எழுதினார். உலகத்தலைவர்களான ராம்சே மெக்டொனல்ட், ரூஸ்வல்ட் போன்ற பலருடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.

மறைவு

ஜார்ஜ் ஜோசப் நீண்டகால சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள அமெரிக்கன் மிஷன் மருத்துவமனையில் ஐம்பது வயதில் மார்ச் 5, 1938-ல் காலமானார். புனித மேரி தேவாலயத்தில் அவருக்கான இறுதி திருப்பலி நடைபெற்றது. கிழக்கு வாசல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

நினைவு

  • கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ரோசாப்பூ அல்லது ரோசாப்பூ துரை என்று பெயரிடுகிறார்கள்.
  • 1966-ல் காங்கிரஸ் அரசு மதுரை யானைக்கல் சந்திப்பில் அவருக்கு சிலை அமைத்தது. அதை அப்போதைய உள்துறை அமைச்சர் பி.கக்கன் திறந்து வைத்தார்.

அவரைப்பற்றிய நூல்கள்

ஜார்ஜ் ஜோசஃபின் பேரன் ஜார்ஜ் கெவர்கீஸ் ஜோசப்பின் "ஜார்ஜ் ஜோசப்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் எ கேரளா கிறிஸ்டியன் நேஷனலிஸ்ட்" - 2003

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.