first review completed

குறிஞ்சிப்பாட்டு: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
Line 128: Line 128:
* பிரபாகரன் உரை -  http://kurinjippaattu.blogspot.com/2018/08/blog-post_30.html
* பிரபாகரன் உரை -  http://kurinjippaattu.blogspot.com/2018/08/blog-post_30.html
* கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம் (தொகுப்பாசிரியர்)
* கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம் (தொகுப்பாசிரியர்)
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:13, 9 March 2022

குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்க இலக்கிய பதினெண்மேற்கணக்கு நுல்களுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் எட்டாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் புலவர் கபிலர். இது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் மக்களின் அக ஒழுக்கம் சார்ந்த பண்பாட்டினை விளக்குவதற்காகப் பாடப்பட்டது. இது 261 அடிகளை உடையது. இது அகப்பாடல் சார்ந்த இலக்கியமாகும். இந்தக் குறிஞ்சிப்பாட்டுக்குப் ‘பெருங்குறிஞ்சி’ என்ற பெயரும் உண்டு.

புலவர் அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் புலவர் கபிலர். சங்க இலக்கியப் பாடல்களில் மிகுதியான பாடல்கள் கபிலர் இயற்றியவையே. இவர் பாடிய அகப்பாடல்கள் 197. நற்றிணை 20, குறுந்தொகை 29, ஐங்குறுநூறு(குறிஞ்சி) 100, பதிற்றுப்பத்து (ஏழாம்பத்து) 10, அகநானூறு 18, புறநானூறு 28, குறிஞ்சிப்பாட்டு 1, கலித்தொகை (குறிஞ்சிக்கலி) 29. இவற்றுள் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்கள் மட்டுமே 193 இருக்கின்றன.

கபிலர் அகப்பாடல்களை மட்டும் பாடுவதில் வல்லவர் அல்லர். புறப்பாடல்களைப் புனைவதிலும் வல்லவர்தான். புறநானூற்றிலே 28 பாடல்களும், பதிற்றுப்பத்தில் பத்துப்பாடல்களும் என 38 புறப்பாடல்கள் இவருடையன.

கபிலரால் பாடப்பெற்ற மன்னர்கள் செல்வக் கடுங்கோ வாழியாதன், அகுதை,அந்துவன், ஆரிய அரசன் பிரகதத்தன், இருங்கோவேள், எவ்வி, ஓரி, காரி, நள்ளி, பாரி,பேகன், விச்சிக்கோன், பொறையன் போன்றோர். இவர்களைத் தவிர பாரி மகளிர்,கழாத்தலையார் மற்றும் பேகனின் மனைவி கண்ணகியும் அவரின் கவிதைவரிகளுக்குள் கால் பதித்தவர்கள்.

கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தில் சிறப்பித்துப் பாடியதால், அம்மன்னன் இவருக்கு நூறாயிரம் கானம் (நூறாயிரம் பொற்காசும்) வழங்கினான். ‘நன்றா என்றும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்’ என்று ஏழாம்பத்தின் பதிகம் தெரிவிக்கிறது.

நூல் அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் புலவர் கபிலர். இந்த நூல்கள் 261 அடிகளை உடையது. இது அகவல் பாவால் பாடப்பட்டது. இது குறிஞ்சித்திணை அறத்தொடு நிற்றல் துறையில் தோழி கூற்றாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடும் பழைய வெண்பா குறிஞ்சிப்பாட்டைக் ‘கோல் குறிஞ்சி’ என்று சுட்டுகிறது.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து (பழைய வெண்பா)

‘கோல் குறிஞ்சி’ என்றால், ‘தண்டுடைய குறிஞ்சி’ என்று பொருள். குறிஞ்சிப்பாட்டுக்குப் புலவர் கபிலர் ஏன் இவ்வாறு பெயரிட்டால் என்பது குறித்து உரையாசிரியர் நச்சினார்க்கினியர், "இதற்குக் குறிஞ்சியென்று பெயர்கூறினார், இயற்கைப்புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின்; அன்றியும் முதலானும் கருவானும் குறிஞ்சிக்குரியனவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்” என்று கூறியுள்ளார்.

