under review

சுப்பிரமணிய சிவா: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 42: Line 42:
* [https://www.hindutamil.in/news/blogs/61594-10.html சுப்பிரமணிய சிவா 10: இந்து தமிழ்திசை]
* [https://www.hindutamil.in/news/blogs/61594-10.html சுப்பிரமணிய சிவா 10: இந்து தமிழ்திசை]
* [https://www.dailythanthi.com/News/Districts/2017/08/15140333/Letter-of-Subramanya-Siva.vpf சிறை கொடுமைகளை விவரிக்கும் சுப்பிரமணிய சிவாவின் கடிதம்: தினதந்தி]
* [https://www.dailythanthi.com/News/Districts/2017/08/15140333/Letter-of-Subramanya-Siva.vpf சிறை கொடுமைகளை விவரிக்கும் சுப்பிரமணிய சிவாவின் கடிதம்: தினதந்தி]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|18-Nov-2023, 08:23:37 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:06, 13 June 2024

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா (சுப்பராமன்) (அக்டோபர் 4, 1884 - ஜுலை 23, 1925) விடுதலைப் போராட்ட வீரர், இதழாசிரியர், ஆன்மிகவாதி, கட்டுரையாளர், மேடைப்பேச்சாளர். வ.உ. சிதம்பரனார், பாரதியாரிடம் நட்பு கொண்டிருந்தார். பாரதமாதாவிற்கு கோயில் கட்டினார்.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் ராஜம் ஐயர், நாகம்மாள் இணையருக்கு அக்டோபர் 4, 1884-ல் பிறந்தார். இயற்பெயர் சுப்பராமன். உடன்பிறந்தவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள் என இரு சகோதரிகள், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரர். 1903-ல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்த்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். 1893-ல் திண்ணைப்பள்ளியில் பயின்றார். ஒன்பது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்பக்கல்வி கற்றார். சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பன்னிரெண்டு வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புரையில் சேர்ந்து மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஓராண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1906 -ல் சிவாவின் தந்தை காலமானார். 1924- ல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.

தனிவாழ்க்கை

சுப்பிரமணிய சிவா 1899-ல் மீனாட்சியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். 1915-ல் மீனாட்சி மரணமடைந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

சுப்பிரமணிய சிவா 1902-ல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார். 1921-ல் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். 'ஸ்வதந்த்ரானந்தர்' என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.

அமைப்புப் பணிகள்

சுப்பிரமணிய சிவா 1906-07 காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களிடம் சொற்பொழிவாற்றினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான இவரின் செயல்பாடுகளால் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். சுப்பிரமணிய சிவா கால்நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்தார்.

விடுதலைப் போராட்டம்

1908-ல் வ.உ. சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் இணைந்து நெல்லையில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றினர். மார்ச் 12, 1908-ல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2, 1912-ல் விடுதலை செய்யப்பட்டார். பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். 1920-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். நவம்பர் 17, 1921-ல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் ஜனவரி 12, 1922-ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஓராண்டுகாலம் நன்னடத்தை பிணை கேட்டு அரசு வழக்குத் தொடுத்தது.

1923-ன் துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிவாவின் நண்பர் பாப்பாரப்பட்டி வள்ளல் சின்னமுத்து முதலியார் கொடுத்த பொருளுதவி மூலம் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான நிலத்தில் சித்தரஞ்சன்தாசைக் கொண்டு அடிக்கல் நாட்டி விழா நடத்தினார்.

இதழியல்

சுப்பிரமணிய சிவா 1913-ல் 'ஞானபாநு' இதழை நடத்தினார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916-ல் 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார்.

எழுத்து

சுப்பிரமணிய சிவா ஞானபாநு இதழில் 'நாரதர்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் ‘ஞானபானு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.

மறைவு

தொடர் பயணத்தாலும், தொழு நோயாலும் பாதிக்கப்பட்டு சுப்பிரமணிய சிவா ஜூலை 25, 1925 அன்று காலமானார்.

நூல் பட்டியல்

  • மோட்ச சாதனை ரகசியம்
  • ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
  • அருள் மொழிகள்
  • வேதாந்த ரகஸ்யம்
  • ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
  • ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
  • சச்சிதானந்த சிவம்
  • பகவத்கீதா சங்கிலகம்
  • சங்கர விஜயம்
  • ராமானுஜ விஜயம்
  • நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல்
நாடகம்
  • சிவாஜி
  • தேசிங்குராஜன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Nov-2023, 08:23:37 IST