second review completed

லால்குடி ஜெயராமன்

From Tamil Wiki
நன்றி: The Hindu
நன்றி- betterindia.com

லால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்னாடக இசைக்கலைஞர், வயலின் கலைஞர், இசை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இசையமைப்பாளர். 'லால்குடி பாணி' என்ற தனித்துவமான வயலின் பாணியை கர்னாடக சங்கீதத்தில் ஏற்படுத்தினார்.

பிறப்பு,கல்வி

லால்குடி ஜெயராமன், கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் நேரடி சீடர்களில் ஒருவரான லால்குடி ராம ஐயரின் வழியில் வந்தவராக அறியப்படுகிறார்.

லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17, 1930-ல் லால்குடி வீ.ஆர். கோபல் ஐயர்- சாவித்ரி இணையருக்கு ஐந்து குழந்தைகளில் ஒருவராக திருச்சியை அடுத்த லால்குடிக்கு அருகில் இடையாத்துமங்கலத்தில் பிறந்தார். இவருக்கு பத்மாவதி, வைனிகா, ராஜலட்சுமி, ஶ்ரீமதி என்று நான்கு சகோதரிகள் உண்டு. இவர்களில் ஶ்ரீமதி என்ற திருமதி பிரம்மானந்தம் அம்மாள் பின்னாளில் லால்குடி ஜெயராமனிடம் வயலின் கற்று, அவரின் தனிக்கச்சேரிகளில் அவருடன் இணைந்து வாசிக்க ஆரம்பித்து, புகழ்பெற்ற வயலின் கலைஞராக உருவானார்.

லால்குடி ஜெயராமன் ஆரம்பக் கல்வியை லால்குடியில் துவக்கினார். பள்ளியில் ஆசிரியர் இவரின் கையில் அடித்ததினால் இவரின் தந்தை பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி தனியாக கணிதம், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

லால்குடி ஜெயராமன் மிக இளவயதிலேயே தன் தந்தையிடம் கர்னாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டும் பின்னர் வயலினும் பயின்றார்.

நன்றி- betterindia.com - மனைவியுடன்
நன்றி- betterindia.com

தனிவாழ்க்கை

லால்குடி ஜெயராமன் 1958-ல் ராஜலட்சுமியை மணந்தார். மகன் ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், மகள் லால்குடி விஜயலட்சுமி இருவரும் நன்கு அறியப்பட்ட வயலின் வித்வான்கள்.

நன்றி- betterindia.com - மகளுடன்

லால்குடி ஜெயராமன் முழு நேர வயலின் சங்கீதக் கலைஞராகவே வாழ்ந்தார்.

இசைப்பணி

லால்குடி ஜெயராமன் தமது 12 வயது முதலே இசைக்கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசிப்பவராக ஆரம்பித்து, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இசைப்பணியாற்றினார்.

லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. என். கிருஷ்ணன் என்ற கர்னாடக இசையின் வயலின் மும்மூர்த்திகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

லால்குடி ஜெயராமன் முதன்முதலில் மதுரை மணி ஐயருக்கு வாசிக்க ஆரம்பித்து அப்போதைய அனைத்து புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்துள்ளார். குறிப்பாக அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் , செம்பை வைத்தியநாத பாகவதர் , எம்.டி.ராமநாதன் , செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் , ஜி.என்.பாலசுப்ரமணியம் , ஆலத்தூர் கிருஷ்ணன், ஆலத்தூர் சகோதரர்கள், கே.வி.கிருஷ்ணன், மகாராஜபுரம் சந்தானம் , டி.கே.ஜெயராமன் , எம்.பாலமுரளிகிருஷ்ணா , முசிறி சுப்ரமணிய ஐயர் , மதுரை சோமு , எம்.எம். தண்டபாணி தேசிகர் , டி.வி.சங்கரநாராயணன் , டி.என். சேஷகோபாலன் மற்றும் புல்லாங்குழல் கலைஞர் என். ரமணி ஆகியோருடன் வாசித்துள்ளார். தமது சகோதரி திருமதி பிரம்மானந்தத்துடன் பல கச்சேரிகள் செய்துள்ளார்.

