under review

நொண்டி நாடகம்

From Tamil Wiki
Nondi naadagam.jpg

நொண்டி நாடகம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நாடக இலக்கிய வடிவங்களுள் ஒன்று. சிந்து பாவினத்தில் பாடல்கள் அமையப் பெற்றது. பொது மக்களின் ரசனைக்கு ஏற்ப அமைந்த பாடல்களால் ஆனது. நாட்டார் வடிவங்களுக்கு மிக நெருக்கமானது.

நொண்டி நாடகம் 96 வகை சிற்றிலக்கியங்களில் சேர்ப்பது பற்றி ஆய்வாளர்களுள் கருத்து வேறுபாடு உள்ளது. நொண்டி ஒருவனின் கதையை அடிப்படையாகக் கொண்டு அமைவதால் இதனை "ஒற்றைக்கால் நாடகம்" என்றும் அழைப்பர். நொண்டி பல தீய வழிகளில் சென்று இறைவனை அறியும் படி நூல் அமைப்பு இருக்கும்.

திருசெந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் ஆகியன குறிப்பிடத்தக்க நொண்டி நாடகங்கள். நொண்டி நாடகம் எளிதாக நாடகமாக அமையும் தன்மை கொண்டது.

"சிவகவி" என்ற தியாராஜ பாகவதரின் திரைப்படம் நொண்டி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது.

தோற்றம்

நொண்டி நாடகம் கி.பி. 17-ம் நூற்றாண்டில் தொடங்கிய இலக்கிய வடிவம். பின்னாளில் பொது மக்களுக்காக மேடையில் நாடகமாகவும் நடித்துக்காட்டப்பட்டது.மக்களுக்கு அறத்தினையும், ஒழுக்கத்தினையும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 17, 18-ம் நூற்றாண்டுகளில் நொண்டி நாடகம் செல்வாக்கு பெற்றிருந்தது.

நொண்டி நாடகம்

நொண்டி நாடகம் இசையுடன் சேர்ந்தமைந்த இலக்கிய வகை. இது வெண்பாவும், ஆசிரியர்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு ஆகிய பாவினங்களுடன் கூடிய ஒன்று.

மக்களின் வழக்கு மொழியில் இந்நூல் ஆக்கப்பட்டிருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து வகை நொண்டி நாடகங்களும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பொது மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும்படி எளிய பாடல் வரிகளில் அமைந்திருக்கும்.

கதை

நொண்டி நாடகங்கள் அனைத்தும் பொதுவான கதைக் கருக்களைக் கொண்டவை. இந்நூலின் கதைத் தலைவன் தன்னுடைய கடந்த கால வாழ்வை சொல்வதாக அமையும். கதையின் தொடக்கத்தில் அவன் பெற்றோரிடம் வளர்வான். அந்த வாழ்வு பிடிக்காமல் அவர்களை விட்டு வெளியேறுவதாக கதை தொடங்கும். மகிழ்ச்சியான எதிர்காலத்தை எண்ணி வீட்டை வீட்டு வெளியேறும் கதைச்சொல்லி, சிறிது நாட்களில் கையில் உள்ள பொருள் முடிந்ததும் திருடத் தொடங்குவான். திருடிய பணத்தில் மதுவும், பெண்களும் என சந்தோஷமாக இருப்பான். பணத்தை இழந்து உதவிக்கு யாரும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவான்.

பரத்தையரும் அவனைத் துரத்தி அடித்தபின் அவன் மேலும் தீய வழிகளுக்குச் செல்வான். அவன் ஒரு குதிரையைத் திருட முயற்சிக்கும் போது அகப்படுவான். அவர்கள் அவன் கை, கால்களைத் துண்டிப்பர். செய்த தவறை உணர்ந்து இறைவனிடம் வேண்டுவான். அவனுக்கு இறைவன் மன்னிப்பு கொடுத்து இழந்த கால்களை திரும்பத் தருவார். அதன்பின் திருந்தி கடவுளைத் துதித்து வாழ்வான்.

இது நொண்டி நாடகத்தின் பொதுவான கட்டமைப்பு. பின்னாளில் நாடகமாக அரங்கேறிய போது இதன் நாடக ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் நாடக கதையைக் கட்டமைத்தனர். கதையின் தன்மைக்கு ஏற்ப அந்த மாறுபாடும் தேவைப்பட்டது.. உதாரணமாக திருச்செந்தூர் முருகனை மையமாக கொண்டு திருசெந்தூர் நொண்டி நாடகம் அமையும், சீதக்காதி நொண்டி நாடகம் இஸ்லாமிய நெறியை மையப்படுத்தி அமையும்.

அமைப்பு முறை

நொண்டி நாடகத்தில் நொண்டி ஒருவனை மையமாகக் கொண்டு கதை அமைந்திருக்கும். அவனே அவனது கதையைச் சொல்வான்.

கடவுள் வாழ்த்துடன் நூல் தொடங்கும். நொண்டி தனக்கு தானே கேள்வி கேட்ட பின் தனது நாட்டுவளம், கல்வி, மண வாழ்வு, பயணம் ஆகியவற்றைச் சொல்வான். அதன் பின் தீயோருடன் ஏற்பட்ட நட்பு அதன் பயனாக அவன் கால்களை இழந்ததைப் பற்றிக் கூறுவான். இந்த பகுதி நொண்டி நாடகத்தின் மையக் கருத்தைக் கூறுவதால் அதிகமாக வலியுறுத்திக் கூறப்படும். இந்நூல் வடிவம் குறிப்பிடும் குறிப்பிட்ட இறைத் தளத்தை அடந்து அங்கே அவன் கால்களை மீளப் பெருவதில் முடியும்.

திருவிடைமருதூர் நொண்டி நாடகம்

அனந்த பாரதியின் நொண்டி நாடகம்

திருவிடைமருதூர் நொண்டி நாடகத்தின் ஆசிரியர் அனந்த பாரதி. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

இதன் நாடக வடிவத்தில் கடவுள் வாழ்த்து, தோடையம் (நாடகத்தின் முன்மொழிப்பாட்டு) ஆகியன் முடிந்ததும் நொண்டி மேடையில் தோன்றுவான். அவன் பொன்னியில் நீராடி, திருநீறு அணிந்து, சிவ நாமம் சொல்லி, கையில் குளிசக் கயிறும், மார்பில் ரச மணியும் தரித்து, மார்பில் முத்து மாலைகள் ஒளி வீசும் படி நொண்டி வருவான்.

பொன் சரிகைப் புள்ளி உருமாலை - வாகைப்
பூவணிந்து கட்டியுள்ளே மேவுமிந்திர சாலை
விஞ்சை மூலி ஒன்றை வைத்துக்காலை - நொண்டி
விளம்பரஞ் சபையிலாட விருதுகட்டினேனே.

என நொண்டி சிந்துவில் பாவமைத்து பாடுவான்.

உசாத்துணை


✅Finalised Page