under review

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 52: Line 52:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]

Latest revision as of 00:35, 21 December 2025

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா (கரடிகுளம் ஜெயபாரதிப்ரியா; பாரதி) (பிறப்பு: மே 22, 1957) துணுக்கு எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர். 15000-த்திற்கும் மேற்பட்ட துணுக்குக்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய ஒரு பக்கக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

பாரதி என்னும் இயற்பெயர் கொண்ட ஜெயாபாரதிப்ரியா, மே 22, 1957-ல், தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலைக்கு அருகே உள்ள உள்ள கரடிகுளத்தில், வி.எம். சம்பாரி - மாரியம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை வி.எம். சம்பாரி புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான். ஜெயாபாரதிப்ரியா, கழுகுமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜெயாபாரதிப்ரியா, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி ஜெயா. இவர்களுக்கு ஒரு மகள்; ஒரு மகன்.

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா நகைச்சுவைத் துணுக்குகளில் ஒன்று

இலக்கிய வாழ்க்கை

ஜெயாபாரதிப்ரியா, பெற்றோர்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். இவரது முதல் படைப்பு, 1973-ல், மாலை முரசு நாளிதழில் வெளியானது. தொடர்ந்து கல்கண்டு தொடங்கி குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், சாவி. இதயம் பேசுகிறது எனத் தமிழில் வெளிவந்த அனைத்து முன்னணி இதழ்களிலும் நகைச்சுவைத் துணுக்குக்களையும், ஒரு பக்கக் கதை மற்றும் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதினார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள மனோரமா, மங்களம் போன்ற மலையாள இதழ்களிலும் இவரது நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகின. இணையத்திலும் பங்களித்தார்.

தனது பெயரான பாரதி என்பதுடன் மனைவியின் பெயரான 'ஜெயா'வையும், மகள் பெயரான 'ப்ரியா'வையும் சேர்த்துக் கொண்டு ஊர்ப் பெயருடன் இணைத்து 'கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா' என்ற பெயரில் எழுதினார். சாவி, பாக்கியம் ராமசாமி, வலம்புரி ஜான், லேனா தமிழ்வாணன் உள்ளிட்ட பலரால் ஊக்குவிக்கப்பட்டார்.

ஜெயாபாரதிப்ரியா, 15000-க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள், 550 ஒரு பக்கச் சிறுகதைகள், 50 சிறுகதைகள், 3000-க்கும் மேற்பட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என்று வெகு ஜன இதழ்களில் எழுதினார். ஜெயாபாரதிப்ரியாவின் படைப்புகள் தொகுக்கப்பட்டு 28 புத்தகங்களாக வெளிவந்தன. ஜெயாபாரதிப்ரியாவின் படைப்புகளை ஆய்வு செய்து எழுத்தாளர் கமலா கந்தசாமி மதுரை காமராசர் பல்கலையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

நாடகம்

ஜெயாபாரதிப்ரியா நாடகங்கள் சிலவற்றையும் எழுதினார். அவற்றில் சில வானொலியில் ஒலிபரப்பாகின. சில மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

இதழியல்

ஜெயாபாரதிப்ரியா, பாக்கியம் ராமசாமி ஆசிரியராக இருந்து நடத்திய 'சிரிப்பே சிறப்பு' என்னும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

மதிப்பீடு

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா, எழுதாத இதழ்களே இல்லை எனுமளவிற்கு தமிழின் முன்னணி இதழ்கள் எல்லாவற்றிலும் பல துணுக்குகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய கவிதை, சிறுகதை, கட்டுரை என பங்களித்தார். தமிழின் முன்னணி நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்களில் ஒருவராகவும், ஒரு பக்கக் கதையாசிரியர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை
  • அக்னி பிரதேசம்
  • தாழ்த்தப்பட்ட தேவதைகள்
  • கழுதப்பெரட்டு
  • ஜோக்கான கவிதைகள்
சிறுகதை
  • சிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள்
நகைச்சுவைத் துணுக்கு நூல்கள்
  • புன்னகை மின்னல்கள்
  • என்னங்க கொஞ்சம் சிரிங்க

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:10:58 IST