under review

புதியதோர் உலகம்

From Tamil Wiki
நாவல் முகப்பு அட்டை

புதியதோர் உலகம் (1993) ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் மலாயா தோட்டங்களில் வசித்த தமிழர்களுக்கு நேர்ந்த பசி, பஞ்சம், வறுமை ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். இந்நூல் மொத்தம் முந்நூறு பக்கங்களைக் கொண்டது. எழுத்தாளர் அ. ரெங்கசாமி இந்நாவலை எழுதினார்.

வரலாற்றுப்பின்னணி

ஜப்பானியர் ஆட்சியின் போது தோட்டங்கள் பஞ்சத்தில் மூழ்கின. ரப்பர் தோட்டங்களை நம்பி இருந்த இந்தியர்கள் வேலையும் சம்பளமும் இல்லாமல் பசி பட்டினியில் வாடினர். குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய ஆண்கள் சயாமுக்கு ரயில் பாதை அமைக்கச் சென்றதால் நிலைமை மேலும் மோசமானது. புதிய உணவு முறைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் தோட்டமக்கள் மெல்ல மெல்ல பழகிக்கொண்டனர்.

கதைச்சுருக்கம்

ஜப்பானியர்கள் மலேசியாவின் கிழக்கு முனையான கிளந்தானில் தரையிறங்கியவுடன் தோட்ட முதலாளிகளான வெள்ளை இனத் துரை தோட்டத்தை விட்டுச் செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டுப் போகும்போது மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்ற ரப்பர் பால் கட்டிகளை எரித்து விட்டும் கால்வாயில் கவிழ்த்து விட்டும் செல்கின்றனர். கதையின் மையப்பாத்திரமான கருப்பையா கங்காணியைச் சுற்றி கதை நகர்கிறது. ஜப்பானியர்கள் நாட்டை முழுமையாகப் பிடிக்கத் தொடங்கியவுடன் அங்காங்கே குண்டுகள் வீசப்படுகின்றன. மக்கள் உணவின்றி மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு போன்ற பயிர்களை நம்பி உயிர்வாழத் தொடங்குகிறார்கள்.

ஜப்பானியர்களின் ஆணைக்கிணங்க தோட்டத்திலிருந்து பலர் சயாமுக்கு ரயில் பாதை போட பிடித்துச் செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு கங்காணியும் குறிப்பிட்ட ஆட்களை ரயில் கட்டுமானத்துக்குத் திரட்ட வேண்டுமென கட்டளை இடப்படுகிறது. கிள்ளான் நகரை ஒட்டிய தோட்டமொன்றை சேர்ந்த கருப்பையா கங்காணியும் சிலரை சயாம் ரயில் கட்டுமானப்பணிக்கு திரட்டித் தருகிறார். இரண்டாம் முறை ஆள்பிடிப்பின்போது கருப்பையா கங்காணியும் அவரின் உடன் பிறவாத மகனாக இருக்கும் சங்கிலியும் பிடித்துச் செல்லப்படுகின்றனர். ரயில் தைப்பிங்கில் நிறுத்தப்படும்போது இருவரும் ரயிலிலிருந்து தப்பித்து ஓடி நடந்தே தோட்டத்திற்கு வருகின்றனர். அதன் பின்னர், அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை தோட்டத்தை விட்டு வெளியேறி துலுக்குஞ்சான் (கேரித்தீவு) செல்லும் ஆற்றுத் துறைமுகத்தையொட்டிய பகுதியில் வீடுகளைக் கட்டிக் கொண்டு குடியேறுகின்றனர்.

ஜப்பானியர்களிடமிருந்து தப்புவதற்காக மேற்கொண்ட வழிமுறைகள், பஞ்சகாலத்தைச் சமாளிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், அந்தக் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் நுண் தகவல்கள் என நாவல் நகர்கிறது. அந்த இக்கட்டான காலக்கட்டத்தை மக்கள் எதிர்கொண்ட விதத்தில் இருந்த குதுகலத்தையும் நாவல் பதிவு செய்கிறது. ஜப்பானியர்கள் கொண்டு வந்த ரேஷன் கார்ட் நடைமுறை, விநோதமான தண்டனைகள், மக்கள் உணவுத் தேவைக்காக பயிரிட்ட கேழ்வரகு நடவு, அறுவடை, சமையல் முறை, ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி சூழல் என விரிவான தகவல்களை நாவல் தருகிறது. கதை பெரும்பாலும் ஒருவர் கண்டதைச் சொல்லும் உரையாடல் பாணியாகவே அமைந்திருக்கிறது.

அ.ரெங்கசாமி

கதைமாந்தர்கள்

  • கருப்பையா கங்காணி – தோட்டத்தில் கங்காணியாகவும் தம்மைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்.
  • பாக்கியம்- கருப்பையா கங்காணியின் மனைவி
  • நல்லதம்பி – கருப்பையா கங்காணியின் மருமகன், ஒயிலாட்ட ஆசிரியர், இளமைக்கே உரிய துடுக்கு மிகுந்தவர், இந்தியத் தேசிய ராணுவப் பயிற்சியில் பங்கெடுக்கிறார்.
  • சங்கிலி – வெகுளித்தனமும் பயமும் நிறைந்த இளைஞன்
  • மூக்காயி – நல்லதம்பியின் மனைவி
  • சரஸ்வதி – சங்கிலியின் மனைவி
  • கோக்கி – வெள்ளைக்கார முதலாளியின் வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்தவர்
  • கிராணி – ஜப்பானியர்களின் உத்திரவுக்கு இணங்கி தோட்டமக்களை ரயில் கட்டுமானத்துக்குப் பிடித்துக் கொடுப்பவர்

இலக்கிய இடம்

எழுத்தாளர் ம.நவீன் இந்நாவலை ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் தோட்டத்தில் வாழும் மனிதர்களின் சுவாரசியமான அனுபவங்களைத் தகவல்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் என்கிறார். அதேசமயம் ஒரு பஞ்ச காலத்தில் கைவிடப்பட்ட மக்களின் வழி எதையும் காட்சியாகச் சொல்லி அவற்றை வாசகனுக்கு அனுபவமாக மாற்றும் பொறுப்பை அவர் ஏற்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page