under review

விந்தியா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Line 43: Line 43:
* [https://neeli.co.in/548/ விந்தியா பற்றி நீலி மின்னிதழ். ரம்யா]
* [https://neeli.co.in/548/ விந்தியா பற்றி நீலி மின்னிதழ். ரம்யா]
* [https://www.jeyamohan.in/?p=181887 ரங்கனும் அவருடைய மொழியாக்கங்களும்]
* [https://www.jeyamohan.in/?p=181887 ரங்கனும் அவருடைய மொழியாக்கங்களும்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Revision as of 14:24, 3 July 2023

விந்தியா
விந்தியாவின் தாயும் தந்தையும்

விந்தியா(இந்தியா தேவி) (ஏப்ரல் 12, 1927 - அக்டோபர் 7, 1999) நவீன எழுத்தாளர். தன் இருபது வயதிலிருந்து பதின்மூன்று ஆண்டுகள்(1947-60) தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், கட்டுரைகள் எழுதினார். அதன்பின் விந்தியா எழுதாமலானார்.

பிறப்பு, கல்வி

விந்தியாவின் இயற்பெயர் இந்தியா தேவி. விந்தியா ஒரிஸாவில் உள்ள பெர்ஹாம்பூரில் ஏப்ரல் 12, 1927-ல் கே.என்.சுந்தரேசன், தையல்நாயகி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். தந்தை கே.என்.சுந்தரேசன் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தேசியவாதி. 1927-ல் மதராஸ் மாகாணத்தின் கம்யூனல்(G.O)ஆல் ஒரிஸா பெர்ஹாம்பூர் குடிபெயர்ந்தார். உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். ஒரிஸாவில் தெலுங்கு இரண்டாம் பாடமொழியாக இருந்ததால் வீட்டில் பிள்ளைகள் ஐந்து பேருக்கும் தந்தையே தமிழ் கற்பித்தார்.

விந்தியா பள்ளி இறுதி வகுப்பில்(S.S.L.C) தேர்ச்சி பெற்றார். விந்தியா கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். பாடகர், வயலின் கலைஞர். கோவில்களிலும், சபாக்களிலும் தொடர்ந்து கச்சேரிகள் செய்தார். பிரபல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் ஆனந்தரங்கன் (Andy Sundaresan) விந்தியாவின் இளைய சகோதரர். இவர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரது நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நரணன் என்ற இளைய சகோதரர் விந்தியாவின் நாவலைத் தட்டச்சு செய்ய உதவினார். 1937-ல் ஜெர்மனியிலிருந்து வாங்கி அவர் தட்டச்சு செய்த தட்டச்சுப்பொறி இன்றும் விந்தியாவின் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படுகிறது.

தனி வாழ்க்கை

விந்தியா 1942-ல், தன் பதினைந்து வயதில் பொருளாதாரப் பேராசிரியரான வி. சுப்ரமணியன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஐந்து வருடங்கள் கோயம்புத்தூரிலுள்ள கணவரின் இல்லத்தில் வாழ்ந்தார். 1947-ல் கணவரின் வேலை நிமித்தமாக ஒரிஸா மாநிலம் கட்டாக்கிற்கு குடிபெயர்ந்தார். விந்தியாவின் வாசிப்பு ஆர்வம் அறிந்த கணவர் அங்கு தமிழ்ப்பத்திரிக்கைகள் கிடைக்கும்படி செய்தார். எழுதவும் ஊக்குவித்தார். அதன் பின் பதின்மூன்று ஆண்டுகள் விந்தியா புனைவுகள், கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

சுதேசமித்திரன், கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் வழியாக இளவயதில் வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். ’விந்தியா’, 'விந்தியா தேவி’ என்ற புனைப்பெயர்களில் கதைகள் எழுதினார். முதல் சிறுகதை ’பார்வதி’ கலைமகளின் சுதந்திரதின இதழில் ஆகஸ்ட் 15, 1947-ல் வெளியானது.

கி.வா.ஜ. தொடர்ந்து கலைமகளுக்குக் கதைகள் எழுத ஊக்குவித்து விந்தியாவிற்கு கடிதம் எழுதினார். பல கதைகளைக் கலைமகளில் வெளியிட்டார். சுதேசமித்திரன், கலைமகள், காவேரி , பாரிஜாதம் , வெள்ளிமணி , கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து விந்தியாவின் சிறுகதைகள் வெளியாகின. பிற்காலத்தில் ஆனந்தவிகடன், குமுதம், தினமணி கதிரிலும் விந்தியாவின் சிறுகதைகள் வெளிவந்தன. சுதேசமித்திரனில் விலைவாசி, தேர்தல், ஜனநாயகம் குறித்த பல கட்டுரைகள் எழுதினார்.

