first review completed

கே. ராமானுஜம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 42: Line 42:
* [https://www.newindianexpress.com/cities/chennai/2015/jan/19/Remembering-K-Ramanujam-the-Man-Behind-the-Brush-706849.html Remembering K Ramanujam, the Man Behind the Brush, ஓவியர் ராமானுஜம் பற்றி சி மோகன் வழங்கிய ஆதிமூலம் நினைவு உரை, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 2015]
* [https://www.newindianexpress.com/cities/chennai/2015/jan/19/Remembering-K-Ramanujam-the-Man-Behind-the-Brush-706849.html Remembering K Ramanujam, the Man Behind the Brush, ஓவியர் ராமானுஜம் பற்றி சி மோகன் வழங்கிய ஆதிமூலம் நினைவு உரை, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 2015]
* [https://www.youtube.com/watch?v=3P-smBVwupM கே ராமானுஜம் பற்றி ஓவியர் ஆதிமூலம், அஷ்விதா'ஸ் சேனல், யுடியூப்]
* [https://www.youtube.com/watch?v=3P-smBVwupM கே ராமானுஜம் பற்றி ஓவியர் ஆதிமூலம், அஷ்விதா'ஸ் சேனல், யுடியூப்]
{{Standardised}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:03, 28 April 2022

ஓவியர் கே.ராமானுஜம்

கே. ராமானுஜம் (1940 - ஜூன் 3, 1973) தமிழ்நாட்டின் நவீன ஓவியக் கலைஞர்களில் ஒருவர். விசித்திரமும் கனவுலகும் கொண்ட ஓவியங்களை படைத்தவர். இந்த விசித்திர படைப்புலகம் இவரை மற்ற கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் ஓவியத்தில் மேதைமையை வெளிப்படுத்தியவர். இயல்பில் திக்குவாயுடன் தொடர்புறுத்தல் சிக்கல் மற்றும் மனநிலைக் குறைபாடு கொண்டவராக இருந்தார்.

பிறப்பு, இளமை

ராமானுஜம் 1940-ல் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வைணவக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். மூத்தவர்கள் இரு சகோதரர்கள்.

தனி வாழ்க்கை

ராமானுஜம் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஓவியக் கல்வி

ராமானுஜம் பள்ளிப் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாதவராக ஓவியத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். பள்ளி படிப்பு பாதியிலேயே நின்று விட அவரை தனபாலிடம் ஓவியம் கற்க அனுப்பினார்கள். 1958-ல் மெட்ராஸ் ஓவியப் பள்ளியில் சேர்ந்து 6 வருட டிப்ளமோ படிப்பை 1964-ல் முடித்தார். ஓவியப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ராமானுஜத்தின் தந்தை எதிர்பாராமல் மரணமடைய, ராமானுஜத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தன் ஓவியங்களை விரும்பும் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்று வரும் பணத்தில் வாழ்ந்தார். படிப்பு முடிந்தவுடன் மாதம் 250/- ரூபாயுடன் கூடிய மூன்று வருட தேசிய நல்கை(national scholarship) இவருக்கு கிடைத்தது பேருதவியாக இருந்தது. 1958-67 களில் 9 ஆண்டுகள் ஓவியப் பள்ளி வளாகத்திலேயே இருந்து தொடர்ந்து படைப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பிறகு சோழமண்டலம் கலைகிராமத்தில் குடியேறினார்.

கலை வாழ்க்கை மற்றும் சில படைப்புகள்

Dreaming Bird (1966), Mixed media, 37.5 x 50.5 cm

ராமானுஜம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அன்று பிரபலமாக இருந்த 'ஆர்ட்ரெண்ட்ஸ்' காலாண்டு இதழில் (அக்டோபர் 1963- ஜனவரி 1964) அவரது 'கனவு' என்ற ஓவியம் இடம்பெற்று பரவலான கவனத்தைப் பெற்றது. அப்படி அவ்விதழில் ஒரு மாணவரின் படைப்பு இடம்பெற்றது அந்த ஒரு முறை மட்டுமே என்பது ராமானுஜத்தின் துவக்ககால திறன் பற்றிய மதிப்பீடாக குறிப்பிடப்படுகிறது.

