under review

பிரேமா நந்தகுமார்

From Tamil Wiki
டாக்டர் பிரேமா நந்தகுமார்

பிரேமா நந்தகுமார் (டாக்டர் பிரேமா நந்தகுமார்: பிறப்பு : 1939) எழுத்தாளர்; கட்டுரையாளர்; திறனாய்வாளர்; மொழிபெயர்ப்பாளர்; சொற்பொழிவாளர். யோகி ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’ காவியம் பற்றி விரிவாக ஆய்வு செய்து ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வங்காளத்தின் ஸ்ரீ அரவிந்த பவன் நிறுவனம் வழங்கிய ‘ஸ்ரீ அரவிந்தோ புரஸ்கார்’ விருது பெற்றவர். கோட்டயம் மகாத்மா காந்திப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

பிரேமா நந்தகுமார், திருநெல்வேலியை அடுத்த, கார்கோடகநல்லூர் என்னும் கோடகநல்லூரில், பிப்ரவரி 23, 1939-ல், கே.ஆர். சீனிவாச ஐயங்கார் - பத்மாசினி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை கல்லூரிப் பேராசிரியர். ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் பணியாற்றினார். பாகல்கோட்டில் பிரேமா நந்தகுமாரின் தொடக்கக் கல்வி அமைந்தது. கன்னடம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார்.

தந்தைக்குத் தொடர்ந்து பணிமாறுதல்கள் நிகழ்ந்ததால், பிரேமா, தாத்தா - பாட்டியின் ஊரான கோடகநல்லூருக்கு வந்து படித்தார். பத்தமடையில் உள்ள ராமசேஷய்யர் உயர்நிலைப்பள்ளியில் மேல் கல்வி பயின்றார். தாத்தா காலமானதால் தந்தை வசித்த ஆந்திராவில் உள்ள வால்டயரில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். வால்டயரில் இருந்த ஆந்திரப் பல்கலையில் சேர்ந்து, ஆங்கில இலக்கியத்தில் ஆனர்ஸ் பட்டம் பெற்றார். அங்கேயே தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.

தந்தை, தாய் இருவருமே ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னையின் பக்தர்கள். தந்தை கே.ஆர். சீனிவாச ஐயங்கார் தான் முதன் முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர். அவர்கள் வழி பிரேமாவும் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பக்தரானார். ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’ மகா காவியம் இவரை மிகவும் ஈர்த்தது. ‘சாவித்ரி’யையே தனது ஆய்வுத் தலைப்பாக்கி, அதனைப் பற்றி மிக விரிவான ஆய்வு மேற்கொண்டு 1961-ல், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதன்முதல் ‘சாவித்ரி’ பற்றி வெளிவந்த மிக விரிவான ஆய்வு நூல் அதுதான். அப்போது பிரேமாவுக்கு வயது 22. ஆந்திரப் பல்கலையில் அவ்வளவு இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்றவரும் அவர் ஒருவர்தான். (இன்றளவும் (2023) அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை)

தனி வாழ்க்கை

1961-ல், நந்தகுமாருடன் பிரேமாவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் ராஞ்சிக்குச் சென்று தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். 1966-ல் கணவருக்கு விசாகப்பட்டினத்திற்கு மாற்றலானது. பிரேமா நந்தகுமார் அக்காலக்கட்டத்தில் ஆந்திரப் பல்கலையில் முதுநிலை ஆய்வாளராகச் சேர்ந்தார். சில காலம் ஆங்கிலத்துறையின் முதுநிலைப் பட்டதாரிகளுக்குப் பாடம் நடத்தினார். அடுத்தடுத்த மகப்பேறுகளால் தொடர்ந்து ஆசிரியப் பணியில் ஈடுபட முடியவில்லை என்றாலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

டாக்டர் பிரேமா நந்தகுமார்

இலக்கிய வாழ்க்கை

தந்தை கே.ஆர். சீனிவாச ஐயங்கார் பேராசிரியராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் இருந்தார். அவர் வீட்டில் வைத்திருந்த நூல்கள் மூலம் சிறு வயதிலேயே பிரேமா நந்தகுமாருக்கு வாசிப்பார்வம் வந்தது. தமிழில் வெளிவந்திருந்த ‘நந்துவின் தம்பி’ என்ற சிறுகதையை கன்னடத்தில் மொழிபெயர்த்தார். ஆசிரியரின் அறிவுரை மற்றும் திருத்தங்களின் பேரில் அக்கதையை ‘ஜெய கர்நாடகா’ என்ற இதழுக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. அப்போது பிரேமாவிற்கு வயது ஏழு. ‘நந்துவின் தம்பி' என்ற அச்சிறுகதையை எழுதியவர் எழுத்தாளர் குமுதினி. அவரே பிரேமா நந்தகுமாருக்கு மாமியாராக அமைந்தார்.

