under review

வாகீசர் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 12:56, 4 June 2024 by Logamadevi (talk | contribs)
வாகீசர் 3.jpg

தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. இதன் பதிவு எண் BBD3073.

வரலாறு

வாகீசர் தமிழ்ப்பள்ளி 1936-ம் ஆண்டு கோல சிலாங்கூர் தபால் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய பொன்னம்பலத்தின் மேற்பார்வையிலும் பொது மக்களின் ஆதரவினாலும்  எண் 82 ஸ்டேஷன் சாலையில் உள்ள கடையின் மேல் மாடி ஒன்றில் தொடங்கப்பட்டது. நாராயணன் என்பவரைத் தலைமையாசிரியராகக் கொண்டு வாகீசர் தமிழ்ப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1954-ம் ஆண்டில், கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரியாகச் செயலாற்றிய போரி என்பவரின் முயற்சியால், தஞ்சோங் கிராமாட்டில் புதிய பள்ளிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தஞ்சோங் கிராமாட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் 23 மாணவர்களுடன் ஜனவரி 1, 1957-ல் கருப்பண்ணன் என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

பழைய கட்டிடம் (1963)

1960-ம் ஆண்டில், கணேசா வித்தியாசாலை குருப் ஆப் தோட்டப் பள்ளியிலும் தெலுக் பியா தோட்டப் பள்ளியிலும் பயின்ற மாணவர்கள் மேல் வகுப்புப் படிப்புக்காக வாகீசர் தமிழ்ப்பள்ளிக்கு வந்தனர். 1960-ல் அரசாங்கத்தின் திட்டப்படி வாகீசர் தமிழ்ப்பள்ளியுடன் கணேசா வித்தியாசாலை குருப் ஆப் தோட்டப்பள்ளியும் தெலுக் பியா தோட்டப் பள்ளியும் இணைக்கப்பட்டு, 150 மாணவர்களுடன் 7 ஆசிரியர்களைக் கொண்டு ஒரு கூட்டுப் பள்ளியாக வாகீசர் தமிழ்ப்பள்ளி உருவெடுத்தது.

1962-ல் கல்வி அமைச்சர் காரியாலயத் திட்டப்படி சுல்தான் அப்துல் அஜீஸ் இடைநிலைப் பள்ளி, மலாய் ஆரம்பப் பள்ளி, வாகீசர் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளையும் ஒரே வேலிக்குள் ஏறக்குறைய பதினாறேகால் ஏக்கர் நிலத்தில் கட்டத் திட்டமிட்டுக் கட்டுமான வேலை தொடங்கப்பட்டது. மார்ச் 1, 1963-ல் கட்டுமான வேலை முற்றுப்பெற்று மார்ச் 18, 1963-ல் புதிய கட்டிடத்தில் வாகீசர் தமிழ்ப்பள்ளி இயங்கியது.

கட்டிடம்

பள்ளியின் பழைய கட்டிடம் (1965)

ஆண்டு தோறும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கைப் பெருக்கம், பள்ளியில் வகுப்பறைப் பற்றாக்குறையை உருவாக்கியது. 1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தலைமையாசிரியராகப் பணியாற்றிய குழ. கருப்பையா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் ஆதரவோடு பள்ளியில் இணைக்கட்டிடங்களை அமைத்தார். பள்ளியில் தொடர்ந்து மாணவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்ததால் மீண்டும் 2003-ம் ஆண்டு  மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ச. சாமிவேலு தலைமையில் இணைக்கட்டிடம் கட்டும் வேலை தொடங்கியது. 2005-ம் ஆண்டு, மேலும் ஒரு புதிய இணைக்கட்டிடத்தைக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2009-ம் ஆண்டு, ச. சாமிவேலுவின் முயற்சியால் நான்கு மாடிக் கட்டிட வேலை குத்தகைக்கு விடப்பட்டு, கட்டிட வேலையும் முடித்து வைக்கப்பட்டது. வாகீசர் தமிழ்ப்பள்ளியில், பாலர் வகுப்பு மாணவர்களுக்கான கட்டிடத்தையும் கல்வி அமைச்சு கட்டித் தந்தது.

பள்ளியின் தற்காலிக அமைப்பு

பள்ளியின் 2 மாடிக் கட்டிடம் (2003)

1962-ல் பள்ளிக்கட்டிடம் விரிவாக்கம் செய்ய வேண்டியதன் பொருட்டு, கணேசா வித்தியாசாலை, ஸ்ரீசுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் சிறிது காலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இன்றைய நிலை

கோல சிலாங்கூர் மாவட்டத்தில் பல வளர்ச்சிகளோடு வாகீசர் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகின்றது. கல்வி, இணைப்பாடம் என கோல சிலாங்கூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பள்ளியாக வாகீசர் தமிழ்ப்பள்ளி விளங்குகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியக் கல்வி அமைச்சு, மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page