being created

ஐந்திணை ஐம்பது: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Reset to Stage 1)
Line 65: Line 65:
*ஐந்திணை ஐம்பது, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/ta/library-l2C00-html-l2C00ind-132062
*ஐந்திணை ஐம்பது, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/ta/library-l2C00-html-l2C00ind-132062
*ஐந்திணை ஐம்பது, சென்னை நூலகம்; https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/iynthinaiiympadhu.html
*ஐந்திணை ஐம்பது, சென்னை நூலகம்; https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/iynthinaiiympadhu.html
{{First review completed}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:59, 12 December 2022

ஐந்திணை ஐம்பது, சங்கம் மருவிய கால நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. ஐந்திணை ஐம்பது நூலை இயற்றியவர் மாறன் பொறையனார்.

பெயர்க் காரணம்

ஐந்திணை ஐம்பது தூல், முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற அடைவில் ஐந்திணைக்கும் பத்துப் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது. எனவே, இதனை ஐந்திணை ஐம்பது என்று குறிக்கின்றனர். இதில் உள்ள ஐந்திணை வரிசை முறை 'மாயோன் மேய காடுறை உலகமும்' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திர அமைப்பை (பொருள். அகத்.5) ஒத்துள்ளது. இச் சூத்திரத்துள் காணப்பெறாத பாலை, நால்வகை நிலங்களுக்கும் பொதுவானதாலும், உரிப்பொருளில் பிரிதல் ஒழுக்கத்துக்கு உரியதானதாலும்  அதனையும் உடன் கொண்டு ஐந்திணையாகக் கூறுதலே மரபு. ஐந்திணை ஐம்பது நூலில் இருத்தலுக்குரிய முல்லையில் தொடங்கி, இரங்கலுக்கு உரிய நெய்தலை ஈற்றில் அமைத்து, நெய்தலுக்கு முன் பாலை வைக்கப்பட்டுள்ளது. இது அகப்பொருள் நூலாகும்.

ஆசிரியர் குறிப்பு

ஐந்திணை ஐம்பது நூலின்   ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கருதுமாறு இத் தொடர் அமைந்துள்ளது. எனவே, இவரை மாறன் மகனாராகிய பொறையனார் என்றும் கொள்ளலாம். இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் 'வண்புள்ளி மாறன் பொறையன்' என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். இவர் கருத்துப்படி புள்ளி என்பதைக் 'கணக்கு' என்று கொள்ளவேண்டும். இது பழமையான பொருளாகத் தோன்றவில்லை. 'வண் புள்ளி' என்பதை வளப்பமானபுள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு. எனவே, இது குறித்து உறுதியாக ஒன்றும் சொல்லக் கூடவில்லை.

பொருண்மை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டை தமிழ் இலக்கிய  வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின. ஐந்திணை ஐம்பது நூலில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.

  ஐந்திணை ஐம்பது பாடல்கள் சிறந்த நடையுடையனவாயும், கருத்து வளம் செறிந்தனவாயும் உள்ளன. ஐந்திணை ஐம்பது நூலுக்கு உரிய பாயிரம், 'ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்' என்று கூறுகின்றது. எனவே, செந்தமிழ்ப் புலமைக்கு இந் நூற் பயிற்சி மிகவும் அவசியம் என்பது உணர்த்தப்படுகிறது. திருக்குறள் முதலிய சில கீழ்க்கணக்கு நூல்களில் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சில இந்நூலிலும் பயின்று வந்துள்ளன.

ஐந்திணை ஐம்பது நூலில் ஐம்பது செய்யுட்களும் ஒரு பாயிரச்செய்யுளும் அமைந்துள்ளது. பாயிரச் செய்யுள் நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. ஐந்திணை ஐம்பது நூலைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், அகப் பொருள் விளக்க உரைகாரர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஐந்திணை ஐம்பது நூல் முழுமைக்கும் பழைய உரையும் துறைக்குறிப்புகளும் உள்ளன.

உதாரணப் பாடல்

முல்லைத் திணை

உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார். (ஐ.ஐ- 4)

பொருள்;

ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்.

குறிஞ்சித் திணை

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். (ஐ.ஐ- 16)

பொருள்;

    வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை.

மருதத் திணை

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! (ஐ.ஐ- 24)

பொருள்;

    பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன.

பாலைத் திணை

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?  (ஐ.ஐ- 33)

பொருள்;

   பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?"

நெய்தல் திணை

கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி,
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு, அன்னை, 'எவ்வம் யாது?' என்ன, 'கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது' என்றேன். (ஐ.ஐ- 44)

பொருள்;

    இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்".

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.