under review

சதுரகராதி

From Tamil Wiki
commonfolks.in

சதுரகராதி அகரவரிசையில் தொகுக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி. 18-ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் தொகுக்கப்பட்டு 1824-ல் முழுமையாய் அச்சேறியது. சதுரகராதியின் பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . சதுரகராதி தமிழ் மொழியில் வழங்கபெறும் அருஞ்சொற்கள், எளிய சொற்கள், வழக்குச் சொற்கள் என அனைத்திற்கும் பொருள் தருகிறது. பின்னாட்களில் தொகுக்கப்பட்ட தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதி.

ஆசிரியர்

சதுரகராதியைத் தொகுத்தவர் வீரமாமுனிவர். பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்து, தமிழ் கற்று, இலக்கண இலக்கிய நூல்களும் அகராதிகளும் இயற்றி, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய கிறிஸ்தவப் பாதிரியார்களில் ஒருவர்.இவர் இயற்றிய அகராதிகள் மூன்று அவை சதுரகராதி (ஒரு மொழி அகராதி), தமிழ் இலத்தீன் அகராதி (இரு மொழி அகராதி), போர்த்துகீஸ் - இலத்தீன் – தமிழ் அகராதி(மும்மொழி அகராதி).

பதிப்பு

சதுரகராதி பொ.யு. 1732-ல் தொகுக்கப்பட்டது. ஏடுகளில் பிரதிகள் செய்யப்பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் பரவியது. இந்நுாலின் இராண்டாம் தொகுதியான (பொருளகராதி) 1819-ல் அச்சிடப்பட்டது. பொருள், தொகை, தொடை என அனைத்து இயல்களும் 1824-ல் ரிச்சா்டு கிளார்க்கின் மேற்பார்வையில் தாண்டவராய முதலியார், இராமச்சந்திரகவிராயா் இருவராலும் பரிசோதிக்கப்பட்டு சென்னையில் வெளியிடப்பட்டது. எனினும் 1928-ல் வெளியிடப்பட்ட பதிப்பே திருந்திய பதிப்பாக கொள்ளப்படுகிறது.

நூல் அமைப்பு

சதுரகராதியின் முன்னுரையில் வீரமாமுனிவர் "செந்தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள பெரும்பாலான எல்லாச் சொற்களையும் தொகுத்து அவற்றினுள் பொதிந்துள்ள இருமை, பன்மைப் பொருள்களை அவற்றின் ஆற்றலோடு கொடுத்துள்ளேன்.ஒரு பொருள் பல சொற்களாக உள்ள பெயர்ச் சொற்களைக் கொடுத்து அந்தச்சொற்கலைக் கையாண்டுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கொள்உம் கருத்தை அறிந்து, அவை கொள்ளும் பல்வேறு நிலைகளையும் காட்டி உள்ள்ளேன். தமிழ் மொழியின் எண் அடிப்படையில் வழங்கும் எண் மலைகள், எழு கடல்கள் அறு சுவைகள் போன்ற எண் அடைச் சொற்களின் விரிவுகளை மூன்றாம் பிரிவில் தந்துள்ளேன். இறுதியாக செய்யுட்கள் இயற்றப் பயன்படும் முதலெழுத்து வேறுபட்ட ஒரே அசை கொண்ட ஒலி ஒற்றுமை உள்ள சொற்றொகுதியைத் தொகுத்துள்ளேன்" என்று குறிப்பிடுகிறார்.

சதுரகராதியைக் கருவூலம் (ஒத்த பொருள்களை உடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது-Thesaurus) என்று வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சதுரகராதி -நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு தொகுப்புப் பாடல் இடம்பெறுகிறது.

பெயரகராதி

பெயரகராதியில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன. உதாரணம்

அரங்கம்-ஆற்றிடைக்குறை, சத்திரம், சாலை, சிலம்புக்கூடம், நாடக சாலை, போர்க்களம்

பொருளகராதி

பொருள்கராதி ஒரு பொருளைக்குரிய பல சொற்களை அளிக்கிறது. இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரவரிசையில் வைத்து அந்தப் பொருள்களுக்கு உரிய பல பெயர்களும் அகரவரிசையில் சுட்டப்பட்டுள்ளன.

