கோ. நடேசய்யர்: Difference between revisions
mNo edit summary |
(category & stage updated) |
||
Line 76: | Line 76: | ||
<references /> | <references /> | ||
{{ | {{ready for review}} | ||
[[Category: Tamil Content]] | [[Category: Tamil Content]] |
Revision as of 11:05, 27 March 2022
கோ. நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி.
பிறப்பு, கல்வி
கோதண்டராம நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரம் (அப்போதைய தென்னாற்காடு) மாவட்டம் வளவனூரில் கோதண்டராம ஐயர் - பகீரதம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜனவரி 14, 1887 -ல் பிறந்தார். அரசுப்பள்ளியில் ஆங்கில பொதுக்கல்வி கற்றவர், 1907 -ல் வங்கப்பிரிவினை காலத்தில் ஏற்பட்ட தேசிய உணர்வால் ஆங்கில படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசுப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைத்தொழில் பயிற்சி பெற்றார். சிலகாலம் நெசவுத்தொழில் மேற்கொண்டார். பின் வியாபாரம் குறித்த படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தொழில்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவர்.
தனிவாழ்க்கை
நடேசய்யரின் முயற்சியால் 1914, 1915 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம், தஞ்சை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்காக இலங்கையிலும் சந்தா சேர்த்தார். தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர். மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது மனைவி மீனாட்சி அம்மையாருடன் வந்த நடேசய்யர் மலையகத் தொழிலாளரின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். தனது முதல் மனைவி இறந்த பின் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். மனைவி மீனாட்சியம்மாள், மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். குறிப்பாக இலங்கை பெண்களின் வாக்குரிமைக்காக செயல்பட்டவர்.
1930-ல் மலையகத்தின் தோட்ட அடிவாரத்தில், ஹட்டன் நகரில் குடியேறிய நடேசய்யர் தொடர்ந்து தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றினார். நடேசய்யருடன் அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றினார். தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் புகழ்பெற்றவை.
அரசியல் வாழ்க்கை
நடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். 1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
பத்திரிகை பணி
ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-ல் வணிகர்களுக்காக ’வர்த்தகமித்திரன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். 1921-ல் நடேசய்யர் ஆரம்பித்த ’தேசநேசன்’ இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். ’தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை வெளியிட்டார். பாரதியாரின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்தார்.
இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்து தேசநேசன் இதழ். நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காக, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். ஹட்டனில் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 1931 ஆம் ஆண்டு நடேசய்யரால் ஆரம்பிக்கப்பட்டது.
இலக்கியப் பணி
மலையக இலக்கியத்தின் பிதா என்று கோ. நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார் என ஜெயமோகன் கூறுகிறார்[1]. நடேசய்யர் இன்சூரன்ஸ், ஆயில் இன்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் ஆகிய துறை நூல்களையும் ஒற்றன் என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஹட்டன் நகரில் சகோதரி என்ற அச்சகத்தை நடத்தினார். இதன் மூலம் தொடர்ந்து தன்னுடைய நூல்களையும் மனைவியின் நூல்களையும் வெளியிட்டுவந்தார்.
இந்தியாவின் பாட்டியாலா மகாராஜாவின் செயல்களை ஆவணப்படுத்தும் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக 1933-ல் வெளியிட்டார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
மறைவு
கோ. நடேசய்யர் நவம்பர் 7, 1947 -ல் மாரடைப்பால் இலங்கையில் காலமானார்.
இலக்கிய பங்களிப்பு
இதழ்கள்
- வர்த்தகமித்திரன் (1914)
- தேசநேசன் (1922-23)
- தேசபக்தன் (1924-29)
- தொழிலாளி (1929)
- தோட்டத்தொழிலாளி (1947)
- உரிமைப்போர்
- சுதந்திரப்போர்
- வீரன் சுதந்திரன்
- சிட்டிசன் (1922)
- ஃபார்வர்ட் (1926)
- இந்தியன் ஒப்பினியன் (1936)
- இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)
நூல்கள்
- இன்சூரன்ஸ் (1910)
- ஆயில் இன்ஜின்கள் (1910)
- வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் (1910)
- கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)
- ஒற்றன் (நாவல், 1914)
- வெற்றியுனதே
- நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)
- இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)
- இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)
- தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)
- அழகிய இலங்கை (1944)
- Indo Ceylon Crisis (1941)
- கதிர்காமம் (1946)
பதிப்பித்த நூல்கள்
- இந்தியத் தொழிலாளர் துயரங்கள் - பாடல் தொகுப்பு (1933). மீனாட்சி அம்மையார்
- இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940) - மீனாட்சி அம்மையார்
உசாத்துணை
- ‘தேசபக்தன்’ கோ.நடேசய்யர் - கீற்று
- தேசபக்தன் கோ. நடேசய்யர் - வாழ்க்கை வரலாறு நூல் (1988) - ஆசிரியர் சாரல்நாடன்
- நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா
குறிப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.