under review

முகுந்தராஜ் சுப்ரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 24: Line 24:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://mugunth.blogspot.com/ முகுந்தராஜ் சுப்ரமணியன்: வலைதளம்]
* [https://mugunth.blogspot.com/ முகுந்தராஜ் சுப்ரமணியன்: வலைதளம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|23-Sep-2023, 19:18:00 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:51, 13 June 2024

முகுந்தராஜ் சுப்ரமணியன்

முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிறப்பு: 1972) கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். இணையதளங்களில் தமிழின் பயன்பாட்டை விரைவுபடுத்திய இகலப்பை, தமிழா, தமிழ் ஓப்பன் ஆபீஸ், மோஸிலா உலாவி, தண்டர்ஃபேர்ட் மின்னஞ்சல் பொதி ஆகியவற்றை வடிவமைத்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

முகுந்தராஜ் சுப்ரமணியன் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சுப்பிரமணி, அமராவதி இணையருக்கு 1972-ல் பிறந்தார். அமராவதியிலுள்ள சைனிக் பள்ளியில் படித்தார். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். 1997-ல் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். மலேசியாவில் பணியாற்றினார். பெங்களூரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார்.

அமைப்புப்பணிகள்

முகுந்தராஜ் சுப்ரமணியன் பிரிஸ்பேனில் 'தாய்த் தமிழ்' என்ற வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து அதன் முதல்வராக நிர்வகித்து வருகிறார். புலம்பெயர்ந்தவர்களிடையே தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் அமைப்பாக தாய்த்தமிழ் பள்ளி உள்ளது.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தமிழா! கணிமைத்திட்டம்

முகுந்தராஜ் சுப்ரமணியன் 'தமிழா!' கணிமைத்திட்டத்தை மலேசியாவிலுள்ள இளஞ்செழியனுடன் இணை ஆரம்பித்தார். தமிழர்களுக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. நிரலர்கள் கணினியில் தமிழின் பயன்பாட்டுக்கு பங்களித்தலை எளிதாக்கும் முயற்சியாக தமிழா திட்டம் உள்ளது.

இ-கலப்பை

இ-கலப்பை தமிழ் விசைப்பலகை மேலாண்மைச் செயலி. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் பல்வேறு நிரல்களில் வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து நேரடியாகத் தமிழ் எழுத்துக்களை தட்டச்சிட உதவுகிறது. இது தமிழில் யுனிகோடின் பயன்பாட்டை ஊக்குவித்து அதன்மூலம் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை விரிவுபடுத்தியது.

தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி

ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியினை பின்னர் தகடூர் கோபி மேம்படுத்தி பராமரித்தார்.

தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி

பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. முகுந்தராஜ் பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து இதன் உருவாக்கத்தில் பங்களித்தார்.

விருது

  • 2012-ல் தமிழ் இலக்கியத் தோட்டம், காலச்சுவடு அறக்கட்டளை இணைந்து வழங்கும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றார்.

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Sep-2023, 19:18:00 IST