லால்குடி ஜெயராமன்(வயலின்), ஜி.என்.பாலசுப்ரமணியம்(வாய்ப்பாட்டு) மற்றும் பாலக்காடு ரகு(மிருதங்கம்) என்ற மூவர் அணி அக்காலங்களில் பெரும் செல்வாக்குடன் இருந்தது என்று இசைவிமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஜி.என்.பாலசுப்ரமணியம் 1965-ல் மறையும் வரை தொடர்ந்தது.

லால்குடி ஜெயராமன் 1966-ல் முதல் தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீணா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகைமையை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பாணி

லால்குடி ஜெயராமன் தனித்துவமான 'லால்குடி பாணி' முறையைவயலின் வாசிப்பதில் ஏற்படுத்தினார். இது பெரும்பாலும் மிடற்றிசை (வாய்ப்பாட்டு) கலைஞர்கள் தமது குரல்வளையினால் உருவாக்கும் ஓசைக்கு நிகராக (குரல்போலி) வயலினை கொண்டு உருவாக்கும் ஒரு முறை என்று வரையறுக்கலாம். இது பெரும்பாலும் இந்துஸ்தானி இசையில் சித்தாரை கொண்டு உருவாக்கும் 'கயாகி ஆங்' (பார்க்க- உஸ்தாத் விலாயத் கான்) என்னும் முறைக்கு மிக நெருக்கமானதாக சொல்லலாம்.

லால்குடி பாணி என்பது மூன்று நிலைகளில் உருவாக்கப்படுகிறது.

  • முதலாவதாக கர்னாடக இசையில் மிகவும் கவனமாக உருவாக்கப்படும் கமகம் மற்றும் அனுசுவரங்களை வயலின்மேல் செலுத்தப்படும் மாறுபட்ட விரல் அழுத்தங்களை கொண்டும், வயலின் மேல் இழையும் வில்லைக்கொண்டும், எப்படி ஒரு மிடற்றிசை கலைஞர் தமது மூச்சு மற்றும் இடைவெளிகளை கொண்டு ஒரு ஒசையை உருவாக்குகிறாரோ அப்படி வயலினைக்கொண்டு உருவாக்கப்படும்.
  • இரண்டாவது ஒரு பாடலின் உள்ளடக்கம் கேட்பவரின் மனதில் உருவாக்கும் உணர்வுகளை பல்வகைப்பட்ட நடைவேகத்தையும்(tempo), பலவகையான பாணிகளையும்(style), பல்வேறுபட்ட ஸ்தாய்களில் உருவாக்கப்படும் சங்கதிகளையும் கொண்டும் உருவாக்கப்படும்.
  • மூன்றாவதாக பல்வகைப்பட்ட இசை முறைமைகளையும் (musical pattern), தாள வகைகளையும்(rhythemic pattern) கொண்டு ஒரு பெரும் இசை அனுபவத்தை தருவதில் இந்த பாணி புகழ் பெற்றது. இந்த பாணியின் லயம் பெரும்பாலும் மெல்லிசையை அடியொற்றியே உருவாக்கப்படுவதால், கல்பனா சுவரத்தின் இறுதியில் வரும் கோர்வைகள் பெரும்பாலும் சிக்கலானதாக இல்லாமல் அழகாக எடுப்பில் ஒன்றிணைந்து வருவது லால்குடி பாணியின் தனித்துவங்களில் ஒன்றாகும் என்று புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் வரையறுக்கிறார்.

