under review

கோவை அய்யாமுத்து: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 82: Line 82:
* பிச்சைக்காரி
* பிச்சைக்காரி
* கஞ்சன்
* கஞ்சன்
===== தன்வரலாறு =====
* எனது நினைவுகள்
===== பிற =====
===== பிற =====
* அக்காளும் தங்கையும்
* அக்காளும் தங்கையும்
Line 105: Line 109:
* [https://www.youtube.com/watch?v=A7uNk49QBdk&ab_channel=VIJAYANG எனது நினைவுகள், சித்ரா பாலசுப்பிரமணியன்,Gandhi Study Centre]
* [https://www.youtube.com/watch?v=A7uNk49QBdk&ab_channel=VIJAYANG எனது நினைவுகள், சித்ரா பாலசுப்பிரமணியன்,Gandhi Study Centre]
*[https://groups.google.com/g/mintamil/c/eBDS2_BZbOQ கோவை அய்யா முத்து நினைவுகள் பற்றி ராகவன் தம்பி]
*[https://groups.google.com/g/mintamil/c/eBDS2_BZbOQ கோவை அய்யா முத்து நினைவுகள் பற்றி ராகவன் தம்பி]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:39:06 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:52, 13 June 2024

To read the article in English: Kovai Ayyamuthu. ‎

கோவை அய்யாமுத்து

கோவை அய்யாமுத்து (டிசம்பர் 1898 - டிசம்பர் 21, 1975) தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், காந்தியவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தில் டிசம்பர் 1898-ல் அங்கண்ணன், மாரம்மாள் இணையருக்குப் பிறந்தார். கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன் அவருக்கு எல்லாவகையிலும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். அய்யாமுத்து கோவை செயிண்ட் அந்தோணியார் பள்ளியிலும், பின்னர் லண்டன் மிஷன் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

கோவை அய்யாமுத்து ஸ்பென்சர் கம்பெனி உட்பட பல வேலைகளில் இருந்தார். 1918-ல் ராணுவத்தில் சேர்ந்து ஈராக்கில் பணியாற்றினார். 1921-ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணந்தார். மனைவி கோவிந்தம்மாள் காந்தியவாதி, கதர் தொண்டர்.

அரசியல் வாழ்க்கை

கோவை அய்யாமுத்து
காங்கிரஸ்

கோவை அய்யாமுத்து மாணவராக இருக்கையில் வ.உ. சிதம்பரம் பிள்ளையையும் சுப்ரமணிய சிவாவையும் காவல்துறையினர் விலங்கிட்டு இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார். 1918-ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றினார்.

கோவை அய்யாமுத்து பெல்காம், லாஹூர், கராச்சி, லக்னோ, ராம்கர், ஹரிபுரா, நாசிக், ஆவடி ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டார். தமிழகத்தில் திருவண்ணாமலை, பொள்ளாச்சி, திருப்பூர், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், மேட்டுப்பாளையம், திருச்செங்கோடு, பரமக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி எனப் பல ஊர்களில் நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடுகளில் பேசினார்.

கோவை அய்யாமுத்து தன் சாதியினரின் எதிர்ப்புகளுக்கு நடுவே தலித் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். உண்மை நாடுவோர் சங்கம் ஒன்றை நிறுவி கிராம வாலிபர் பலர் அதில் பங்கு கொண்டு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் செய்தார்

அய்யாமுத்து 1931-ல் சாத்தான்குளத்தில் பேசிய உரைக்காக ஆறுமாதம் சிறை சென்றார்.1932-ல் புஞ்சை புளியம்பட்டியில் தாழ்த்தப்பட்டோர் பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமைக்காக நடந்த போராட்டத்தில் மனைவியுடன் கலந்துகொண்டார். போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.

