அவிநயம்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Removed Category:Spc) |
||
| Line 36: | Line 36: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:பாட்டியல் இலக்கண நூல்]] | [[Category:பாட்டியல் இலக்கண நூல்]] | ||
Latest revision as of 21:38, 8 January 2026
To read the article in English: Avinayam.
அவிநயம் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) தமிழ் பாட்டியல் இலக்கண நூல். அவிநயனார் இதன் ஆசிரியர். இந்நூல் பொ.யு 6-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது. பன்னிரு பாட்டியல் நூலில் இந்நூலின் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்வகைமையின் இலக்கணத்தைப் பேசும் துறை.
நூலாசிரியர்
அவிநயனார் என இந்நூலாசிரியரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இவர் பொ.யு 9-ம் நூற்றாண்டினர் என்பது பொதுவான கணிப்பு. சமணர் என்பது இந்நூலில் அணுக்கொள்கை, ஊழ்க்கொள்கை ஆகியவை பேசப்படுவதில் இருந்து தெரியவருகிறது.
முன்செய் வினையது முறையா உண்மையின்
ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து
என ஊழ்வினைக்கொள்கையை அவிநய மேற்கோள் குறிப்பிடுகிறது. (யாப்பருங்கலவிருத்தி, ஒழிபியல் 95, மேற்கோள்)
அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றது. இவை வெவ்வேறு நூல்களாக இருக்கலாம். அவிநயப் புறனடை தனிநூல் என்பது உறுதி என்கிறார் க.ப. அறவாணன். (சைனரின் தமிழிலக்கணக் கொடை, பக். 178)
இலக்கணங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவினாலேயே எழுதப்பெறும். வெண்பாவில் எழுதுவது சங்ககாலத்திற்குப் பின் வந்த மரபாக இருக்க வேண்டும். முதல்முறையாக வெண்பாவில் எழுதப்பட்ட நூல் அவிநயப் புறனடை. வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்பதை முதலில் காட்டியவர் சமணராகிய அவிநயனார் என்று ஆய்வாளர் சொல்கிறார்கள்[1].
நூல்
அவிநயம் என்பது வடமொழியில் நடிப்பு, மெய்ப்பாடு ஆகியவற்றுக்கான சொல். சமணராகிய அவிநயர் அத்தலைப்பில் நூல் செய்தமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம். அவிநயம் புகழ்பெற்ற நூலாக இருந்துள்ளது. அது நூலாக கிடைக்கவில்லை. இந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார். தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் போன்ற நூல்களில் இந்நூலின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
நூல் மீட்பு
அவிநயம் பாட்டியல் நூல்களில் தலையாயயதாக இருந்தது. பொயு பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை அது பெரும் செல்வாக்குடன் இருந்தது. பின்னர் அந்நூல் மறைந்தது. இன்றுகிடைக்கும் பன்னிரு பாட்டியல் நூல்களில் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்படும் வரிகளை தொகுத்து, பொருள்படும்படி அடுக்கி, ஆய்வாளார் மயிலை சீனி. வேங்கடசாமி அவிநயம் என்னும் நூலை மீட்டுருவாக்கினார். தமிழிலக்கிய ஆய்வில் நிகழ்ந்த சாதனைகள் ஒன்று இது.
நூலமைப்பு
அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் மயிலை சீனி வேங்கடசாமியால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர்.
உசாத்துணை
- அவிநயம் பற்றி
- சுப்பிரமணியன், முனைவர் ச. வே., தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், மெய்யப்பன் பதிப்பகம், 2007, பக்கம் 10 மற்றும் 95
- க. ப. அறவாணன் சைனரின் தமிழிலக்கணக் கொடை
- தமிழ்ப்பதிவுகள்
- மு அருணாச்சலம் சிற்றிலக்கியங்கள் முன்னுரை
இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:30 IST