இசை ஆக்கங்கள்

லால்குடி ஜெயராமன் மேற்கத்திய பண்ணிசைக் கருவியான வயலினில் கர்னாடக சங்கீதத்தின் தேவைக்கேற்ப புதிய உத்திகளை உருவாக்கி அளித்தார். லால்குடி ஜெயராமன் கர்னாடக சங்கீதத்தில் வர்ணங்கள், கிருதிகள் மற்றும் தில்லானா பலவற்றை இயற்றினார். இவரின் தில்லானா நடனக்கலைஞர்களிடம் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. லால்குடி ஜெயராமன் 'தில்லானா சக்ரவர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

வர்ணங்கள்

லால்குடி ஜெயராமன் பொதுவாக வர்ணங்களை உருவாக்கக்கூடியவகையில் அமையாத ராகங்களான தேவநகரி மற்றும் நீலாம்பரியில் வர்ணங்களை அமைத்துக்காட்டினார்.

வர்ணம் ராகம் மொழி பாடப்பெற்ற தெய்வம்
சலமு செயனெலா வாலாஜி தெலுங்கு முருகன்
பரம கருணா கருடத்வனி தெலுங்கு முருகன்
நீவே கதியனி நளினகாந்தி தெலுங்கு முருகன்
வல்லபை நாயகம் மோகனகல்யாணி தமிழ் விநாயகர்
தேவி உன் பாதமே தேவகாந்தாரி தமிழ் சரஸ்வதி
ராமனை ரகுநாதனை அடானா தமிழ் ராமன்
திருமால் மருகா     அந்தோலிகா தமிழ் முருகன்
உன்னை யன்றி கல்யாணி தமிழ் பார்வதி
என்தோ பிரேமதோ பஹுதாரி தெலுங்கு முருகன்
தரனும் என் தாயே சாமா தமிழ் அம்பாள்
ஜலஜாக்ஷ நி பதமே அசாவேரி தெலுங்கு முருகன்
இந்த தாமசமேலா கானடா தெலுங்கு முருகன்
அருணோதயமே அன்பின் வடிவமே பவுலி தமிழ் சக்தி
நம்பும் அன்பர்க்கருளும் வரமு தமிழ்
நாதஸ்வரூபிணி நீலாம்பரி தெலுங்கு
எங்கும் நிறை தெய்வமே ஹம்ஸவிநோதினி தமிழ்
தில்லானா
ராகம் மொழி பாடப்பெற்ற தெய்வம்
வசந்தா தெலுங்கு முருகன்
தர்பாரி கானடா தமிழ் முருகன்
பாகேஷ்ரி தமிழ் முருகன்
தேஷ் தமிழ் முருகன்
ஹமீர் கல்யாணி தெலுங்கு முருகன்
பேஹாக் தமிழ் முருகன்
ஆனந்த பைரவி தெலுங்கு வெங்கடேஸ்வரன்
காபி தமிழ் முருகன்
திலாங் தமிழ் முருகன்
திவிஜவந்தி சமஸ்கிருதம் கிருஷ்ணா
பாஹடி சமஸ்கிருதம் சிவன்
கானடா தமிழ் கிருஷ்ணா
குந்தலவரலி தமிழ் முருகன்
ப்ருந்தாவனி தமிழ் கிருஷ்ணா
கடனகுத்தாலஹம் தமிழ் கிருஷ்ணா
மோஹனகல்யாணி சமஸ்கிருதம் முருகன்
யமுனகல்யாணி தமிழ் கிருஷ்ணன்
சிந்து பைரவி தமிழ் முருகன்
செஞ்சுருட்டி தமிழ் பார்வதி
பிம்பலாஸ் தமிழ் முருகன்
ராகேஸ்வரி தெலுங்கு நடராஜர்
ரேவதி தமிழ் முருகன்
வாசந்தி தமிழ் முருகன்
மதுவந்தி தமிழ் கிருஷ்ணன்
காமாஸ் தமிழ் முருகன்
மிஸ்ரசவரஞ்சினி தமிழ் முருகன்
மாண்ட் தமிழ் காமாட்சி
ஹம்ச நந்தி தமிழ் கிருஷ்ணன்
கர்ணரஞ்சனி தமிழ் கிருஷ்ணன்
நளினகாந்தி தமிழ் சிவ-சக்தி
பிந்துமாலினி தமிழ் பார்வதி
கிருதிகள்
கிருதி ராகம் மொழி பாடப்பெற்ற தெய்வம்
விநாயகுன்னதேவ தர்மவதி தெலுங்கு முருகன்
கந்தன் செயலன்றோ நாடகுறிஞ்சி தமிழ் முருகன்
தென் மதுரை வாழ் ஹம்சரூபினி தமிழ் மீனாக்‌ஷி
குமர குருகுஹம் ஷண்முகப்ப்ரியா சமஸ்கிருதம் முருகன்
நீ தயை செய்யாவிடில் பேகடா தமிழ் முருகன்