1932-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய காந்தியை பிரிட்டிஷ் அரசு மும்பையில் கைது செய்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அய்யாமுத்துவும் அவர் மனைவி கோவிந்தம்மாளும் கலந்துகொண்டனர். கோவிந்தம்மாள் மார்ச் 1932-ல் கைதுசெய்யப்பட்டு ஆறுமாதம் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அய்யாமுத்து ஆறுமாத தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜாஜி விடுத்த அழைப்பை ஏற்று 1933-ம் ஆண்டு திருச்செங்கோட்டில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் அய்யாமுத்துவும் கோவிந்தம்மாளும் கலந்து கொண்டு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள். அய்யாமுத்துவும் அவர் மனைவியும் பல ஊர்களில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

கோவை அய்யாமுத்து சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். 1950-ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் சிறிதுகாலம் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார்.

கதர் இயக்கம்

காந்தியின் அறிவுரைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். ஆங்காங்கே ராட்டையில் நூல் நூற்பவர்களுடைய நூல்களை வாங்கி திருப்பூர் காதி வஸ்த்திராலயத்துக்கு அனுப்பி வந்தார். அவரே கோவையில் ஒரு கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார்.

1926-ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.

1933-ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார்.

1936-ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார்.

1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தார். ஊர் ஊராகச் சென்று கிராம மக்களை கதர் நூற்கவும், கதர் உடைகளை அணியவும், நூற்ற நூலை திருப்பூர் காதி வஸ்த்திராலயத்தில் கொடுத்து துணியாக வாங்கி அணியவும் பழக்கப்படுத்தினார்.

'தமிழ்நாடு சர்க்கா சங்க'த்தின் தலைவராக விளங்கியபோது அய்யாமுத்து புதிய நூற்புக் கருவிகளை அறிமுகப்படுத்தினார், இடைத்தரகர்களை ஒழித்தார்.நூற்புப் போட்டிகளை நடத்தினார். நூற்போருக்கு ஊக்கப் பரிசாகச் சேலைகள் அளித்தார். உயர்ரகச் சாயங்களும், அச்சுகளும் பயன்படுத்த வழி செய்தார். நூற்புக் கண்காட்சிகள் நடத்தினார். காந்தி நடத்திய புதிய சர்க்கா வடிவமைப்புப் போட்டியில் கோவையில் இருந்து பலர் கலந்துகொள்ளச் செய்தார்.கதரியக்கத்திலேயே அய்யாமுத்துவின் முதன்மைப் பங்களிப்பு இருந்தது. ஆகவே கதர் அய்யாமுத்து என்று அழைக்கப்பட்டார்.

வைக்கம் போராட்டம்

கோவை அய்யாமுத்து 1924-ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்., எஸ்.இராமநாதன் ஆகியோருடன் கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறைசென்றார். வைக்கம் போராட்டத்தில் முதலில் சிறைத்தண்டனை பெற்ற தமிழர் கோவை அய்யாமுத்துதான். ஊர்திரும்பிய அய்யாமுத்துவுக்கு ராஜாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வைக்கம் போராட்டத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி வழங்கினார் அய்யாமுத்து. பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார்.

தலைவர்களுடனான தொடர்புகள்

ஈ.வெ.ராமசாமிப்பெரியார்

காங்கிரஸில் இருக்கையிலேயே கோவை அய்யா முத்து ஈ.வெ.ராமசாமிப் பெரியாருடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார். அந்நட்பையும் பின்னர் வந்த விலக்கத்தையும் தன் தன்வரலாற்று நூலில் பதிவுசெய்துள்ளார். ‘குடியரசு’ பத்திரிகையை ஈரோட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளியிட அய்யாமுத்துவை பெரியார் நியமித்தார். பெரியாருடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக குடியரசு இதழிலிருந்து விலகினார்.

காந்தி

1921-ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு கோவை அய்யாமுத்துவும், அவரின் மனைவியும் காங்கிரஸில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். 1931 முதல் ஹரிஜன இயக்கத்தில் ஈடுபட்டார். காந்தியுடன் நேரடியான தொடர்பு இருந்தது. காந்தியுடன் கொண்ட பூசல்களையும் தன்வரலாற்றில் எழுதியிருக்கிறார்.

