under review

கே.பி. ஜானகி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 17:22, 22 May 2024 by Ramya (talk | contribs)
கே.பி. ஜானகி அம்மாள்

கே.பி. ஜானகி அம்மாள் (டிசம்பர் 9, 1917 - மார்ச் 1, 1992) தமிழ் நாடகக் கலைஞர், சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி. ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்தவர் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பழங்குடி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடினார். தமிழ்நாடு ஜனநாயக மகளிர் சங்கத்தின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

கே.பி. ஜானகி அம்மாள் பத்மநாபன், லட்சுமி இணையருக்கு டிசம்பர் 9, 1917-ல் ஒரே குழந்தையாகப் பிறந்தார். எட்டு வயதில் தாயை இழந்தார். பாட்டியிடம் வளர்ந்தார். கீழ ஆவணி மூல வீதியிலுள்ள அரசுப் பள்ளியில் அப்போதே எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இசை வகுப்பில் சேர்ந்தார்.

தனி வாழ்க்கை

கே.பி. ஜானகி அம்மாள் தன் நாடகக் குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை மணந்தார்.

நாடக வாழ்க்கை

கே.பி. ஜானகி அம்மாள்

கே.பி. ஜானகி அம்மாள் பாடகராக எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பழனியாபிள்ளை பாய்ஸ் கம்பெனியில் மாதம் இருபத்தியைந்து ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். அதன்பின் முன்னணி நடிகையாகி ஒரு நடிப்பு அரங்குக்கு முந்நூறு ரூபாய் பெருமளவு உயர்ந்தார். வள்ளித் திருமண நாடகத்தில் வள்ளியாகவும் கோவலன் நாடகத்தில் கண்ணகி, மாதவி என இரு வேடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்தார்.

தீண்டாமை அதிகமாக இருந்தபோது ஜானகி மேடையில் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸுடன் ஜோடியாக நடிக்கத் தேர்ந்தெடுக்க பட்டார். பல பெண் கலைஞர்கள் அவர் பிறந்த குடியை காரணம் காட்டி அவருடன் நடிக்கத் தயங்கிய நேரத்தில் கே.பி. ஜானகி அம்மாள் அவருடன் நடித்தார். ’வந்தே மாதரம்’, ‘ பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘விடுதலை விடுதலை’ போன்ற பாடல்களைப் பாடினார்.

விடுதலைப் போராட்டம்

1930-ல் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியின் போது முதன்முதலில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முதல் பெண்களில் ஒருவர். ஜானகி திரையரங்கில் கிடைத்த வருமானத்தை மக்களுக்காகவும், சுதந்திரப் போராட்டத்துக்காகவும் செலவு செய்தார். “மக்களின் நலனுக்காக குரல் எழுப்ப அவர் தயங்கியதில்லை. சிறை செல்வதும் அவருக்கு சகஜமாக இருந்தது” என சுதந்திரப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி நினைவு கூர்ந்தார். அரசியல்கைதியாக ஐந்துமுறை வேலூர் சிறைக்குச் சென்றுவந்தார்.

கே.பி. ஜானகி அம்மாள் முதிய வயதில்

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் கட்சி

கே.பி. ஜானகி அம்மாள் 1936-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மதுரை காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக பணியாற்றினார். கட்சி கூட்டங்களில் எப்போதும் தேசபக்தி பாடல்களை பாடினார். மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு முக்கிய பேச்சாளராகி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கு சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி

கம்யூனிஸ்ட் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு 1940-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கிராமங்களுக்கு கால்நடையாகச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டினார். மதுரையின் துவரிமான், சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ‘ஜானகி அம்மா கட்சி’ என்று அடையாளப்படுத்துமளவு செல்வாக்கு கொண்டிருந்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் மதுரை வந்தபோது பிரிட்டிஷ் அடக்குமுறைகளை மீறி முத்துராமலிங்கத் தேவரோடு ரயிலடியில் வரவேற்பு நிகழ்வுக்குத் தலைமை தாங்கி வரவேற்று, குதிரை வண்டியில் அவரோடு சென்றார்.

தேர்தல் அரசியல்

இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற மதுரை மாநகராட்சித் தேர்தலில் ஐந்தாவது வார்டு பூந்தோட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல காங்கிரஸ் தலைவர் சீனிவாசவரத அய்யங்கார் மற்றும் பரம்பரை கவுன்சிலர் முனீஸ்வர அய்யர் இருவரையும் தோற்கடித்தார். அதன்பின் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967-ல் மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானகி அம்மாளின் சட்டமன்ற உரைகளில் விவசாயிககள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளே அதிகம் இடம்பிடித்தன. துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்புப் போராட்டத்தில் ஏர்பிடித்து நிலத்தில் இறங்கி ஜானகியம்மாள் உழுதது

அமைப்புச் செயல்பாடுகள்

பொன்மலை பாப்பா உமாநாத்துடன் இணைந்து 1974-ல் தமிழ்நாடு ஜனநாயக மகளிர் சங்கத்தை நிறுவி அதன் முதல் தலைவரானார். பெண்களின் விடுதலை மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் பற்றிய அவரது உரைகள் ஆற்றினார். அரசியலில் பெண்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

பங்களிப்புகள்

  • மதுரை துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்புப் போராட்டத்தில், நிலத்தைச் சுற்றி காவல்துறையினர் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தபோது ஜானகி அம்மாள் ஏர்பிடித்து நிலத்தில் இறங்கி உழுது ‘உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கு’ என்று போராடினார்.
  • ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மற்றும் ஃப்ராங்க் சகோதரர்களால் துவக்கப்பட்ட ‘ஹார்வி மில்’ தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்று, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அவர்களுக்கு முறையான வேலை நேரமும், போதுமான ஊதியமும் பெற வழிவகை செய்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஊதியத்தை முறைப்படுத்துவதற்காக அவர் பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
  • நாடகக் கலைஞராக உழைத்துச் சேர்த்த இருநூறு பவுன் நகைகள் உள்ளிட்ட சொத்துகளை சுதந்திரப் போராட்ட காலத்திலேயே விற்றுச் செலவழித்தார். சொந்த வீட்டையும் இழந்தார்.
  • ‘மலைவேடன்’ பழங்குடியின மக்களைப் பட்டியலினத்தில் இணைக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கும் அதைக் கொண்டுசென்றார்.

மறைவு

கே.பி. ஜானகி அம்மாள் மார்ச் 1, 1992-ல் காலமானார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.