under review

ஷேக் சின்ன மௌலா

From Tamil Wiki
ஷேக் சின்ன மௌலா
சங்கீதகலாநிதி
சின்ன மௌலா, காசிம்

ஷேக் சின்ன மௌலா (மே 12, 1929 - ஏப்ரல் 13, 1999) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர். இவரது பெயர் 'ஷேக் சின்ன மௌலானா' எனத் தவறுதலாகக் கூறப்படுவதுண்டு. உணர்ச்சிகரமான ராக ஆலாபனைக்காக புகழ்பெற்றவர்.

சின்ன மௌலா சாகிப் நூற்றாண்டு
ஷேக் சின்ன மௌலா 1973

இளமை, கல்வி

ஷேக் சின்ன மௌலா

இன்றைய ஆந்திர மாநிலத்தில் ஓங்கோலுக்கு அருகில் கரவதி என்னும் கிராமத்தில் மே 12, 1929 அன்று ஷேக் காஸிம் ஸாஹிப் என்ற நாதஸ்வரக் கலைஞருக்கும் பீபீஜான் என்பவருக்கும் ஷேக் சின்ன மௌலா பிறந்தார்.

இவரது தந்தை வழி தாத்தா ஷேக் அப்துல்லா சாஹிப்பும் ஒரு நாதஸ்வரக் கலைஞர். அவருடைய இரண்டு மகன்களும் (ஷேக் மதார் சாஹிப், ஷேக் காஸிம் ஸாஹிப்) சிலகலூரிப்பேட்டை பெத்த மௌலா ஸாஹிப்பின் சீடர்கள்.

ஜனாதிபதி விருது.ஃபக்ருதீன் அலி அகமது

இளமையில் திருவாவடுதுரை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் இசைத்தட்டுக்களைக் கேட்டு தானும் நாதஸ்வரம் பயில சின்ன மௌலா ஆர்வம் கொண்டார். பெரிய தகப்பனார் ஷேக் மதார் சாஹிப்பிடம் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் ஷேக் ஆதம் சாஹிப்பிடம் சில காலம் பயின்று கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.

தஞ்சைப் பாணி இசையைக் கற்றுக் கொள்ள விரும்பி நாச்சியார்கோவில் ராஜம்- துரைக்கண்ணுப் பிள்ளை ஆகியோரிடம் சில ஆண்டுகள் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஷேக் சின்ன மௌலா பீபீஜான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜான்பீவி என்று ஒரு மகள், அவர் ஷேக் சுபான்சாஹிபை மணந்தார். ஜான்பீவிக்கு மஸ்தான், காஸிம், பாபு, சின்ன காஸிம், அலி சாஹிப் என்ற ஐந்து மகன்களும் நூர்ஜஹான் என்றொரு மகளும் பிறந்தனர். இவர்களில் காஸிம், பாபு இருவரும் சின்ன மௌலாவுடன் நாதஸ்வரம் வாசித்து அவர் மறைவுக்குப் பின்னர் இணையராக வாசித்து வருகின்றனர்.

இசைப்பணி

ஜனாதிபதி வி வி கிரியுடன்

ஷேக் சின்ன மௌலா 1960-ல் தமிழகத்தில் சேலத்தில் முதல் இசை நிகழ்ச்சியில் வாசித்தார். பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் வாய்ப்புகள் வரவே, 1964ல் திருச்சி அருகே திருவரங்கத்தில் குடியேறினார். ஸ்ரீரங்கம் சென்றபோது, வயலின் கலைஞர் ராமநாதபுரம் கணேசப் பிள்ளையுடன் அணுக்கம் உருவானது. மௌலா ரங்கநாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டவர்.

ஷேக் சின்ன மௌலா பாடல்களை சாஹித்யமாகக் கற்றுக் கொண்ட பின்னரே நாதஸ்வரத்தில் வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இவரது வாசிப்பில் பிருகாக்கள் புகழ் மிக்கவை. இந்தியா தவிர இலங்கை, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகளில் வாசித்தார்.

