under review

முகியித்தீன் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 9: Line 9:


== காப்பியத்தின் கதைச் சுருக்கம் ==
== காப்பியத்தின் கதைச் சுருக்கம் ==
முகியித்தீன் அப்துல்காதிறு ஜிலானி (றலி), பொயு 1077-ஆம் ஆண்டு ரமலான் மாதம் முதல் நாளில் ஈரான் நாட்டு தவரிஸ்தான் மாநிலத்தில் உள்ள நீப் என்னும் ஊரில், அபூசாலி-பாத்திமா இணையருக்குப் பிறந்தார். நபிகள் நாயகத்தின் தலைமுறையில் தோன்றியதால் நபிகளின் திருப்பேரராகப் போற்றப்படுகிறார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பாக்தாத் நகரில் இறைக்கல்வி பயின்ற முகியித்தீன் இறைத்தொண்டும், அறத்தொண்டும் புரிந்தார். மக்களை நல்வழிப்படுத்தினார். இறையருளால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். அவரது வாழ்க்கை வரலாறே இக்காப்பியம்.
முகியித்தீன் அப்துல்காதிறு ஜிலானி (றலி), பொயு 1077-ம் ஆண்டு ரமலான் மாதம் முதல் நாளில் ஈரான் நாட்டு தவரிஸ்தான் மாநிலத்தில் உள்ள நீப் என்னும் ஊரில், அபூசாலி-பாத்திமா இணையருக்குப் பிறந்தார். நபிகள் நாயகத்தின் தலைமுறையில் தோன்றியதால் நபிகளின் திருப்பேரராகப் போற்றப்படுகிறார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பாக்தாத் நகரில் இறைக்கல்வி பயின்ற முகியித்தீன் இறைத்தொண்டும், அறத்தொண்டும் புரிந்தார். மக்களை நல்வழிப்படுத்தினார். இறையருளால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். அவரது வாழ்க்கை வரலாறே இக்காப்பியம்.


== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
Line 69: Line 69:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|18-Dec-2023, 10:40:55 IST}}

Latest revision as of 14:07, 13 June 2024

முகியித்தீன் புராணம்

முகியித்தீன் புராணம் (1816) இஸ்லாமியக் காப்பிய நூல்களுள் ஒன்று. முகியித்தீன் அப்துல்காதிறு ஜிலானி (றலி) அவர்களின் வாழ்க்கை வரலாறே இக்காப்பியம் இதனை இயற்றியவர், இலங்கையைச் சேர்ந்த பதுறுத்தீன் புலவர். இந்நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது.

பதிப்பு, வெளியீடு

முகியித்தீன் புராணம் இரண்டு பாகங்களைக் கொண்டது. பதுறுத்தீன் புலவரால் மே 20, 1816 அன்று இந்நூல் இயற்றப்பட்டதாக நூலில் குறிப்பு உள்ளது. முதல் பாகம், 1901-லும், இரண்டாம் பாகம், 1903-லும், சென்னை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

முகியித்தீன் புராணத்தை இயற்றியவர், பதுறுத்தீன் புலவர். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். மகா வித்துவான் என்று போற்றப்பட்டவர். உசைன் நயினார் என்பவரின் மகனான செய்கு மீரான் என்பவர் பதுறுத்தீன் புலவரை ஆதரித்தார். பதுறுத்தீன் புலவர், சென்னையில் பிறந்து பின் இலங்கைக்குச் சென்று வாழ்ந்தவர் என்றும், இலங்கையிலேயே பிறந்து வாழ்ந்தவர் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. பதுறுத்தீன் புலவர், முகியித்தீன் புராணம் தவிர்த்து வேறு நூல்கள் எதையும் இயற்றவில்லை. பதுறுத்தீன் புலவரைப் பற்றிய பிற விவரங்களை அறிய இயலவில்லை.

காப்பியத்தின் கதைச் சுருக்கம்

முகியித்தீன் அப்துல்காதிறு ஜிலானி (றலி), பொயு 1077-ம் ஆண்டு ரமலான் மாதம் முதல் நாளில் ஈரான் நாட்டு தவரிஸ்தான் மாநிலத்தில் உள்ள நீப் என்னும் ஊரில், அபூசாலி-பாத்திமா இணையருக்குப் பிறந்தார். நபிகள் நாயகத்தின் தலைமுறையில் தோன்றியதால் நபிகளின் திருப்பேரராகப் போற்றப்படுகிறார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பாக்தாத் நகரில் இறைக்கல்வி பயின்ற முகியித்தீன் இறைத்தொண்டும், அறத்தொண்டும் புரிந்தார். மக்களை நல்வழிப்படுத்தினார். இறையருளால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். அவரது வாழ்க்கை வரலாறே இக்காப்பியம்.