நிலம் அறிமுகம்

மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இந்தக் குறிஞ்சிப்பாட்டின் களம் குறிஞ்சிநிலமாகும். இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் இணைந்து அந்தப் பூக்களைப் பறித்துப் பாறைமீது குவித்து விளையாடியதாக இந்தப் பாடலில் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

பா வகை அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு தமிழ் இலக்கணம் வகுத்தள்ள நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பாவினால் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியப்பாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞரின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவருக்கு மிகுதியான உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும்.

துறை அறிமுகம்

அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலியன குறிஞ்சித் திணைக்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகள் ஆகும். அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல் ஆகிய இரண்டு துறைகளும் குறிஞ்சித் திணைக்குத் துணை நிற்கின்றன.

261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளது. தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாட்டின் முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள்.

தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும் தோழியையும் அனுப்பிய ஒருநாள், தலைவியை நோக்கி வந்த சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும், அன்று முதல் அவர்களுக்கிடையே தோன்றிய காதலையும், தலைவன் தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர் உண்டு வாக்குறுதி (சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும், பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம் விரிவாகக் கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக இசையும் வகையில் முயற்சி செய்கிறாள் தோழி.

நூல் சுருக்கம்

தலைவனைக் கண்ட நாள் முதலாய்த் தலைவியின் உள்ள வாட்டம் உடல்வாட்டமாய் மாற, இதுகண்ட செவிலியும் மனம் கொண்ட மகளின் மாற்றம் அறிய மற்றோரை வினவுகின்றாள். தெய்வம் வேண்டிப் பரவுகின்றாள்; நோய் தீர வேண்டுகின்றாள். இது தான் தருணம் என்று நினைக்கின்றாள் தோழி. அவள் தலைவியின் அல்லலை அன்னையிடம் அமைதியாகச் சொல்லுகின்றாள். அம்மா! நீயும் தலைவியின் நோய்க்குக் காரணம் புரியாமல் வருந்துகின்றாய். தலைவியோ உள்ளத் துயரை உரைக்க முடியாமல் உழலுகின்றாள். நானும் தலைவியிடம் கேட்டேன். அவள், ‘நான் தலைவனோடு கொண்ட காதலை வெளியிட்டால் நம் குடிக்கு பழி ஏற்படுமோ? மனத்திலே நினைத்தவனை ஊரறிய மணம் செய்து கொடுக்கவில்லையானால், மறுபிறவியிலேனும் அவனும் நானும் ஒன்று சேருவோம்’ என்று கூறிக் கண் கலங்கினாள். நானும் உன்னிடம் இதனைச் சொல்ல அஞ்சுகின்றேன். எனினும் உன் சம்மதமில்லாமல் நாங்கள் தேர்ந்தெடுத்த இச்செயலைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

தினைப்புனம் காப்பதற்கு எம்மை அனுப்பினாய். நாங்களும் தினைப்புனம் காவலை ஒழுங்காகச் செய்தோம். உச்சிப்பொழுதில் அருவியில் ஆடினோம். பலமலர்களைத் தேடிப் பறித்து வந்து பாறையில் குவித்துத் தழையாடை தொடுத்தோம். தலையிலே சூடினோம். இப்படியாக அசோக மர நிழலில் இளைப்பாறி இருந்தோம். காளையொருவன் வந்தான்; கண்கவரும் வனப்பினன்; கையிலே வில்; காலிலே கழல்; அவனோடு வேட்டை நாய்களும் வந்தன; அவை கண்டு அஞ்சிவேற்றிடம் செல்ல முனைந்தோம்; எம்மருகில் வந்தான் அவன்; இன்சொல் பேசி எம் மெல்லியல்பு புகழ்ந்தான்; எம்மிடமிருந்து தப்பிச் சென்ற விலங்குகள் திசை தப்பி இவ்விடம் வந்தனவோ என்று வினாவினான். நாங்கள் அமைதியாக இருந்தாம்; தப்பிப் போனதின் தடம் காட்டாவிடினும் மறுமொழியேனும் பேசக் கூடாதா என்றான். அந்நேரம் கானவர் விரட்டிய யானை ஒன்று எம்மை நோக்கி ஓடி வந்தது. நாங்களும் அஞ்சி, மயில் போல் நடுங்கி அவன் பக்கலில் நெருங்கினோம். அவனோ, யானையின்மேல் அம்பெய்தான். அம்பு தைத்த யானை வந்தவழியே திரும்பிச் சென்றது.

