under review

காரைக்கிழார்

From Tamil Wiki
காரைக்கிழார்

காரைக்கிழார் (அக்டோபர் 13, 1941 - ஜனவரி 17, 2016) மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் மரபுக்கவிஞர்களில் ஒருவர். மலேசிய மரபுக்கவிதையின் வளர்ச்சிக்காக தீவிரமாகப் பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

காரைக்கிழார் அக்டோபர் 13, 1941 அன்று பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுனில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் முத்துராமலிங்கம். தாயாரின் பெயர் முனியம்மா. காரைக்கிழார் எட்டு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது மகன். காரைக்கிழாரின் இயற்பெயர் கருப்பையா.

காரைக்கிழார் தன் ஆரம்பக் கல்வியை பினாங்கில் உள்ள அரசு பள்ளியில் பயின்றார். ஆறாம் ஆண்டுடன் அவர் பள்ளி வாழ்க்கை நிறைவை பெற்றது.

குடும்பம், தொழில்

காரைக்கிழார்

காரைக்கிழார் மனைவியின் பெயர் கிருஷ்ணாம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

பினாங்கில் இருந்தபோதே ஓர் அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியில் ஈடுபட்டார் காரைக்கிழார். இவரது கவிதை புனையும் ஆற்றலைக் கண்ட முருகு சுப்பிரமணியன் தமிழ் நேசனில் வேலை செய்ய காரைக்கிழாரை கோலாலம்பூருக்கு அழைத்துக்கொண்டார். முதலில் தமிழ் நேசன் நாளிதழில் மெய்ப்பு திருத்தும் பணியில் அமர்த்தப்பட்டார் காரைக்கிழார். பின்னர், 1970 முதல் 1980 தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து, தேசிய நிலதிநி கூட்டுறவு சங்கம் வெளியிடும் 'கூட்டுறவு' இதழின் ஆசிரியராக பணியில் அமர்ந்தார். மலேசிய நண்பன் நாளிதழில் பணியாற்றும் வாய்ப்புக்கிடைக்கவே அங்கு மெய்ப்பு திருத்துனராக பணியில் அமர்ந்தார். இளமை முதலே காரைக்கிழாருக்கு அச்சகத் தொழிலில் நாட்டம் இருந்ததால் 80-களில் நண்பர்களுடன் இணைந்து கே.எம் எனும் அச்சகம் ஒன்றையும் நிறுவி நடத்தினார். தன் இறுதிக் காலம் வரை காரைக்கிழார் கே.எம் அச்சக நிறுவனத்தை நிர்வகித்தார்.

இலக்கிய வாழ்வு

காரைக்கிழார்

1958-ல் தனது பதினேழாவது வயதில் சிங்கப்பூரில் நடந்த கவிதைப் போட்டிக்குக் கவிதை எழுதியதில் இருந்து காரைக்கிழாரின் இலக்கிய வாழ்வு தொடங்கியது. அப்போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1960-ல் கண்ணதாசன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட 'தென்றல்' இதழில் காரைக்கிழாரின் கவிதை பிரசுரமானது அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. பினாங்கு தமிழிளைஞர் மணிமன்றத்தின் வழியாகவே காரைக்கிழார் தன்னைக் கவிஞராக வளர்த்துக்கொண்டார்.

கவிதைகள் மட்டுமல்லாமல் காரைக்கிழார் பாடல்கள், சிறுகதைகள், நாவல் என பல்வேறு இலக்கிய வடிவங்களில் முயன்றுள்ளார். மலேசிய வானொலிக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

சம்பந்தர் அந்தாதி போட்டியில் முதல் பரிசை வென்றதும், கணைகள் தொகுப்புக்கான கவிதைகளை ஒரே நாளில் எழுதி முடித்ததும் அக்காலக்கட்டத்தில் இவரை தனித்துவமாக அடையாளம் காட்டின.

