under review

ஜே.வி. செல்லையா

From Tamil Wiki
ஜே.வி. செல்லையா

ஜே.வி. செல்லையா (1875-1947) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர். பத்துப்பாட்டு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1875-ல் பிறந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், லத்தீன் மொழிகளில் புலமை உடையவர்.

ஆசிரியப்பணி

ஜே.வி. செல்லையா வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் துணை அதிபராகவும், அதிபராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

ஜே.வி. செல்லையா 1921-ல் அரசியலில் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக இருந்தார். வட்டுக்கோட்டை குருமடம் கல்விநிலையத்துடன் தொடர்புகொண்டிருந்தார்.

இதழியல்

ஜே.வி. செல்லையா ஈழத்தின் முதல் தமிழ் இதழ் எனக் கருதப்படும் உதயதாரகை இதழின் ஆங்கிலப் பகுதி ஆசிரியராகப் பல ஆண்டுகள் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஜே.வி. செல்லையா 1936-ல் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் பயின்றார். ஜே.வி. செல்லையா பத்துப்பாட்டு நூலை செய்யுளாக ஆங்கிலத்தில் The Ten Tamil Idylls என்னும் தலைப்பில் 1946 டிசம்பரில் மொழியாக்கம் செய்தார். இலக்கியம், சமயம், கல்வி, அரசியல், விஞ்ஞானம் என பலதுறைகளில் பணியாற்றினார்.

1922-ல் ’ஆங்கிலக் கல்வி வளர்ச்சியில் ஒரு நூற்றாண்டு’ என்ற நூலை எழுதினார். இந்நூலில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆங்கிலக் கல்வி வளர்ச்சி பெற்ற வரலாறும், வட்டுக்கோட்டைச் செமினரி, யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிய கல்விப் பணி, அமெரிக்க மிஷினரிகள் கல்வித் தொண்டுகள் குறித்தும் எழுதினார். 1984-ல் இந்நூல் யாழ்ப்பாணக் கல்லூரியால் மீள்பதிவு செய்யப்பட்டது.

The Ten Tamil Idylls

ஜே.வி.செல்லையாவின் பத்துப்பாட்டு மொழியாக்கம் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சங்க இலக்கியப்படைப்புகளில் ஒன்று. 1946 டிசம்பரில் சுவாமி விபுலானந்தர் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவு இதற்கிருந்தது. The Ten Tamil Idylls என்னும் தலைப்பு பிழையான மொழியாக்கம் என கமில் சுவலபிள் போன்ற பிற்கால ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அந்த மொழியாக்கம் சரியானதல்ல என்று க.பூரணசந்திரன் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயினும் முக்கியமான முன்னோடி முயற்சி என அது கருதப்படுகிறது.

மறைவு

ஜே.வி. செல்லையா 1947-ல் மறைந்தார்

நூல் பட்டியல்

  • The Ten Tamil Idylls (பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
  • ஆங்கிலக் கல்வி வளர்ச்சியில் ஒரு நூற்றாண்டு (A Century of English Education)

உசாத்துணை


✅Finalised Page