யானை போனாலும் எம் நடுக்கம் தீரவில்லை. நடுக்கத்துடன் நின்றிருந்தோம். அவன் தலைவியைப் பார்த்து, ‘அஞ்சாதே, உன் அழகை நுகர்வேன்’ என்றான். என்னையும் நோக்கி முறுவலித்தான். தலைவியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். ‘உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன் பிரிதலும் இலேன்’என்று கூறி மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் தலைவியிடம் உறுதியளித்தான். அருவி நீரை அள்ளிப் பருகி ஆணையிட்டான்.

மாலை நேரமும் வந்தது. இருவரும் பிரிய வேண்டிய கட்டாயம், தன்னைப்பிரிதற்குத் தலைவி வருந்துவாள் என்பது தலைவனுக்கும் தெரியும். அதனால் ‘சிலநாட்களிலே உன்னை நாடறிய மணம் செய்வேன். அதுவரை பொறுத்திரு’ என்று ஆறுதல் சொல்லி ஆற்றுவித்தான்.

அவன் உயர்க்குடியில் பிறந்தவன்; வாய்மை தவறாதவன்; தலைவியை மணந்து கொள்ளும் விருப்பமுடையவன்; இத்தகு நல்லியல்பினனாகிய தலைவன், எம்மைப் பிரிய மனமின்றி நம் ஊருணிக்கரை வரை வந்தான்; பின்னர்அகலா காதலோடு அகன்று சென்றான். அதுநாள் முதல் தலைவியைக் காண இரவிலே வருகின்றான். அவன் இரவில் வரும் இடர் எண்ணி இவளும் (தலைவியும்) கலங்குகின்றாள். இதுதான் அவள் நோய் என்று உண்மை உரைத்தாள் தோழி!

நூல் சிறப்புகள்

ஆரியரின் திருமண முறைகளுக்கும் தமிழர் திருமண முறைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ள இந்தக் குறிஞ்சிப்பாட்டு உதவுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களின் வழியாகத் தமிழரின் மணமுறைகளாக மரபுவழி மணம், சேவை மணம், போர்நிகழ்த்திப் புரியும் மணம், துணங்கையாடி கலையை வெளிப்படுத்திப் புரியும் மணம், பரிசம் கொடுத்துப் (பொன், பொருள், நிலம்) புரியும் மணம், ஏறு தழுவி வீரத்தைவெளிப்படுத்திப் புரியும் மணம், மடலேறி தன்னை வதைத்துக்கொண்டு புரியும் மணம் ஆகிய மணமுறைகளைக் காணமுடிகிறது.   காதலும் வீரமும் தமிழரின் இரு கண்கள் என்பதற்கு ஏற்ப, ஏறுதழுவுதல், போர்புரிதல் ஆகிய முறைகளில் தம் வீரத்தை வெளிப்படுத்தியும், கொடிய விலங்குகளை எதிர்க்கொண்டு, அவற்றை விரட்டியும் வீழ்த்தியும் தன் வலிமையை நிலைநாட்டியும் ஓர் ஆண் தான் விரும்பிய பெண்ணின் காதலைப் பெற்று, பின்னர் அவர்களின் காதல் களவாகத் தொடர்ந்து பின்பு கற்பாக மாறும் சூழலும் பழந்தமிழகத்தில் பெருவாரியாக நிகழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாட்டில் வரும் தலைவன் யானையை எதிர்க்கொண்டு, தன் வீரத்தைத் தான் விரும்பும் தலைவிக்குப் புலப்படுத்துகிறான்.

குறிஞ்சி நிலத்தில் பூத்துக்குலுங்கிய 99 மலர்களின் பெயர்கள் பற்றிய அறிய முடிகிறது.

ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான் பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,

குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்,

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,

தாழை, தளவம், முள் தாள் தாமரை,

ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,

காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,

அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங் குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும் (குறிஞ்சிப்பாட்டு : 61-98)

உரைகள்

  • நச்சினார்க்கினியர் உரை - உ.வே.சா பதிப்பு (1889)

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.