விந்தியாவின் ’ஏடுகள் சொல்வதுண்டோ?’ சிறுகதை மார்ச் 1948-ல் 'காவேரி' இலக்கிய இதழில் வெளியானது. கண்ணனின் மாமா, ஒரு சொல், குற்றமுள்ள நெஞ்சு, கற்பனை உள்ளம், பெயர் மாற்றம், அந்த நாளிலே, ஞானம் வேண்டாம், அமைதியின் எதிரொலி, அனுபவ வார்த்தை, போகும்பொழுதும், நல்ல மனது, கிடைத்தது மாற்று, அன்பு மனம், மாசு, கிறுக்கு போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.'சுதந்திரப் போர்' என்ற நாவலை எழுதினார். 1947 முதல் 1960 வரை எழுதிய விந்தியா அதன் பின் எழுதாமலானார். ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, “என்னை யாரும் எழுத அழைக்கவில்லை. ஏதோவொரு வேகத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற வேகம் தோன்றியதால் எழுதினேன்” என்று சொன்னதாக நரணன் குறிப்பிடுகிறார்.

இவரது நாவலும் சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விந்தியாவின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் தெலுங்கில், எழுத்தாளர் சேஷராவ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டன. பேராசிரியர் ஆனந்தரங்கன் விந்தியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'Cupids's Alarms' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தத் தொகுப்பிற்கு ராஜம் கிருஷ்ணன் முன்னுரையும், பாரதி வெங்கடேசன் மதிப்புரையும் எழுதியுள்ளனர். விந்தியாவின் 'சுதந்திரப் போர்’ நாவலையும் 'Rajeswari' என்ற தலைப்பில் ஆனந்த ரங்கன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றை அமெரிக்காவில் உள்ள 'குறிஞ்சி பதிப்பகம்' வெளியிட்டது.

விருதுகள்

  • 'அன்பு மனம்' சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • சுதேசமித்திரன் நடத்திய கட்டுரைப் போட்டியில் இவரது 'அம்மன் திருவிழா' கட்டுரை, சிறந்த கட்டுரைக்கான பரிசைப் பெற்றது.
  • கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டிக்காக விந்தியா எழுதிய நாவல் 'சுதந்திரப் போர்’ பரிசு பெற்றது.
  • யுனெஸ்கோ ஆதரவில் நியூயார்க் ஹெரால்ட் நடத்திய அகில உலக சிறுகதைப் போட்டியில் விந்தியாவின் 'காதல் இதயம்”'சிறுகதை பரிசு பெற்றது.

மறைவு

விந்தியா அக்டோபர் 7, 1999-ல் காலமானார் .

இலக்கிய இடம்

”விந்தியாவின் அனைத்துச் சிறுகதைகளுமே சுதந்திரப் போராட்டம் முடிந்து, இரண்டாம் உலகப் போர் தோற்றுவித்த சிதைவுகளில் இருந்து நம்பிக்கையுடன் முன்னேறும் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. புதிய ஊக்கத்துடன் மறுமலர்ச்சியை எதிர்நோக்கி இந்திய சமுதாயம் முன்னேறத் தொடங்கி இருந்த காலத்தை அனைத்துச் சிறுகதைகளும் ”சிலும்புகள்” ஆழ்ந்துவிடாத அமைதியைப் பிரதிபலிக்கின்றன. பெண்ணின் மாண்பை விரிக்கும் இச்சொல்லோவியங்கள் அவளாலேயே ஆண் ஏற்றம் பெறுகிறான் என்ற கருத்தைப் பதிக்கவும் தவறவில்லை. படைப்புக் கலையில் என்றும் அழியாச் சிறு நட்சத்திரங்களாக இச்சிறுகதைகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது” என cupid alarms சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் ராஜம் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

”விந்தியாவின் புனைவுகள் பெரும்பாலும் தன்வரலாற்றுத் தன்மை உடையவை. தன்னுடைய அனுபவங்களில் கற்பனையைக் கலந்து தேர்ந்த கதை சொல்லும் திறன் கொண்டவர்.” என அவரின் தமையன் நரணன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • சுதந்திரப் போர்
சிறுகதைகள்

மொழிபெயர்க்கப்பட்ட இவரின் படைப்புகள்

விந்தியாவின் சகோதரர் ரங்கன் அவருடைய கதைகளையும் நாவலையும் ஆங்கிலத்திற்கும் தெலுங்குக்கும் மொழியாக்கம் செய்துள்ளார்.

  • Cupids's Alarms (சிறுகதைத் தொகுப்பு)
  • Rajeswari (சுதந்திரப்போர் நாவல்)

உசாத்துணை


✅Finalised Page