விடுதலை நாவல் விமர்சனம்
எழுத்தும் ஆய்வுப் பணிகளும்

கணவர் நந்தகுமார், மனைவியின் பல்வேறு திறமைகளை அறிந்து, புரிந்து நன்கு ஊக்குவித்தார். நிறைய நூல்களை வாங்கி அளித்து மென்மேலும் வாசிக்க, ஆய்வுகளைத் தொடர, கட்டுரைகளை, சிறுகதைகளை எழுத ஊக்கப்படுத்தினார். 1978-ல், பிரேமா நந்தகுமார், “செங்கண் மால்தான் கொண்டு போனான்” என்ற தலைப்பில், கலைமகள் இதழில் எழுதிய சிறுகதை, அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘ஒருநாள் பொழுது’ என்பது பிரேமா நந்தகுமார் எழுதிய நாவல். இதன் குறிப்பிடத்தகுந்த அம்சம் ஒரு கல்லூரிப் பேராசிரியரின் காலை முதல் இரவு வரையிலான ஒரு நாள் அனுபவமும் சிந்தனைகளுமே!

தி இந்து, டெக்கான் ஹெரால்டு, அமுதசுரபி, ஸ்ரீ நரசிம்மபிரியா, திருக்கோயில், சப்தகிரி, வேதாந்த கேசரி, ஆத்மஜோதி, பிரபுத்த பாரதா, மதர் இந்தியா, தி ஸ்கூல் போன்ற நாளிதழ்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், சிறுகதைகள் விமர்சனங்களை எழுதினார். உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதினார். டெக்கான் ஹெரால்ட் இதழுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

ஸ்ரீ அரவிந்தரின் படைப்பான சாவித்ரி பற்றிய இவரது ஆய்வு நூலான “Sri Aurobindo's Savitri: A Study of the Cosmic Epic” என்ற நூல் முக்கியமானது. தந்தையுடன் இணைந்து இவர் எழுதிய நூலான “Introduction to the Study of English Literature” குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆமுக்தமால்யதாவின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பாரதி பற்றிய ஆய்வு நூல்

பாரதியின் மீது பிரேமா நந்தகுமாருக்கு ஈர்ப்பு அதிகம். பாரதியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ஆங்கிலத்தில் ஓர் நூலை எழுதி வெளியிட்டார். முதன் முதலில் ஆங்கிலத்தில் பாரதியைப் பற்றி விரிவாக ஆய்வு நோக்கில் எழுதியவர் பிரேமா நந்தகுமார் தான். அந்நூலை ராஜாஜி, நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பெ.நா. அப்புசாமி உள்ளிட்ட பலர் பாராட்டி வரவேற்றனர். பாரதி பற்றிய பல அரிய செய்திகளைக் கொண்ட இவரது ‘சுப்ரமணிய பாரதி’ நூலை நேஷனல் புக் ட்ரஸ்ட் 1973-ல் வெளியிட்டது. தொடர்ந்து 1978-ல் சாகித்ய அகாதெமி மூலம் பாரதி பற்றிய விரிவான இவரது தொகுப்பு நூல் வெளியானது. பாரதியாரின் கவிதைகளை சாகித்ய அகாதெமிக்காக மொழிபெயர்த்திருக்கிறார். பிரேமா நந்தகுமார் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார். கணவர் நந்தகுமார், ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டிப் பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.

இலக்கியச் செயல்பாடுகள்

மலேசியாவின் கோலாலம்பூரில் நிகழ்ந்த சர்வதேசத் தமிழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பிரேமா நந்தகுமார். 1968-ல் சென்னையில் நிகழ்ந்த சர்வதேசத் தமிழ்க்கருத்தரங்கில் இவர் ஆற்றிய உரை அக்காலச் சான்றோர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் மலேசியா, ஸ்வீடன், சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பல வெளிநாடுகளில் நிகழ்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றி இருக்கிறார். கோட்டயம் மகாத்மா காந்திப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வித்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல உயர்பொறுப்புகளை வகித்தவர். சாகித்ய அகாதமி, கதா போன்ற அமைப்புகள் நடத்திய பல போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டார். சோ. தர்மன் எழுதி, ‘சுபமங்களா’ இதழில் வெளியான ‘நசுக்கம்’ என்ற சிறுகதையை ‘கதா’ விருதுக்குத் தேர்த்நெடுத்தவர் பிரேமா நந்தகுமார் தான்.

டாக்டர் பிரேமா நந்தகுமார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடமிருந்து திரு.வி.க. விருது பெறுகிறார்