ராமானுஜம் கல்லூரியில் படிக்கும் போது மாமிச உணவு மற்றும் போதைப்பொருள்கள் பழக்கம் ஏற்பட்டது. இதை அவரது ஆச்சாரமான குடும்பத்தினரால் சகித்துக் கொள்ள முடியாததால் பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு ராமானுஜம் வீட்டிற்கு செல்வதை நிறுத்திவிட்டு கல்லூரியிலும் பிறகு சோழமண்டலத்திலும் தங்க ஆரம்பித்தார். இவரது திக்குவாய், தோற்றம், நடவடிக்கைகள் நண்பர்கள் மத்தியிலும் கேலிப் பொருளானது. ஓவியப் பள்ளி முதல்வர் கே. சி. எஸ். பணிக்கர், ஆசிரியர்களான தனபால், கிருஷ்ணாராவ், சந்தானராஜ், மாணவர்களான ஆதிமூலம், பி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ராமானுஜத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். ராமானுஜத்தின் பல படைப்புகளுக்கு பணிக்கர் தான் தலைப்பு வழங்கியுள்ளார். ராமானுஜம் தன் படைப்புகளை தமிழில் சொல்ல அதற்கு பொருத்தமான தலைப்பை பணிக்கர் ஆங்கிலத்தில் கவித்துவமாக கொடுத்துள்ளார்.

My Dream World, Ink and water colour on paper, 17.2 x 26 cm

ராமானுஜத்தின் படைப்பை பார்த்து வியந்த பிரிட்டிஷ் ஆர்ட் கவுன்சிலின் கலை விமர்சகர் ஜார்ஜ் பட்சர் அவரது படைப்பை காமன்வெல்த் கலைத் திருவிழாவில் காட்சிபடுத்த ஏற்பாடு செய்தார்.

1970-ல், கன்னிமாரா ஹோட்டல் பிரபல கட்டிட கலைஞர் ஜியாப்ரி பாவாவால்  புதுப்பிக்கப்பட்ட போது ராமானுஜம் அங்கு மூன்று சுவரோவியங்கள் வரைந்தார்.

ராமானுஜம் தன் கடைசிக் காலத்தில் வழக்கமான விந்தை ஓவியங்களில் இருந்து முற்றிலும் விலகி புதியதொரு படைப்புலகை கண்டடைய விரும்பினார்.

இறப்பு

ராமானுஜம் ஜூன் 3, 1973 அன்று தன் 33-ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

கலைத்துறையில் இடம், அழகியல்

Orange Building(1972), Watercolor on cardboard, 20.3 x 17.7 cm, Courtesy: Piramal Collection

ராமானுஜம் அன்றிருந்த பணிக்கர் தலைமையிலான மெட்ராஸ் கலை இயக்கம்(Madras Art Movement) பற்றியோ அன்றிருந்த கலைபோக்குகள் பற்றியோ புரிதல்கள் இல்லாதவர். ராமானுஜத்தின் மனநிலைப் பிசகு அவரை இவ்வுலகிடமிருந்து விலக்கி வைத்தது.  ஆனால் கலையில் தனக்கான ஒரு கனவுலகை உருவாக்கினார். அந்த கனவுலகம் அவரது படைப்புகளில் தனித்தன்மையுடன் வெளிப்பட்டது.

ஓவியம் கே.ராமானுஜம் 4.jpg
My Dream World(1972), Ink on Paper, 90.8 x 60.8 cms, Courtesy: Google Arts & Culture

