தேரூர் சிவன் பிள்ளை

From Tamil Wiki
தேரூர் சிவன் பிள்ளை

தேரூர் சிவன் பிள்ளை (எஸ்.சிவன் பிள்ளை) (21 டிசம்பர் 1910- ) சுதந்திரப்போராட்ட தியாகி. கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் . கிராம மறு அமைப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்காக பணியாற்றியவர்

பிறப்பு, கல்வி

தேரூர் சிவன் பிள்ளை பழைய திருவிதாங்கூரில் இன்றைய தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் 21 டிசம்பர் 1910ல் பிறந்தார். அவரது தந்தை தேரூர் சுப்ரமணிய பிள்ளை நிலக்கிழார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளராகவும் திருவிதாங்கூர் ஶ்ரீமூலம் பிரஜா சபை உறுப்பினராகவும் இருந்தார். தேரூர் சுப்ரமணிய பிள்ளை வைக்கம் சத்யாக்கிரகத்தில் பங்கெடுத்தார். சுசீந்திரம் ஆலயநுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்.

தேரூர் சிவன்பிள்ளை தேரூரிலும் நாகர்கோயிலும் பள்ளிக்கல்வியை முடித்தபின் திருவனந்தபுரம் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1933ல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

தேரூர் சிவன்பிள்ளை நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல்

தேரூர் சிவன் பிள்ளை கல்லூரியில் படிக்கையில் கல்லூரியில் இந்தியத் தேசிய காங்கிரஸின் கொடியை ஏற்றியமையால் நடவடிக்கைக்கு ஆளானார். இந்தியத் தேசியக் காங்கிரஸ் உறுப்பினராகவும் வெவ்வேறு பொறுப்புகளிலும் இருந்தார். திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயர் காங்கிரஸ் மீது நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட பிரஜா அவகாச பிரஸ்தானம் ( குடிமக்கள் உரிமை இயக்கம்) அவர் தலைமையில் நடைபெற்றது. 1937 ல் திவானுக்கு எதிராகப் போராடியமையால் ஆறுமாதம் சிறைத்தண்டனை பெற்றார். 1939ல் மீண்டும் அரசியல் போராட்டத்துக்காக 14 மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.

சிறைமீண்டபின் 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்தார். கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எதிரான போராட்டத்திற்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

சமூகப்பணி

தேரூர் சிவன் பிள்ளை 1946 ல் சென்னையில் காந்தியை சந்தித்தார். காந்தியின் ஆணைப்படி அதிகார அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு கிராம நிர்மாணம், தீண்டாமை ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டார். தன் ஊரான தேரூரில் தலித் மக்கள் வாழும் பகுதியில் அவர் வீடுகட்டி குடியேறியது அன்று குமரிமாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தலித் மக்களின் கல்விக்காக தொடர்ச்சியாக பணியாற்றினார். பொ.திரிகூடசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

மறைவு

வரலாற்று இடம்

கன்யாகுமரி மாவட்டத்தின் விடுதலைப்போராளிகளில் முக்கியமானவராக தேரூர் சிவன் பிள்ளை கருதப்படுகிறார். அதிகார அரசியலை புறக்கணித்து காந்திய இலட்சியவாதக் கொள்கைகளின்படி வாழ்ந்தவர் என்றும் அறியபப்டுகிறார்

உசாத்துணை

https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?11480