திருச்செங்கோட்டில் சௌந்தரா கைலாசத்தின் தாய்வழிப் பாட்டனாரான பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் எனும் ஜமீந்தார் கொடுத்த நிலத்தில் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அய்யாமுத்து பெரும்பாடுபட்டு கட்டடங்களை உருவாக்கத் துணை புரிந்தார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ராட்டையில் நூல் நூற்க வேண்டும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியும் ராட்டை நூல் நூற்கும் பயிற்சியும் தரப்பட்டது. தீவிரமாக மதுவிலக்குப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

கோவை அய்யாமுத்து 1951-ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடியில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்தார்

ராஜாஜி

சி.ராஜகோபாலாச்சாரியிடம் பற்று கொண்டிருந்த அய்யாமுத்து ராஜாஜி என் தந்தை என்னும் நூலை எழுதினார். பின்னர் 1960-லிருந்து 1967 வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார். 1967-ல் அதிலிருந்து விலகினார். பொள்ளாச்சியில் தன் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.

நாடக வாழ்க்கை

1903-ல் அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன் கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் சிறுவனாக வேடமிட்டார். அந்நாடகமே தன்னை கலையிலக்கிய தளம் நோக்கி ஈர்த்தது என்று அய்யாமுத்து பதிவுசெய்துள்ளார். அரசியல் ஈடுபாடு வந்தபின் அய்யாமுத்து பல நாடகங்களில் நடித்து, அரங்காற்றுகை செய்தார்.

அய்யாமுத்து எழுதிய நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை என்னும் நாடகத்தை மதுரை தேவி பாலவிநோத சபை நிகழ்த்தக்கூடாது என்று 1934-ல் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தடைவிதித்தார். செப்டம்பர் 1934-ல் இத்தடையை திரும்பப்பெற்றார்.

கோவை அய்யாமுத்து கஞ்சன், இன்பசாகரன் போன்ற நாடக நூல்களை எழுதினார்.

எனது நினைவுகள்

இதழியல்

கோவை அய்யாமுத்து வின்சென்ட் சகோதரர்கள் தொடங்கிய இருமொழி இதழான 'மகாஜன நேசன்' இதழில் தமிழ்ப் பகுதிக்கு ஆசிரியராக பணியாற்றினார்

கதர் இயக்கத்திற்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தினார்.

ஈ.வெ.ரா நடத்திய குடியரசு இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியம்

’எனது நினைவுகள்’ என்ற இவரின் தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக உள்ளது. தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளில் மிகச்சிறந்த சிலவற்றில் ஒன்று என கருதப்படுகிறது.

விருது/ கெளரவம்

1972-ல் இந்திராகாந்தி டெல்லி சுதந்திரதின வெள்ளி விழாவில் அய்யாமுத்துவுக்கு தேசபக்தர்களுக்கான தாமிரப்பத்திரம் வழங்கினார்.

மறைவு

மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து டிசம்பர் 21, 1975-ல் காலமானார். அய்யாமுத்து காலமான அடுத்த வாரமே 27-டிசம்பர்-1975ல் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார். அய்யாமுத்துவும் கோவிந்தம்மாளும் விரும்பியபடி அவர்களின் நிலம் சர்வோதய சங்கத்துக்கு அளிக்கப்பட்டது.

நூல்கள்

மேயோ கூற்று மெய்யா - பொய்யா?
கட்டுரை
  • சுதந்திரனுக்கு முன்னும் பின்னும்
  • நாம் எங்கே செல்கிறோம்?
  • சோசலிசம்
  • சுதந்திரா கட்சி ஏன்?
நாடகம்
  • இன்பசாகரன்
  • நச்சுப் பொய்கை அல்லது நாரியர் வேட்கை (1934)
  • இராஜபக்தி
  • மேவாரின் வீழ்ச்சி
  • பிச்சைக்காரி
  • கஞ்சன்
தன்வரலாறு
  • எனது நினைவுகள்
பிற
  • அக்காளும் தங்கையும்
  • இராமசாமியும் கதரும்
  • எனது நினைவுகள்
  • சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம்
  • திருவிழா
  • தேசத்தொண்டனும் கிராமவாசியும்
  • பஞ்சமா பாதகங்கள்
  • மேயோ கூற்று மெய்யா பொய்யா
  • மேவாரின் வீழ்ச்சி
  • ராஜாஜி என் தந்தை
  • வேற்றுமை விருஷம் வேறோடு வீழ்க(1931)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:06 IST