being created

வைகானஸம்

From Tamil Wiki

வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.

ஆகமம்

ஆகமம் என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை பாஞ்சராத்ரம், வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்

வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் வந்து இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சாஸ்த்திரங்கள் எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.

வரலாறு

விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை (ஆசிரமங்கள்) விவரிக்கையில் வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறார். வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.

வைகானஸ ஆகம மரபு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கர்நாடகத்தின் தென்பகுதியிலும் மட்டுமே இருந்ததாகவே வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைகானஸ ஆகம நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும், அவை தமிழகத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும்; இங்கிருந்த வைணவ ஆலயத்தின் பூசகக்குடியினரால் அவை உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் ஶ்ரீனிவாஸ ராவ் கருதுகிறார்.

வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.

பொயு 11 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு அந்த ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் (பஞ்ச சம்ஸ்காரம்) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் விஷ்ணுபலி போன்ற சடங்குகள் உருவாயின.

வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறைதலைமுறையாக ஒரு குருமரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர்குழுவுக்குள்ளும் இறுதிவரை இருந்தாகவேண்டும். பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்புசார்ந்த தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்திநூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.

வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர்

ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்று தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப்போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.

உசாத்துணை

ஆச்சாரியப்பிரபாவம். இணையநூலகம்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.