விருதுகள்

  • 'செங்கண் மால்தான் கொண்டு போனான்' என்ற சிறுகதைக்கு, 1978-ம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான 'இலக்கியச் சிந்தனை’ பரிசு.
  • ‘அமுதத் துளி உதிர்ந்தது’ எனும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு, 1983-ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு.
  • மேற்கு வங்காளத்தின் ஸ்ரீ அரவிந்த பவன் நிறுவனம் வழங்கிய ‘ஸ்ரீ அரவிந்தோ புரஸ்கார்’ விருது.
  • ‘ஆழ்வார்கள் ஆய்வு மையம்’ வழங்கிய ‘எம்.ஜி.ஆர்’ விருது
  • சென்னை சேக்கிழார் ஆய்வு மையம் வழங்கிய ‘சேக்கிழார்’ விருது
  • கோயில் கந்தாடை ரங்காச்சாரியா நிறுவனம் வழங்கிய ‘பண்டித ரத்னா’ விருது
  • பாரத விகாஷ் பரிஷத் அமைப்பு வழங்கிய ‘வியாச ப்ரவீனர் விருது’
  • ‘ஸ்ரீரங்க ரத்னா’ விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • பாரதியார் விருது
  • மதுரை காமராசர் பல்கலை வழங்கிய ‘பேரவைச் செம்மல்’ விருது
  • உ.வே.சா.விருது
  • முத்தமிழ் மாமணி விருது
  • ‘ஆங்கில திராவிட பாஷா விசக்ஷனா’ விருது,
  • ‘தமிழ்நெறிச் செம்மல்’ விருது
  • ‘பன்மொழி வித்தகர்’ விருது
  • வித்வஜ்ஜன விநோதினி விருது
  • ஸ்ரீ ராமானுஜ நாவலர் சுவாமி சபை வழங்கிய அபிநவ ஆண்டாள் பட்டம்
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது

இலக்கிய இடம்

சுயசரிதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, விமர்சனம், புனைகதை எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் பிரேமா நந்தகுமார். வேதங்கள், ஹிந்து, பௌத்த மற்றும் சமண காவியங்கள், இந்திய மற்றும் சர்வதேச இலக்கியங்கள் எனப் பல துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவுடையவர். விசிஷ்டாத்வைத தத்துவத்திலும், பிரபந்தங்கள் மற்றும் பாஷ்யங்களிலும் தேர்ந்த பயிற்சியை உடையவர். தமிழின் மூத்த சொற்பொழிவாளராக, ஆய்வாளராக டாக்டர் பிரேமா நந்தகுமார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அமுதத் துளி உதிர்ந்தது
  • புயல் நிலைப்பதில்லை
நாவல்கள்
  • மாசுபடிந்த உறவுகள்
  • ஒருநாள் பொழுது
கட்டுரை நூல்கள்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: பாரதியார்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: எஸ். இராதாகிருஷ்ணன்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: குமுதினி
  • வேதங்களில் பெண்கள்
  • சாவித்ரியில் ஒரு பயணம்
  • பெண்ணியத்தின் விடிவெள்ளி - குமுதினி
  • சிலப்பதிகாரம் – ஒரு ஆய்வு
  • திருப்பாவை
  • இலக்கியப்பெருந்தகை
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • பதஞ்சலி மற்றும் ஏனைய சித்தர்களின் கிரியா யோக சூத்திரங்கள் (மூலம் : Kriya Yoga Sutras of Patanjali & the Siddhas, Marshall Govidan)
  • விடுதலை (மூலம்: அஸாதி, சமன் நாஹல்)
ஆங்கில நூல்கள்
  • Sri Aurobindo's Savitri: A Study of the Cosmic Epic
  • Introduction to the Study of English Literature (Iyengar, K R Srinivasa; Nandakumar, Prema)
  • Srimad Bhagavatam - At Each Step a Luminous World
  • Adi Sankara - Finite to the Infinite
  • Sri Madhva - The Hero as Acarya
  • Sri Ramanuja - The Great Integrator
  • The Acharya Trilogy (Adi Sankara, Sri Ramanuja, Sri Madhva)
  • Spiritual Masters: Swami Vivekananda
  • Swami Vivekananda (Leader on the Royal Path)
  • Sister Nivedita and Sri Aurobindo
  • Sri Aurobindo Memorial Lectures
  • Sri Aurobindo, a critical introduction
  • Sri Aurobindo (Comic Book)
  • Dante and Sri Aurobindo: A Comparative Study of the Divine Comedy and Savitri
  • Sri Aurobindho's Perseus the Deliverer
  • The Mother of Sri Aurobindo Ashram
  • THE MOTHER
  • The Legend of Kolavarai Arankan - Part I
  • The Legend of Kolavarai Arankan - Part II
  • Dr. S. Radhakrishnan - Makers of Indian Literature
  • In Search of Hinduism
  • Manimekalai: Text, Transliteration, Translations in English Verse and Prose (K G Seshadri and Prema Nandakumar)
  • Kannaki's Anklet: An Epic from the South of the Vindhyas (Utkarsh Patel and Dr Prema Nandakumar)
  • Eladi (Tamil Classic by Ganimedhaviar)
  • Tirumazhisai Alvar (Bhaktisara)
  • Vedanta Desik'a Goda Stuti
  • Bhakta Nandanar
  • The Domestic Felicity of Sita and Rama: Tirumala Tirupathy Devasathanam
  • Nammalvar
  • Thiruviruththam
  • SUBRAMANIA BHARATI
  • Neela Padmanabhan (A Reader)
  • K.R. Srinivasa Iyengar by Dr. Premanandakumar
  • T.V. Kapali Sastri (The Builders of Indian Philosophy Series)
  • Kulothungan: A Poet Of Today & Tomorrow
  • Atom & The Serpent (Novel by Dr. Prema Nandakumar)

உசாத்துணை


✅Finalised Page