தொகையகராதி

தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரவரிசையில் அமைந்துள்ளன.

தொடையகராதி

தொடையகராதியில் பல தொடைப்பதங்களோடு அடைமொழி, ஈரெச்சம், மறுதொகை, முற்று வினை, வினைக்குறிப்பு, வேற்றுமை முதலிய விகுதியுருபு, வடமொழிச் சங்கிருதம் முதலிய எழுத்துத் திரிபு, பெயரெச்சம் வினையெச்சம் பகுபதம் விகுதியாலும் வந்த தொடைப்பதங்களைத் தொகுத்துக் கூறியுள்ளார்

தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்கள் அகரநிரலில் தரப்பட்டுள்ளன குறிற்கீழெதுகை (படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல்) , நெடிற்கீழெதுகை (ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை) என இருபகுதிகளாக சொற்களை அமைத்துப் பொருள் சுட்டப்பட்டுள்ளது . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கியதற்கு ஒப்பிடப்படுகிறது.

சிறப்புகள்

சதுரகராதியில் சொற்பொருள் விளக்கம், பழைய நிகண்டுகளில் உள்ளதைப் போல் செய்யுள் வடிவில் அல்லாமல் சொற்களைத் தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திப் பொருள் கூறப்பட்டதால் மக்களுக்கு பொருள் கொள்ளல் எளிதாகியது. சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் இடம்பெற்றன.

சதுரகராதியில் ஒரு சொல் நான்கு பிரிவுகளிலும் இடம்பெறும்விதம் மற்ற அகராதி நூல்களில் இல்லாத சிறப்பு. சான்றாக உரை என்ற சொல்

  • பெயர் – உயர்ச்சி, உரையென்னேவல், ஒலி, சொல், சொற்பயன், தேய்பு, பொன்
  • பொருள் – அத்தம், அருத்தம், சொற்பயன், பதம், பாழி
  • தொகை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
  • தொடை - உயர்ச்சி, உரையென்னேவல், ஒலி, சொல், சொற்பயன், தேய்பு, பொன்.

ஒரு சொல்லை வகைப்படுத்திக் கூறுவதோடல்லாது ஒவ்வொன்றிற்கும் விளக்கமும் தரப்படுகிறது. உதாரணமாக: ”உரை – 4 : கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை அவையாவன: செய்யுட் கருத்துரைத்தலே கருத்துரை, சொற்றொறும் பதப் பயனுரைத்தலே பொழிப்புரை, இலக்கணமும் இலக்கியமும் எடுத்துக் காட்டிப் பொருள் விரித்துரைத்தலே அகலவுரை”.

கலைச்சொற்கள்

சதுரகராதியில் அறிவியல், கணிதம், இசை போன்ற பல துறைகள் தொடர்பான பல சொற்கள் இடம்பெறுகின்றன.

அறிவியல் சொற்கள்

வானிலை –ராசி 12, மண்டலம் 3, 7, மாதங்கள் 12, அவற்றிற்குரிய நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றிற்கான சொற்கள் இடம்பெறுகின்றன.

மருத்துவம் – உயிர் வேதனை 12, மூலம் 10 (சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம்)

கணிதம் - சங்கலிதம் (கூட்டல்), விபகலிதம் (கழித்தல்), குணனம்( பெருக்கல்), பாகாரம்( பங்கிடல்) , வர்க்கம் (சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம் -square), வர்க்கமூலம் (அவ்வர்க்கத் தொகையினின்ற தன்மூலமாகிய வரம்பறிதல்-square root), கனம் (சமமாகிய மூவெண்ணின் பெருக்கம் -cube ), கனமூலம் -(அக்கனத் தொகையினின்ற தன்மூலமாகிய ஒரு மூ லையறிதல்-cube root)

இசை தொடர்பான சொற்கள்

இசை – பண் - 4, இசை - 3,7, ராகத்தகுதி, 32 வகை ராகம், பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடப்படக்கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப்பெயர்கள் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

சதுரகராதி, தமிழ் இணைய கல்விக் கழகம்

சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்


✅Finalised Page