under review

அம்பர்கிழான் அருவந்தை

From Tamil Wiki

அம்பர்கிழான் அருவந்தை சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். காவிரி ஆற்றங்கரையில் அமைந்த அம்பர் என்ற ஊரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக் குறிப்பு

அம்பர்கிழான் அருவந்தை பற்றிய செய்திகள் சங்கத்தொகைப்பாடல்களில் உள்ளன. சோழநாடு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம் வட்டத்தில் அரிசிலாற்றங்கரையில் அமைந்த அம்பர் என்ற ஊரை ஆட்சி செய்த சீறூர் மன்னன் அருவந்தை. அருவந்தையின் குடியும் ஊரும் பொ.யு 8-ம் நூற்றாண்டிலும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது. இக்குடிவழியில் இதே பெயருடைய இன்னொருவரான சேந்தன் என்பவர் திவாகர நிகண்டை இயற்றக் காரணமாக அமைந்தார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

கல்லாடனார் (சங்க காலம்) என்ற புலவர் அருவந்தையை காவிரியோடு வாழ்த்திப் பாடினார். அருவந்தையைப் பற்றிய பாடலை கல்லாடனார் புறநானூற்றில் 385-ஆவது பாடலாகப் பாடினார். கல்லாடனார் அவன் வாயிலில் நின்று பாடவில்லை. பிறனொருவன் வாயிலில் நின்றுகொண்டு தன் தடாரிப் பறையை முழக்கியதைக் கேட்ட அம்பர் கிழான் அருவந்தை தானே முன்வந்து புலவரின் பசியைப் போக்கினான். அவர் உடுத்தியிருந்த அழுக்கால் நீலநிறத்துடன் காணப்பட்ட அவரது ஆடையைக் களைந்துவிட்டு வெண்மையான புத்தாடை அணிவித்தான். அதனால் அவன் தன் வேங்கடமலையில் பொழியும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என கல்லாடனார் வாழ்த்துவதாகப் பாடல் அமைந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page