under review

புலியாட்டம்

From Tamil Wiki
புலியாட்டம்

புலியாட்டம் ஓர் நிகழ்த்து கலை. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், தனியாட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது. இக்கூத்தின் கலைஞர் புலி போன்று வேடமிட்டு ஆடுவர். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் 'கடுவா ஆட்டம்' புலியோட்டத்தை ஒத்ததே. இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையின் போது நிகழ்த்தும் கடுவா ஆட்டமும் புலியாட்டம் போன்றதே. ஆனால் இஸ்லாமிய பண்டிகையில் இது சமயச் சடங்காக நடத்தப்படுகிறது. இந்து கோவில் விழாக்களில் இக்கலை பொழுதுபோக்காக நிகழ்கிறது.

நடைபெறும் முறை

புலியாட்டத்திற்கென்று தனிப் பாடல்களோ, கதைத் தன்மையோ இல்லை. இது முழுதும் பொழுதுபோக்கு அம்சமாகவே நிகழ்த்தப்படுகிறது. அதுவன்றி சில இடங்களில் மழை பெய்வதற்காகவும் புலியாட்டம் ஆடப்படுகிறது.

புலியாட்டத்தை ஆண்களே நிகழ்த்துகின்றனர். இதனை ஏற்று நடிக்கும் கலைஞர்கள் நல்ல உடல்வாகு கொண்டவர்களாகவும், சிலம்பப் பயிற்சி உடையவராகவும் இருக்க வேண்டும். நீண்ட நேரம் நிகழும் ஆட்டம் என்பதால் இது தேவைப்படுகிறது.

புலியாட்டக்காரர் ஆட்டுக் கொம்பு அல்லது சிலம்பைக் கையில் வைத்துக் கொண்டு ஆடுவார். புலியாட்டக்காரருக்கு எதிர் புலியாக ஒருவரும் ஆடுவார். இவர் புலி வேஷம் புனைந்தவராகவோ, புனையாதவராகவோ இருப்பார். எதிர்ப்புலியுடன் சேர்ந்து சிலம்பப் பள்ளிச் சிறுவர்களும் ஆடுவர்.

புலியாட்டத்தில் எதிர்ப்புலியாட்டம் முக்கிய நிகழ்வு. இதில் முக்கிய ஆட்டக்காரர் ஆடும்போது ஆட்டுக் குட்டியைப் பல்லால் கடித்துத் தூக்கி எறிய வேண்டும். இது வெற்றி பெற்றதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. அவர் தூக்கி எறிய முடியாமல் போனால் தோல்வியுற்றதாகக் கருதப்படும். அதனைக் குறிக்கும் விதமாக அவரது வால் நீக்கப்படும். வால் நீக்கப்பட்டதும் ஆட்டம் நிறைவு பெறும்.

அலங்காரம்

புலி வேஷம் அணிபவர்கள் உடம்பில் உள்ள உரோமத்தை முழுதும் அகற்றியிருப்பர். நீலம், சிவப்பு, மஞ்சள், கறுப்பு வண்ணப் பொடியினால் உடம்பெங்கும் புலித்தோல் போல் வரைந்து ஒப்பனை செய்வார்கள். புலியின் நாக்கு போல் தகரம் அல்லது ரப்பரால் வாயில் கட்டிக் கொள்வர். இவர்களில் இரட்டை வால் பொருந்தி ஆடுவதுமுண்டு. இவ்வாறு இரட்டை வால் கட்டினால் தன்னை எதிர்க்க எவரும் இல்லை என்று அவர்கள் அறைகூவுவதாகப் பொருள். இந்த வால் அசையும் வண்ணம் அமைந்திருக்கும். கூர்மையுடைய புலி நகமும் கையில் அணிந்திருப்பர். கலைஞர்கள் இடையில் கறுப்பு நிற ஜட்டி அல்லது லங்கோடு அணிந்திருப்பர்.

இசைக்கருவிகள்

புலியாட்டத்தில் பின்னணி இசைக்கருவியாக நையாண்டி மேளம் இசைக்கப்படுகிறது. இதனுடன் தப்பு, மகுடம் போன்ற வாத்தியக்கருவிகளில் ஒன்றும் இசைக்கப்படுகிறது. சில இடங்களில் செண்டை மேளம் பின்னணி இசைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

நிகழும் ஊர்கள்

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டாலும் வட தமிழ் மாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் கிராம வீதிகளில் இவ்வாட்டம் நிகழ்கிறது.

நிகழ்த்தும் சமூகங்கள்

விருதுநகரில் மகர நோன்பு நாட்களில் புலி வேஷமிடுதல் மரபு வழியாக இருந்து வருகிறது. இந்த மகர நோன்பு விழா தேவாங்க சமூகத்தினரால் நடத்தப்படுகிறது. இச்சமூகத்தினரின் குலதெய்வமான சௌடேஸ்வரி வழிபாட்டில் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் புலியாட்டமும் நிகழும்.

நடைபெறும் இடம்

புலியாட்டம் கோவில் திருவிழாக்களில் ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்படுகிறது. கோவிலின் முன்புறம் நிகழ்வதால் தெருவும், ஊரின் பிற பகுதிகளும் ஆட்டம் நிகழும் களமாக அமையும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி


✅Finalised Page