first review completed

கலித்தொகை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed template text)
Line 120: Line 120:


* [https://www.tamilvu.org/ta/library-l1260-html-l1260ind-125035 தமிழ் இணையக் கல்விக் கழக தொகுப்பில் கலித்தொகை நூல்;]
* [https://www.tamilvu.org/ta/library-l1260-html-l1260ind-125035 தமிழ் இணையக் கல்விக் கழக தொகுப்பில் கலித்தொகை நூல்;]
{{first review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:14, 15 November 2022

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். ஐந்து புலவர்களின் ஐந்திணைப்  பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல்.

பாடல்கள் அமைப்பு

கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை,  தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐந்து புலவர்களால் பாடப்பட்ட 149 பாடல்கள் உள்ளன. அப்பாடல்கள்  குறைந்த அடி எல்லையாக 11 அடிகளும்  உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகளும் கொண்ட பாடல்கள் உள்ளன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்கள், பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர், தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை காட்டுகின்றன.

ஆசிரியர்கள் / தொகுப்பு

கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக் கீழ் வரும் இரு பாடல்களினால் அறியலாம்.

பாடல் 1

இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

"பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,

மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்

நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்

கல்விவலார் கண்ட கலி".

இந்தப் பாடல் மூலம் கலித்தொகையில் பாடியவர்களின் பெயர்களை அறியலாம். பாடியவர் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை;

  • பாலைத்திணை பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ ( 35 பாடல்கள்)
  • குறிஞ்சித்திணை பாடியவர் கபிலர் (29 பாடல்கள்)
  • மருதத்திணை பாடியவர் மருதன் இளநாகனார் (35 பாடல்கள்)
  • முல்லைத்திணை பாடியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)
  • நெய்தல் திணை பாடியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்)

கலித்தொகை நூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு கீழ்காணும் பாடல் அடிப்படையாக உள்ளது..

பாடல் 2

ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் எந்தத்  திணைக்கு உரிய பொருள் எவையெவை என எளிமைப்படுத்தி தெளிவாக்கும் பாடல்

"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி

ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி

இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்

புல்லும் கலிமுறைக் கோப்பு".

இதில் சொல்லப்பட்டவை:

  • தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலை
  • புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
  • இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
  • நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
  • இரங்கிய போக்கு - நெய்தல்

பாலைக்கலி

கலித்தொகை நூலில் 2 முதல் 36 எண்ணுள்ள 35 பாடல்கள் பாலைத் திணை பாடல்களாகும். இவை பாலைக்கலி என அழைக்கப்படுகிறது.  இவற்றைப் பாடிய புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.  

'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம் கண்ணீா் நினைக்கும் கடுமை காடு' எனப் பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கிய கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள்.

குறிஞ்சிக்கலி

கலித்தொகையில்   37 முதல் 65 வரையில் எண் கொண்ட 29 பாடல்கள் குறிஞ்சித் திணை பாடல்களாகும். இவை குறிஞ்சிக்கலி என அழைக்கப்படுகிறது.  இந்தப் பாடல்களைப் பாடிய புலவர் கபிலர்.

  • புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வர்ணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்கள். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும்  அமைந்துள்ளன.
  • "அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் கற்பினளே, குறவர் மகளிர் தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்" என வரும்  பாடல் ( 39)   "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் திருக்குறளின் (55) பொருண்மையை ஒத்துள்ளது.
  • "சுடர்த்தொடீஇ கேளாய்" என்று தொடங்கும்  பாடல் ( 51 ) ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்துள்ளது. இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கருப்படுகிறது.
  • நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல் என்னும பாடல் ( 52 ) அடியில் பீமன் துரியோதனனின் தொடையைப் பிளந்த கதை சொல்லப்பட்டுள்ளது.
  • முகம் மதி போன்றது, மதி முகம் போன்றது என்று உவமையை மாலையாக்கிக் கொள்ளும் பாடலின் ( 64 ) பாங்கு சங்க இலக்கியத்தில் புதுமையானது

மருதக்கலி

கலித்தொகை நூலில் 66 முதல் 100 வரையுள்ள 35 பாடல்கள் மருதத்திணை பாடல்களாகும். இவை மருதக்கலி என அழைக்கப்படுகிறது. இவற்றைப் பாடியவர் மருதன் இளநாகனார்.

பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவி, தலைவனிடத்து ஊடல் கொள்வதும், தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.  இப்பாடல்கள் ஊடல் பாங்கினைப் பல்வேறு கோணங்களில் காட்டுகின்றன.

முல்லைக்கலி

கலித்தொகை நூலில் 101 முதல் 117 வரை இடம்பெற்றுள்ள 17 பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்கள் ஆகும். இவற்றை பாடியவர் சோழன் நல்லுருத்திரன்.

முல்லைக்கலிப் பாடல்கள், தலைவனோடு மனத்தால் ஒன்றுபட்டு இருந்த தலைவி தலைவன் பிரிந்து சென்ற போது இல்லிருந்து தன்மனதை ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

பெருந்திணைப் பாடல்கள்

கலித் தொகை பாடல்கள் 109 மற்றும் 112 பெருந்திணை என்னும் பொருந்தாக் காதலைக் காட்டும் பாடல்களாகும்.

கைக்கிளைப் பாடல்கள்

கலித் தொகை பாடல்கள் 111, 113 மற்றும் 114 ஆகியவை கைக்கிளை  என்னும் ஒருதலைக் காதலைக் காட்டும் பாடல்களாகும்.

ஏறு தழுவுதல் பற்றிய செய்திகள்

பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து சுழற்றி எறிந்த பீமன் போல், காளை பொதுவனை ( இடையன் ) கொம்பால் குத்திச் சுழற்றியது. தந்தையைக் கொன்றவனைப் போல வெள்ளைக்காளை பொதுவனைக் கொன்றது.  ( 101 ).

எருமைத்தலை கொண்ட சூரனைக் கொன்று கூளிப்பேய்களுக்கு உணவூட்டிய அந்திப் பசுங்கண்-கடவுள் போல், காரிக்காளை பொதுவனைக் கொன்றது.  பட்டம் விடும்போது நூல் சுற்றுவது போல் ஒருகாளை பொதுவன் குடலைத் தன் கொம்பில் சுற்றியது (103).

உழலை-மரம் போலக் கொம்பால் சுழற்றியது (106).

வரலாற்றுச் செய்தி

கலித்தொகையின் 104- வது  பாடல் பாண்டியரைக் குறிப்பிடும்போது, பாண்டிய நாட்டின் ஒரு பகுதி கடற்கோளுக்கு இரையானதாகவும், அதனை ஈடுகட்டிக்கொள்ள பாண்டியன் சேரனையும், சோழனையும் வென்று நாட்டை விரிவுபடுத்திக் கொண்டதாகவும் உள்ள வரலாற்று செய்தியைக் குறிப்பிடுகிறது.

நெய்தற்கலி

கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்ணுள்ள 33 பாடல்கள் நெய்தல் திணை பாடல்களாகும். இவை நெய்தற்கலி என அழைக்கப்படுகிறது.  இவற்றைப் பாடிய புலவர் நல்லந்துவனார்.

பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்.

திருக்குறள் வரிகள்

நெய்தற்கலிப் பாடல்களில் கீழ்காணுமாறு திருக்குறளின் அடிகள் பயின்று வருகின்றன.

கலித்தொகை அடி திருக்குறள் அடி
வேண்டிய வேண்டியாங்கு எய்தல் வாய் எனின் ( 143 ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும் (265)

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன் ( 139 ) அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை (315)
காமக் கடும்பகையில் தோன்றினேற்கு ஏமம் எழில்நுதல் ஈத்த இம் மா ( 139 ) காமம் உழந்து வருந்தினாற்கு ஏமம் மடல் அல்லது இல்லை வலி (1131)

கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்

'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
  • போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
  • பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
  • அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
  • அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
  • செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
  • நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை
  • முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
  • பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (கலி ,133)

கலித்தொகை காட்டும் சமூகம்

களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்றும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிச் செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

வரலாற்று, புராணச் செய்திகள்

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல் மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையைப் பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

பதிப்பு வரலாறு

கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம் பிள்ளை 1887-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக "நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும் வேறு நூல்களை ஆராய்ந்தும் உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்து, சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை. அனந்தராமையர் 1925-ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதன் பின்னர் பலரும் கலித்தொகைக்கு உரை எழுதினர்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.