பொது அமைப்புகளில் பங்களிப்பு

  • பினாங்கு தமிழிளைஞர் மணிமன்றத்தின் உறுப்பினராகி அதன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
  • 1977-ம் ஆண்டின் இடைப்பகுதியில் 'கோலாலம்பூர் கவிதைக் களம்' என்னும் மரபுக்கவிதைக்கான அமைப்பு சா.ஆ. அன்பானந்தனின் ஆலோசனைபடி காரைக்கிழார், மைதீ.சுல்தான், பாதாசன், வீரமான், ஆகியோர் முன்னின்று தொடங்கினர். சா. ஆ. அன்பானந்தனின் மறைவுக்குப்பிறகு காரைக்கிழார் அவ்வியக்கத்தை வழிநடத்தினார்.
  • 1999-ம் ஆண்டில் மலேசியத் தமிழ் மரபு கவிஞர்களின் முதலாவது தேசிய மாநாடு தலைநகர் தேசிய மொழி வளர்ப்பு நிறுவன (டேவான் பகாசா டான் புஸ்தகா) மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக கவிஞர் காரைக்கிழார் பொறுப்பேற்றார்.
  • கோலாலம்பூர் முச்சங்கம் என்னும் பெயரில் அரசு பதிவு செய்யப்பட்ட சங்கத்தால் ஜனவரி 13, 2001 அன்று புத்ரா உலக வாணிப சுதந்திர (மெர்டேக்கா) மண்டபத்தில் தமிழர் திருநாள் நடத்தப்பட்டது. அந்தத் தமிழர் திருநாளை நடத்திய முச்சங்கத்தின் தலைவராகக் கவிஞர் காரைக்கிழார் திகழ்ந்தார்.
  • முச்சங்கத்தின் பெயர் 'கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம்' எனப் மாற்றப்பட்டது. பின்னர் அது 'மலேசியத் தமிழர் சங்கம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. மலேசியத் தமிழர் சங்கத்திற்கெனக் கடனில்லாத வகையில் சொந்தமான ஒரு மாடிக் கட்டடத்தை ஈப்போ சாலை 6-ஆவது கிலோ மீட்டரில் உள்ள முத்தியாரா காம்பிளக்சில் காரைக்கிழார் இச்சங்கத்தில் தலைவராக இருந்தபோது அமைத்தனர்.

மரணம்

ஜனவரி 17, 2016 அன்று தனது 75-ஆவது வயதில் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

விருது, அங்கீகாரம்

  • 1988/89 எஸ்.பி.எம் பாடத்தில் காரைக்கிழாரின் கவிதைகள் சேர்க்கப்பட்டன.
  • 'மலாயன் பேங்கிங்' எனும் வங்கி காரைக்கிழாரின் கவிதைகளை மலாயில் மொழிமாற்றம் செய்தது.
  • 'டேவான் பாஹாசா டான் புஸ்தாகா' காரைக்கிழாரின் கவிதைகளை மலாயில் பிரசுரித்தது.
  • பெங்களூர் பல்கலைக்கழகம் காரைக்கிழாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து பாடத்திட்டத்தில் இணைத்தது.
  • ம.இ.காவின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் 'டைமன் ஜூப்லி' விருது வழங்கப்பட்டது.

நூல்கள்

கவிதைகள்
  • 'அலை ஓசை' முழு நீளக் காவியம், 1975
  • 'கணைகள்' கவிதை நூல் - 1978
  • சம்பந்தர் அந்தாதி: கட்டளைக்கலித்துறை - 2009
  • பூச்சரம் - 1980
சிறுகதை
  • நவமலர் - சிறுகதை - 1978
நாவல்
  • 'பயணம்' நாவல்
  • வண்ணத்துப்பூச்சி - குறுநாவல் - 1972

உசாத்துணை

  • நம் முன்னோடிகள் - தேசியப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை (2000)


✅Finalised Page