under review

பி.எம்.கண்ணன்

From Tamil Wiki
பி.எம்.கண்ணன் தொடர்கதை
பி.எம்.கண்ணன் தொடர்கதைப்பக்கம்

பி.எம். கண்ணன் தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர். பெரும்பாலும் குடும்பப் பின்னணி கொண்ட இவருடைய நாவல்கள் 1950களில் குமுதம், கல்கி, விகடன் இதழ்களில் வெளியாயின. அன்றைய வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.

இதழியல்

பி.எம். கண்ணன் முழுநேர இதழாளராகப் பணியாற்றியவர். ஹனுமான் இதழில் பி.எம். கண்ணன் ஆசிரியராகப் பணியாற்றினார் என்று வல்லிக்கண்ணன் தன்னுடைய வாழ்க்கைச்சுவடுகள் நூலில் குறிப்பிடுகிறார். ஹனுமான் இதழில் பி.எம்.கண்ணனின் பல நாவல்கள் தொடராக வெளிவந்தன.சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த கலாவல்லி என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

பி.எம்.கண்ணன் 'மறு ஜன்மம்’ என்னும் கதையை 1941-ல் 'மணிக்கொடி’ இதழில் எழுதினார். அவர் 1943-ல் எழுதிய 'பெண் தெய்வம்’ நாவல் கலைமகள் இதழில் பரிசு பெற்று தொடராக வெளிவந்தது. பி.எம்.கண்ணனின் ’நிலவே நீ சொல்’, 'பெண்ணுக்கு ஒரு நீதி’ ஆகிய நாவல்கள் 1964-1965-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்து புகழ்பெற்றன. ஜோதிமின்னல் என்னும் கதையும் குமுதம் இதழில் வெளிவந்து பெரிதும் விரும்பப்பட்டது.

இலக்கிய இடம்

கலாவல்லி

பி.எம். கண்ணன் குடும்பப் பெண்களின் துயரத்தை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர். ஐம்பதுகளில் வார இதழ்களை படிப்பவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களே என்பதனால் அத்தகைய கதைகள் விரும்பிப் படிக்கப்பட்டன. ஆனால் கடுந்துன்பம் உற்றாலும் குடும்பம் என்னும் அமைப்பை மீறாதவை அவருடைய பெண் கதாபாத்திரங்கள். "அவரது பாத்திரச் சித்தரிப்புகளும், வர்ணனைகளும் கூட அவரது எழுத்து வண்ணத்தை காட்டக் கூடியவை. பாசாங்கற்று, தன் சாமர்த்தியத்தைக் காட்டுவதாக இல்லாமல் நம்பகத்தன்மையுடன் கதை சொல்பவராகவே அவரது நாவல்களைப் படித்த பின் நமக்குத் தோன்றும்" என்று ஆய்வாள்ளர் வே. சபாநாயகம் அவரைப் பற்றிச் சொல்கிறார்[1].

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • பவழமாலை
  • தேவநாயகி
  • ஒற்றை நட்சத்திரம்
நாவல்கள்
  • பெண்தெய்வம்
  • பவழமாலை
  • தேவநாயகி
  • வாழ்வின் ஒளி
  • நாகவல்லி
  • சோறும் சொர்க்கமும்
  • கன்னிகாதானம்
  • ஒற்றை நட்சத்திரம்
  • அன்னைபூமி
  • ஜோதிமின்னல்
  • முள்வேலி
  • நிலத்தாமரை
  • தேன்கூடு
  • காந்தமலர்
  • தேவானை
  • அம்பே லட்சியம்
  • மலர்விளக்கு
  • இன்பக்கனவு
  • மண்ணும் மங்கையும்
  • பெண்ணுக்கு ஒரு நீதி
  • இன்பப்புதையல்
  • நிலவே நீ சொல்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page