ராமானுஜத்தின் பெரும்பாலான ஓவியங்கள் மை, பேனா, தைல வண்ணம் போன்றவற்றால் வரையப்பட்டவை. வரைவதற்கு முன் தாளை தண்ணீரில் நனைத்து விட்டு, அது காயத் துவங்கும் போது லேசான ஈரப்பதத்துடன் வரையத் துவங்கும் உத்தியை ராமானுஜம் நிறைய ஓவியங்களில் பயன்படுத்தினார். அல்லது வரைந்து முடித்தபின் தாளை தண்ணீரில் லேசாக ஒற்றியெடுத்து காய வைப்பதும் உண்டு. இது அவருடைய ஓவியங்களுக்கு ஒருவித கனவுத்தன்மையை அளித்தது. இந்த உத்தியை ராமானுஜம் தன் ஓவியப் பள்ளி சூழலில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கலாம். ராமானுஜத்தின் படைப்புகளில் சொர்க்க மாளிகைகள், கருடனின் சாயல் கொண்ட பறவைகள், தேவதைகள், யானைகள், பாம்புகள், சிறகுகள் கொண்ட விசித்திர விலங்கு, கடிகாரம் போன்றவை திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. நிஜ வாழ்க்கையில் தாடி, முறுக்கு மீசை, தொப்பி, சட்டை அணிந்து ஒரு கனவானாக மாற முயன்றவர் அவரது ஓவியங்களிலும் தன்னை அப்படியே சித்தரித்திருப்பார். விசித்திரமான ஒரு அரக்க உருவத்தின் மேல் ஒரு தேவதையுடன் உட்கார்ந்து பயணம் செய்யும் நிலையில், பெரிய சொர்க்க மாளிகையில் தேவதைகள் சூழ தன் காதலியுடன் இருப்பதாக, ஒரு பெரிய பாம்பின் வாய்க்குள் தான் ஒரு படுக்கையில் படுத்திருக்க பக்கத்தில் தன் துணைவி அமர்ந்திருக்கும் விதத்தில் என்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ராமானுஜத்தின் விருப்பம் அவரது ஓவியங்களில் பலவாறாக எதிரொலித்தது. புராண இதிகாசம், சந்தமாமா கதைகள், தமிழ் சினிமா, ஜோதிடம் என்று தமிழில் கிடைக்கும் எதையும் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் ராமானுஜம். ராமானுஜத்தின் வைணவப் பின்னணி அவரது மாயத்தன்மை வாய்ந்த படைப்புகளில் பிரதிபலிப்பதை கலை விமர்சகர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ராமானுஜத்தின் படைப்புகளை பற்றி கலை வரலாற்றாளர் சித்ரா மாதவன் கூறும் போது, "ராமானுஜத்தின் ஓவியங்களில் அவருடைய வைணவ பின்புலம் வெளிப்படுவதை பார்க்க முடியும். நாகம், கடல், சொர்க்கம் போன்றவை. ஓவியங்களில் அவருடன் இருக்கும் பெண் ஶ்ரீதேவி பூதேவியை, பல தலை நாகம் அனந்தசயனத்தை, விசித்திர பறவை மேல் இருப்பதாக வரையப்பட்டிருக்கும் ராமானுஜம் கருடப்பறவை மேல் இருக்கும் மகாவிஷ்ணுவை ஞாபகப்படுத்துகிறது" என்கிறார்.

அவரது கலைப் படைப்புகளால் பாதிப்புக்குள்ளான கலைஞர்கள் உள்ளனர். ராமானுஜத்தை பற்றி ஓவியர் சி. டக்ளஸ் கூறுவது, "அவர் ஒரு அருமையான ஆசிரியர் என்று பலருக்கும் தெரியாது. நான் அவரிடம் கற்றுக் கொண்டே இருந்தேன். கோடுகளுக்கு பேச்சும் சுவாசமும் இருப்பதை அவரிடமிருந்து தான் அறிந்து கொண்டேன். என் ஓவியப் படைப்பை உருவாக்கும் விதத்தில் ஓவிய வெளியை அணுகும் விதத்தில் அவருடைய நுட்பங்களை கை கொள்ள முயற்சித்தேன். என்னை பொறுத்தவரையில் நான் எதிர்பார்த்திருந்த ஒருவராக அவர் எனக்கு தெரிந்தார். நான் அவரை தொடர்ந்த படி இருந்தேன்" என்றார்.

ராமானுஜம் போன்ற எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாத கலைஞர்கள் தங்களுக்கென்று ஓரிடத்தை அமைத்துக் கொண்டு படைப்பாக்கத்தில் ஈடுபட ஒரு கட்டமைப்பு தேவை என்று பணிக்கர் யோசித்ததன் விளைவால் சோழமண்டலம் கலைக் கிராமம் உருவானது.

கண்காட்சிகள்

குழு கண்காட்சிகள்

1965-ல் காமன்வெல்த் கலைத் திருவிழாவில் பங்குபெற்றார். சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் நடந்த குழுக் கண்காட்சிகளிலும் பங்கெடுத்தார்.

மரணத்திற்கு பிந்தைய கண்காட்சிகள்

'அஷ்விதா கலைக்கூடம்' (Ashvita art gallery) தங்களுடைய பத்தாம் ஆண்டு விழாவில் பிரபல இந்தியக் கலைஞர்களின் படைப்புகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தது. அதில் ராமானுஜத்தின் இரு படைப்புகள் இடம்பெற்றன. 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அஷ்விதா கலைக்கூடத்தில் இந்தியாவின் பல கலைக்கூடங்களில் இருந்து ராமானுஜத்தின் படைப்புகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.

ராமானுஜத்தின் படைப்புகளின் சேகரிப்புகள் தேசிய நவீன கலை காட்சியகம்(National gallery of modern art), சென்னை லலித் கலா அகாடமி, மும்பையின் செமௌள்ட் கலைக் கூடம் போன்ற இடங்களில் உள்ளன. டெல்லியில் உள்ள கிரண் நாடார் அருங்காட்சியகத்தில் ராமானுஜத்தின் படைப்புகளுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நிரந்தர பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நூல்கள்

ராமானுஜத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் சி. மோகன் விந்தை கலைஞனின் உருவச்சித்திரம் என்ற நாவலை எழுதியுள்ளார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.