வரிச்சியூர் (தமிழ்-பிராமி கல்வெட்டுகள்): Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 75: | Line 75: | ||
*[https://www.youtube.com/watch?v=yjE78-mf4ds THF: வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்] | *[https://www.youtube.com/watch?v=yjE78-mf4ds THF: வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 15:55, 16 November 2025

மதுரை வரிச்சியூரில், குன்னத்தூர் மலையில் பல கல்வெட்டுகள் உள்ளன, , இங்கு உதயகிரி, அஸ்தகிரி எனப்படும் இரண்டு குடைவரைக் கோயில்கள் பிற்காலப் பாண்டியர் காலத்தில் குடையப்பட்டுள்ளன. உதயகிரி மலையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
அமைந்துள்ள இடம்
வரிச்சியூர்மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள உதயகிரி என்றழைக்கப்படும் சுப்பிரமண்ய மலையில் மூன்று தமிழ் - பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன.
காலம்
ஏறத்தாழ பொ.மு. 2-ம் நூற்றாண்டு

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
இக்கல்வெட்டுகள் 1908-ல் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்புகளாக வெளியிடப்பட்டன. இக்குகைத்தளம், கல்வெட்டுகள் மற்றும் இங்குள குடைவரைக் கோயில்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டுகள்
வடக்குப் பார்த்தமைந்துள்ள சிறிய குகைத்தளத்தில் புருவப் பகுதியிலும் கிழக்குப் பார்த்துள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டிய நீர்வடிவிளிம்பின் மேலும் கீழுமாக மூன்று கல்வெட்டுகளும் உள்ளன.
கல்வெட்டு:1:1
அமைவிடம்
இக்கல்வெட்டு வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறை முன் உள்ளது.

கல்வெட்டு வாசகம்
ப[ளி]ய் கொடுபி...
பொருள் விளக்கம்
இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் சொல்லப்படுகிறது. கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துவிட்டதால் கொடையளித்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.
பாடபேதம்
- பிரேய கொடு பி- டி.வி மகாலிங்கம்
- பளிய் காடுபி- இரா. நாகசாமி
- ப[ளி]ய் கொடு பி... - ஐராவதம் மகாதேவன்
கல்வெட்டு 1:2
அமைவிடம்
இக்கல்வெட்டு கிழக்குப் பார்த்த பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறையில் நீர்வடி விளிம்பின் மேலாக உள்ளது.. கல்வெட்டு மிக உயரத்தில் உள்ளது. எழுத்துக்கள் சிதைந்துள்ளது.

கல்வெட்டு வாசகம்
அடா... றை ஈதா வைக....ஓன் நூறு கலநெல்
பொருள் விளக்கம்
(இப்பள்ளிக்கு) நூறு கலம் நெல் வழங்கப்பட்டமையைக் குறிக்கிறது. கொடை வழங்கியவரின் பெயர் சிதைவுற்றிருக்கலாம். 'ஈதர் என்ற சொல் மகிழ்ச்சி விளிச் சொல்லாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு 1:3

அமைவிடம்
இக்கல்வெட்டு கிழக்குப் பார்த்த பெரிய குகைத்தளத்தின் நெற்றிப் பாறையில் நீர்வடிவிளிம்பின் கீழ்ப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்
இளநதன் கருஇய நல் முழஉகை
பொருள் விளக்கம்
இச்சிறந்த (நல்ல) குகை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள்.
பாடபேதம்
கல்வெட்டு 2 மற்றும் 3 ஆகிய இரண்டும் ஒன்றாகவே படிக்கப்பட்டுள்ளன. முதலில் ஒன்றாகப் படித்த ஐ.மகாதேவன் பின்னர் பிரித்துப் படித்துள்ளார். அவரது இரண்டாவது வாசிப்பிற்கு இணங்கவே மேலே இவை மூன்று கல்வெட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.
- ...த...ரத [வை].கந ரசுல ந[ல] -டி.வி. மகாலிங்கம்
- ..டா.. இதா (வை) ணுறகாகலேன-இரா. நாகசாமி
- அடா ...றை ாதா வைக ...ஒன் நூறு கல நெல் ..-ஐராவதம் மகாதேவன்
- இளநதன் கருஇய நல் முழஉகை- ஐ. மகாதேவன்
கல்வெட்டுச் செய்திகள்
வரிச்சியூர் கல்வெட்டுகளில் கலம், நெல்,நூறு,கருகிய, முழஉகை ஆகிய சொற்கள பயின்று வருவது சிறப்பானதாகும். எண்-அளவு குறிக்கப்படும் தமிழகக் கல்வெட்டுகளில் இதுவே காலத்தால் முந்தியதாகும். தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் படுக்கைகள் மற்றும் குகை அமைப்புகள் முதலியவை கொடையாகக் கொடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் காணும் நிலையில் நெல் கொடையாகக் கொடுக்கப்பட்டிருப்பதும் தமிழகக் கல்வெட்டுகளில் இக்கல்வெட்டில் தான் முதன்முலாகத் தெரிய வருகிறது. 'கருஇய' என்ற சொல் தொண்டை மண்டலத்தில் கிடைத்துள்ள கோழிக்கல் ஒன்றில் 'கருகிய' என்று பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.'முழஉகை' என்ற சொல் அரிட்டாபட்டி கல்வெட்டுகளில் 'முழாகை' என்றும் 'முழஉகைய்' என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உசாத்துணை
- தமிழ் மின் நூலகம் வரிச்சியூர் கல்வெட்டுகள்
- வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள் தமிழ் மரபு
- வரிச்சியூர் - குன்னத்தூர் மலை - எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு - வே.சிவரஞ்சனி
இணைப்புகள்
✅Finalised Page