பிற நாடுகளில் இசைப்பயணம்

லால்குடி ஜெயராமன் 1965-ல் எடின்பர்க் இசைத்திருவிழாவில் (Edinburg music festival) இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு வாசித்தார். லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின்(Yehudi Menuhin) தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பிற்பாடு யஹூதி மெனுயின் இந்தியாவிற்கு வந்தபோது லால்குடி ஜெயராமன் வயலின் ( தந்தத்தால் நடராஜர் சிற்பம் செதுக்கிய) ஒன்றைப் பரிசாக அளித்தார்.

லால்குடி ஜெயராமன் 1971-ல் கிழக்கு-மேற்கு புரிந்துணர்வு (East-West Exchange) என்ற திட்டத்தின் பேரில் அமெரிக்கா-கனடா உள்ளிட்ட நாடுகளில் விரிவான பயணம் மேற்கொண்டு 24 இசை நிகழ்ச்சிகளிலும், பல கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டார். பின்னர் கிழக்கு ஐரோப்பியாவிற்கு இந்தியாவின் கலாச்சாரத் தூதராகச் சென்றுவந்தார்.

லால்குடி ஜெயராமன் ரஷ்யாவிற்கு இந்தியாவின் கலாச்சாரத் தூதராகச் சென்று வந்தார். சிங்கப்பூர், மலேசியா, மணிலா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

லால்குடி ஜெயராமனின் கச்சேரிகள் அடங்கிய ஒலிப்பேழை ஒன்றை டெல்லியில் உள்ள இந்திய வானொலி நிலையம் சர்வதேச இசைக்கூட்டமைப்பிற்கு (Internation music council) 1979-ல் அளித்தது. அந்த ஒலிப்பேழை அப்பொது பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட 77 இசைப் பதிவுகளில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது.

லால்குடி ஜெயராமன் லண்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியத் திருவிழாக்களில் (Festivals of India) இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு தனிக்கச்சேரிகளும், ஜுகல்பந்தி கச்சேரிகளும் செய்தார். இவை இசை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

லால்குடி ஜெயராமன் 1984-ல் ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் இசை நிகழ்வுகளை அரங்கேற்றி பெரும் புகழ் அடைந்தார். 1985-ல் அமெரிக்காவில் நடைபெற்ற இசைத்திருவிழாவிலும் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார்.

லால்குடி ஜெயராமன் 1994-ல் அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட், ஒஹையோ மாகாணங்களில் நடைபெற்ற 'ஜெய ஜெய தேவி' என்ற ஓபரா இசைக்கோவைக்கு பாடல்கள் எழுதி இசையமைத்தார். இது அமெரிக்காவின் 25 பெரும் நகரங்களில் அரங்கேற்றப்பட்டு பெரும்புகழ் அடைந்தது. இதனைத்தொடர்ந்து க்ளிவ்லேண்ட் மாகாண கவர்னர் லால்குடி ஜெயராமனுக்கு கௌரவ குடியுரிமை அளித்துப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து ஒஹையோ மாகாணத்தில் ஏப்ரல் 4-ஐ 'லால்குடி தினம்' என்று அறிவித்து 1994 முதல் கொண்டாடப்படுகிறது.

லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 1999-ல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற லிங்கன் சென்டரில், பாரதிய வித்யா பவன் நடத்திய நூற்றாண்டு கொண்டாட்டத்தில் அரங்கு நிறைந்த கூட்டத்தில் கச்சேரி செய்தார். இதனைத்தொடர்ந்து இவருக்கு 'பாரத ஜோதி' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

லால்குடி ஜெயராமன் அக்டோபர் 1999-ல் ஐரோப்பாவின் ஐக்கிய ஒன்றியத்தின் (United Kingdom) ஸ்ருதி லயம் சங்கம்(Institute of fine arts) என்ற அமைப்பிலும் பங்கேற்று கச்சேரிகள் செய்தார்.

மாணவர்கள்

  • லால்குடி ஜி.ஜே.ஆர் கிருஷ்ணன்
  • லால்குடி விஜயலட்சுமி
  • லால்குடி திருமதி பிரம்மானந்தம்
  • பி. பூர்ணச்சந்தர் ராவ் (அகில இந்திய வானொலியின் வாத்ய விருந்தா தேசிய இசைக்குழுவின் முன்னாள் இசையமைப்பாளர்-நடத்துநர்)
  • எஸ்.பி ராம்
  • விசாக ஹரி (ஹரிகதா விரிவுரையாளர்)
  • சாகேத்ராமன்
  • விட்டல் ராமமூர்த்தி
  • டாக்டர். என். சசிதர்
  • கிரிஷ் ஜி (திரைப்பட இசையமைப்பாளர்)
  • பத்ம ஷங்கர்
  • காஞ்சன் சந்திரன்
  • ரகுராம் ஹோசஹள்ளி
  • ஸ்ரீ ஏ.ஜி.ஏ.ஞானசுந்தரம்(லண்டன்)
  • ஶ்ரீநிவாசமூர்த்தி
  • பக்கலா ராமதாஸ்
  • சங்கரி கிருஷ்ணன்
  • யாமினி ரமேஷ்
  • மும்பை ஷில்பா
  • ஸ்ரேயா தேவ்நாத்
  • கிருத்திகா நடராஜன்
  • சேலம் சகோதரிகள்
  • வைனிகா ஸ்ரீகாந்த் சாரி
  • காயத்ரி சங்கரன் (பார்வையற்ற கர்னாடக இசைக்கலைஞர்)
  • பாம்பே ஜெயஸ்ரீ

மற்றும் பலர்.

மறைவு

லால்குடி ஜெயராமன் தனது 83-ம் வயதில், ஏப்ரல் 22, 2013-ல் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

விருதுகள்

  • நாத வித்யா திலகம் விருது, 1963-ல் லால்குடி இசை ஆர்வலர்கள் வழங்கியது.
  • பத்மஸ்ரீ விருது, 1972-ல் இந்திய அரசு வழங்கியது.
  • சங்கீத சூடாமணி விருது, 1971-ல் கிருஷ்ண கான சபா வழங்கியது.
  • நாத வித்யா ரத்னகர விருது, நியூயார்க்கின் ஈஸ்ட் வெஸ்ட் எக்ஸ்சேஞ்ச் வழங்கியது.
  • வாத்ய சங்கீதா கலாரத்னா பாரதி சொசைட்டி நியூயார்க் வழங்கியது.
  • சௌடையா நினைவு விருது, கர்னாடக அரசு வழங்கியது.
  • தமிழக அரசு வித்வான் விருது, 1979-ல் தமிழக அரசு வழங்கியது.
  • இசைப்பேரறிஞர் விருது 1984-ம் ஆண்டு சென்னை தமிழ்சங்கம் வழங்கியது.
  • அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் கவுரவ குடியுரிமை 1994-ல் வழங்கப்பட்டது.
  • பத்ம பூஷன் விருது, 2001-ல் இந்திய அரசு வழங்கியது.
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது, 2006-ல் சிருங்காரம் என்ற தமிழ் படத்திற்கு வழங்கப்பட்டது.
  • சங்கீத் நாடக அகடெமி பெல்லோஷிப் விருது, 2009-ல் சங்கீத் நாடக அகடெமி அமைப்பு வழங்கியது
  • 2010-ல் தும்குர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

உசாத்துணை

இணைப்புகள்


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.