நூல் அமைப்பு

முகியித்தீன் புராணம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் நாற்பது படலங்களும், இரண்டாம் பாகத்தில் முப்பத்து நான்கு படலங்களும் உள்ளன. முதல் பாகத்தில் 2162 விருத்தங்களும், இரண்டாம் பாகத்தில் 1821 விருத்தங்களும் இடம்பெற்றுள்ளன. முகியித்தீன் புராணத்தில், மொத்தம் 74 படலங்களும், 3983 ஆசிரிய விருத்தங்களும் அமைந்துள்ளன.

முகியித்தீன் புராணத்தில், கடவுள் வாழ்த்துக்குப் பதிலாகப் பாயிரம் இடம் பெற்றுள்ளது. காப்புச் செய்யுளையும் சேர்த்து ஏழு திருவிருத்தங்களில் அல்லாஹ்வின் அருளை வேண்டியும், நபிமார்களைப் போற்றிப் புகழ்ந்தும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முகியித்தீன் புராணத்தில் யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்த பல சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மதிப்பீடு

முகியித்தீன் புராணத்தை, 1810-ல், செய்கு அப்துல் காதிறு நயினார் எனும் சேகனாப்புலவரும், 1814-ல், வண்ணக்களஞ்சியப் புலவரும் பாடியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் பதுறுத்தீன் புலவரும் முகியித்தீன் புராணத்தை 1816-ல், இயற்றி அரங்கேற்றினார். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களுள் பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முகியித்தீன் புராணம் மூன்றாமிடம் வகிக்கிறது (3983 பாடல்கள்). (பிற காப்பியங்கள்: புதூகுஷ்ஷாம் – 6786 பாடல்கள்; சீறாப்புராணம் – 5028).

உவமைகளும் உருவகங்களும், இயற்கை வருணனைகளும், அணி நயங்களும் அதிக அளவில் இடம்பெற்ற காப்பியமாக முகியித்தீன் புராணம் அமைந்துள்ளது. தமிழ்க் காப்பிய முறைகளைப் பின்பற்றி இயற்றப்பட்ட பழம்பெரும் இஸ்லாமியக் காப்பியங்களுள், முகியித்தீன் புராணம், குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

பாடல் நடை

நபிகள் நாயகம் வாழ்த்து

மேதினியிடத்தி லுற்றுவிளங்கு தீன்பயிரை யேற்றிக்
கோதிலாப் புலியுமானுங் குறுமுயற் குடமுமாவு
மீதிரைக் கயலுஞ் சோங்கும் விண்மதி யரியினோடு
மாதவத் துடனே பேசு முகம்மதைப் புகழுவோமே.

அலி இப்னு அப்தலீப் (றலி) வாழ்த்து

அட்டகிரி யட்டகஜ மட்டநா கங்களோ
டனந்தனு மயங்கி விடவே
கொட்டமிடு மத்தகரி துட்டமகு டத்தரசர்
கொற்றமு மடிந்து விடவே
வட்டமிடு மெய்ப்புரவி துல்துல்வடி வாள்கொடுறு
வன்குபி ரறுத்த திறலோர்
நெட்டநெடி யோனறுசி டத்தினிலு தித்தபுலி
நீண்மலர்ப் பதம்ப ணிகுவாம்.

அப்துல்காதிறு ஜிலானியின் ஹஜ்ஜுப் பயணம்

கடங்களுங் கடந்து மடங்கலைப் பிடித்துக்
கனலியி னாயிரங் கதிரு
மிடங்களுந் தென்கீழ்த் திசையின னெழும்பு
நிரையமு மொன்றுபட் டிடித்துக்
கடங்கொளு மண்ட கடாகத்திற் படுத்திக்
காச்சிவைத் திறக்கிய கொதிப்போ
திடங்கொள வுரைக்கு நாவொடு செவியுந்
தீய்ந்திடு பாலையுங் கடந்தார்

அப்துல்காதிறு ஜிலானியை மக்கள் வாழ்த்துதல்

வாடிய பயிர்க்கோர் மழையென வுதித்து
மருவுமென் குலத்திரு நிதியே
தேடரும் பொருளே வானவர் கடைந்த
திரைகட லுதித்ததெள் ளமுதே
தேடிய தவத்திற் றிரண்டுரு வெடுத்த
செந்திரு வனையமின் னரசே
நாடிய பொருளே யெனப்பல புகழ்ந்து
நன்குறப் போற்றிவாழ்த் தினரே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Dec-2023, 10:40:55 IST