under review

லெட்சுமணன்

From Tamil Wiki
லட்சுமணன் (எ) லெமன்
எழுத்தாளர் லெமன் (எ) லட்சுமணன்

லெட்சுமணன் (லெமன்: 1933-2017) சிறார்களுக்கான நூல்களையும் பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றையும் எழுதியவர். எழுத்தாளர்; கட்டுரையாளர்; மொழிபெயர்ப்பாளர்: தி.ஜ.ரங்கநாதன், த.நா. சேனாபதியைத் தொடர்ந்து மஞ்சரி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர். பல ஆண்டு காலம் மஞ்சரி இதழில் பணியாற்றி பல கட்டுரைகளைத் தந்தவர். மஞ்சரிக்கு ‘தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்ட்’ என்று பெயர் அமையக் காரணமாக அமைந்தார்.

பிறப்பு, கல்வி

‘லெமன்’ என்ற புனைபெயரில் இயங்கி வந்த லெட்சுமணன், பிப்ரவரி 24, 1933 அன்று சேலத்தில் பிறந்தார். உயர் கல்வியை முடித்ததும் சென்னைக்கு வந்தார். தொழிற்கல்வி நுண்கலைப் பிரிவில் ஓவியப் பயிற்சி முடித்தார்.

தனி வாழ்க்கை

லெட்சுமணனின் மனைவி ஆசிரியையாகப் பணியாற்றினார். மகள் துர்கா. எழுத்தாளர், இசை விமர்சகர் சாருகேசி, லெட்சுமணின் இளைய சகோதரர்.

இதழியல் வாழ்க்கை

இளம் வயது முதலே லெட்சுமணனுக்கு எழுத்தார்வம் இருந்தது. சிறு சிறு கவிதைகளை, கதைகளை எழுதி வந்தார். 1960-ல், சக்தி வை. கோவிந்தன் நடத்தி வந்த ‘அணில்’ சிறார் இதழில் சேர்ந்து பணியாற்றினார். அணில் நின்றுபோன பின் ‘கண்ணன்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவரது திறமை அறிந்த எழுத்தாளர் ‘ஆர்வி’, கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என்று எழுத வாய்ப்பளித்தார். லெட்சுமணன் என்ற தனது பெயரைச் சுருக்கி ‘லெமன்’ என்ற புனை பெயரில் எழுதினார். கண்ணன் இதழில் இவர் எழுதிய ‘ஏணி அண்ணா” என்ற நகைச்சுவைத் தொடர் கவிதை வாசக வரவேற்பைப் பெற்றது. இவர் எழுதிய ‘அநுமாரும் அணிலாரும்’ என்ற சிறார் கவிதை இவருக்குப் புகழை பெற்றுத் தந்தது. கவிமாமணி இளையவனைப் பெரிதும் ஊக்குவித்தார் லட்சுமணன். கண்ணன் இதழில் அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். 1963 முதல் 1971 வரை கண்ணன் இதழில் பணியாற்றினார் லெட்சுமணன். கண்ணன் இதழுக்குப் பின் சிலகாலம் ‘என் பேனா’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

லெட்சுமணனின் திறமையை அறிந்த கி.வா. ஜகந்நாதன், கலைமகள் காரியாலயத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவில் அவரைப் பணியில் அமர்த்தினார். அங்கு சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினார் லெட்சுமணன்.