மாணவர்கள்

ஷேக் சின்ன மௌலா 1982-ல் 'சாரதா நாதஸ்வர சங்கீத ஆசிரமம்’ என்ற பெயரில் ஒரு நாதஸ்வரப் பயிற்சிப் பள்ளியை ஸ்ரீரங்கத்தில் தொடங்கினார். அங்கு பயின்ற மாணவர்களில் முக்கியமான சிலர்:

  • ஷேக் மஹபூப் சுபானீ
  • காலிஷாபி மஹபூப்
  • ஷேக் அப்துல்லா
  • காசிம் (பேரன்)
  • பாபு (பேரன்)
முக்கியமான நிகழ்ச்சிகள்
  • 1972-ம் ஆண்டு, புது தில்லியில் மூன்றாவது அனைத்துலக ஆசிய வணிகக் கண்காட்சியில் வாசித்தார்.
  • 1973-ம் ஆண்டு, புது தில்லியில் இந்தியாவின் 25ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் வாசித்தார்.
  • 1973 கிழக்கு-மேற்கு பரிவர்த்தனை எனும் திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்குச் சென்றார்.
  • 1982-ம் ஆண்டு ஹாங்காங்கில் ஏழாவது ஆசியக் கலை விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
  • 1987-ம் ஆண்டு சோவியத் நாட்டில் இந்திய விழாவில் இசை வழங்கினார்.
  • 1991-ம் ஆண்டு, செப்டம்பர் ஜெர்மனியில் இந்திய விழாவின் துவக்கநாளில் வாசித்தார்.
  • 1996-ம் ஆண்டு பின்லாந்தில் அனைத்துலக இசை விழாவில் இசை வழங்கினார்.
  • 1997-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் இந்திய சுதந்திரக் கொண்டாட்டத்தில் வாசித்தார்.

விருதுகள்

  • கலைமாமணி (1976)
  • பத்மஸ்ரீ (1977)
  • சங்கீத நாடக அகாதெமி விருது (1977)
  • கானகலா பிரபூமா’ பட்டம் ( 1980 )ஆந்திர பிரதேச சங்கீத நாடக அகதெமி
  • கௌரவ டாக்டர் பட்டம் (1985) - ஆந்திரப் பல்கலைகழகம்
  • முதுகலைஞர் பட்டம் (Emeritus Fellowship) (1993) இந்திய அரசு
  • இசைப் பேரறிஞர் (21டிசம்பர்.1993) - தமிழிசைச் சங்கம்
  • சங்கீதகலாநிபுண (11.டிசம்பர்.1993) மைலாப்பூர் ஃபைனார்ட்ஸ் கிளப்
  • சங்கீத ரத்னா மைசூர் சௌடய்யா தேசிய விருது (1995)
  • ராஜரத்தினம்பிள்ளை விருது (1.டிசம்பர்.1995) முத்தமிழ்ப்பேரவை
  • சங்கீத கலாநிதி (1.ஜனவரி.1999.) - சென்னை மியூசிக் அகாதெமி .

பதவிகள்

  • ஆஸ்தான வித்துவான்- சிருங்கேரி மடம்
  • திருவையாறு ராஜா இசைக் கல்லூரியில் இசை பேராசிரியர்
  • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர்
  • தமிழக அரசு அரசவைக் கலைஞர்

மறைவு

ஷேக் சின்ன மௌலா ஏப்ரல் 13, 1999 அன்று ஸ்ரீரங்கத்தில் மறைந்தார்.

நினைவுகள்

ஆவணப்படம்
இந்திரா காந்தியுடன்

இந்திய திரைப்படப் பிரிவு சார்பில் ஷேக் பற்றி ‘டாக்டர் ஷேக் சின்ன மவுலானா’ என்ற படம் தயாரிக்கப்பட்டது . 31-வது தேதிய திரைப்பட விழாவிலும் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

நூற்றாண்டுவிழா

06, ஏப்ரல் 2024-ல் ஷேக் சின்னமௌலானாவின் நூற்றாண்டுவிழா திருச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

அறக்கட்டளை

ஷேக் சின்ன மௌலானா அறக்கட்டளை (Dr. Chinnamoulana Memorial Trust (DCMT) 2024ல் அவருடைய நூற்றாண்டுவிழாவின்போது தொடங்கப்பட்டது.ஆண்டுதோறும் சிறந்த நாதஸ்வர இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இசையில் இடம்

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மானசீக ஆசிரியராகக்கொண்டவர் ஷேக் சின்னமௌலானா. தஞ்சைபாணி எனப்படும் நாதஸ்வர இசைமரபின் சிறந்த பிரதிநிதி. மரபை மீறாத இசையை முன்வைத்தாலும் உணர்வுபூர்வமான ஆலாபனையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

வெளி இணைப்புகள்


✅Finalised Page