மஞ்சரி இதழாசிரியர்

கி.வா.ஜ., லெட்சுமணனை 1982-ல், ‘மஞ்சரி’ இதழின் துணை ஆசிரியராக நியமித்தார். மஞ்சரியின் ஆசிரியராக இருந்த த.நா.சேனாபதியின் மறைவிற்குப் பிறகு, 1989-ல், அதன் ஆசிரியர் ஆனார் லெட்சுமணன். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், துணுக்குகள் என்று நிறைய எழுதினார். இந்திய இலக்கியம், வரலாறு, மருத்துவம், சமூகம், அறிவியல், பொருளாதாரம், வெளிநாட்டு நிகழ்வுகள், முக்கிய சம்பவங்கள் எனப் பல்வேறு துறைகள் குறித்த செய்திகளை சுவாரஸ்யமான மொழியில் எழுதினார். உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களை மஞ்சரியில் வெளியிட்டு அதன் வளர்ச்சிக்குத் துணைநின்றார். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பலவற்றை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டார். கதைச் சுருக்கங்கள், நூல் மதிப்புரைகள் என்று பல பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சௌரி, ரா.ஸ்ரீ. தேசிகன் உள்ளிட்ட பலர் இம்மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கவிஞர் இளையவனை திருமுருக கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாற்றினை புதுக்கவிதையில் தொடர் காவியமாக எழுத வைத்தார். பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார். சுமார் பதினான்கு ஆண்டு காலம் மஞ்சரியில் ஆசிரியராகப் பணியாற்றி, 2003-ல், பணி ஓய்வு பெற்றார் லெட்சுமணன். அவருக்குப் பின் செங்கோட்டை ஸ்ரீராம் மஞ்சரி இதழின் ஆசிரியரானார்.

இலக்கியச் செயல்பாடுகள்

லெட்சுமணனுக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. குழந்தை எழுத்தாளர் சங்கம் 1963-ல் நடத்திய மாநாட்டில் இவர் வரைந்த இலச்சினை பயன்படுத்தப்பட்டது. இவர் எழுதிய சிறார் கவிதைத் தொகுப்புகளான ‘கொக்கரக்கோ', ‘சிப்பாய் வறார்’ ஆகியவை கலைமகள் காரியாலயத்தின் வெளியீடுகளாக ரெஸாக்கின் வண்ண ஓவியங்களுடன் வெளியாகின. ‘விண்ணின் அழைப்பு' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கான பாடல்களை ‘எல்ஏகே’ என்ற புனை பெயரிலும், பெரியோர்களுக்கான கதை, கட்டுரைகளை 'சௌமித்ரி', 'பாக்யபாரதி' போன்ற பெயர்களிலும் எழுதியுள்ளார்.

பணி ஓய்விற்குப் பின்னர் கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் எழுதி வந்தார். இதழியல் ஆர்வத்தால் ‘லேகினி’ என்ற வண்ண இதழைத் தொடங்கினார். ஆனால், ஆதரவின்மையால் இதழ் தொடர்ந்து வெளியாகவில்லை. இவருக்குக் கண்களில் ஏற்பட்ட பாதிப்பால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். ‘மழைக் கிளிகள்’ லெட்சுமணன் இறுதியாக எழுதிய நூல்.

விருதுகள்

கொக்கரக்கோ நூலுக்கு, 1972-ல், தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விருது கிடைத்தது.

மறைவு

லெட்சுமணன், 27 அக்டோபர் 2017-ல், தனது 84-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த மஞ்சரி இதழை தி. ஜ. ரங்கநாதன், த. நா. சேனாபதி வரிசையில் அதன் தரம் மாறாமல் ஆசிரியராக இருந்து நடத்தியவர் லெட்சுமணன். சிறந்த பல கட்டுரைகளைத் தந்தவர். லெமன் பற்றி மஞ்சரி இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய செங்கோட்டை ஸ்ரீராம், “மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்த லெமன் என்ற லட்சுமணன் சார் நிறைய சின்ன சின்ன துணுக்குகளாக விஷயங்களை அவ்வப்போது சொல்வார்… தன்னை பெரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாத சங்கோஜி. ஒற்றை நாற்காலியில் ஒடுங்கிப் போவார். ஆனால் ஏதாவது விஷயத்தை படித்தாலோ அல்லது காதால் ஒன்றைக் கேட்டாலோ விமர்சனம் அழகாக அவரிடமிருந்து வரும். [1] ” என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறார் கவிதைத் தொகுப்பு
  • கொக்கரக்கோ
  • சிப்பாய் வறார்
கட்டுரை நூல்கள்
  • விண்ணின் அழைப்பு
  • மழைக் கிளிகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page