under review

ந.மு. வேங்கடசாமி நாட்டார்

From Tamil Wiki
ந.மு. வேங்கடசாமி நாட்டார்

ந.மு. வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) தமிழறிஞர், தமிழாய்வாளர், ஆசிரியர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர் மற்றும் உரையாசிரியர் . பழந்தமிழ் நூல்களுக்கான உரைகளுக்காகவும், நக்கீரர், கபிலர் ஆய்வுநூல்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் நினைவு கூறப்படுகிறார்.

பிறப்பு,கல்வி

ஏப்ரல் 2, 1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவப்பிரகாசம்.

அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தார். சிறுவயதில் வல்லம் குருசாமி வாத்தியாரிடமும் அவரது தம்பி கந்தசாமி வாத்தியாரிடமும் படித்தார். கந்தசாமி திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். அவர்களிடம் நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார்.

சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம் (1906), பண்டிதம் (1907) ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடா பரிசாகப் பெற்றார். வேங்கடசாமி மகா வைத்தியநாத அய்யரிடம் இசை பயின்ற தன் சித்தப்பா சொக்கலிங்க சிலநாள் கர்நாடக சங்கீதம் கற்றார்.

தனிவாழ்க்கை

1907-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. முதலில் புதுக்கோட்டைக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் தமது 24-ம் வயதில் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார். கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார். திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார். தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.

இலக்கியவாழ்க்கை

அவர் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், செந்தமிழ், ஆனந்த போதினி என 12க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சைவம் தொடர்பான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவற்றில் சில நூல் வடிவில் வந்துள்ளன. கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார் தூண்டுதலின் பேரில் நாட்டாரின் நக்கீரர் நூலையும், கபிலர் நூலையும் வெளியிட்டார். 'கபிலர்' நூலில் தமிழ்ச் சங்கம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார்.

வேங்கடசாமி நாட்டார் ஓய்வுபெற்ற பின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் கெளரவ முதல்வராக பணியாற்றினார்.திருச்சியில் இருந்த மூன்று கல்லூரிகளை இணைக்கவும் பழந்தமிழ் இலக்கியங்களை தனியாகப் படிக்கவும் ஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தினார்.

நூல்கள்

நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ள ர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1926) போன்ற நூல்கள் இவர் திருச்சியில் இருந்தபோது எழுதியவை. நக்கீரர் நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத் தொடர்புக்குப்பின் முழுநேரப் பதிப்பாசிரியராகவும் உரையாசிரியராகவும் ஆனார். 1925-க்கும் 31-க்கும் இடைப்பட்ட காலங்களில் 'இன்னா நாற்பது', 'களவழி நாற்பது', 'ஆத்திசூடி', 'கொன்றைவேந்தன்', 'வெற்றிவேற்கை', 'மூதுரை', 'நல்வழி' போன்ற பல நூல்கள் இவரது முகவுரை பதிப்புரை, உரை என்று வந்துள்ளன. 1931-ல் அகத்தியர் தேவாரத் திரட்டு உரையும், பரஞ்சோதி திருவிளையாடல் புராண உரையும் வந்தன. ஓய்வு பெற்ற பின் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிற்கு விரிவான உரை எழுதினார். தண்டியலங்காரத்திற்குப் பழைய உரையைப் பதிப்பித்துள்ளார்.

சொற்பொழிவாளர்

1915-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் வேளிர் வரலாறு பற்றிச் சொற்பொழிவாற்றினார். தமிழகத்தின் பல ஊர்களில் சைவ சித்தாந்த சொற்பொழிவாற்றினார். 1930-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியச் சொற்பொழிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிலப்பதிகாரச் சொற்பொழிவு (1931), கொழும்பில் அ.ச. ஞானசம்பந்தம் தலைமையில் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு (1939), கலித்தொகை மாநாட்டின் தலைமைச் சொற்பொழிவு (1941) என பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.

விருதுகள், நினைவகங்கள்

  • வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றலுக்காக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் டிசம்பர் 24, 1940-ல் நடத்திய மாநாட்டில் நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது.
  • இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-ல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது.
  • 1944-ல் வேங்கடசாமி நாட்டாருக்கு கோவில் கட்டினர்.

மறைவு

வேங்கடசாமி நாட்டார் மார்ச் 28, 1944-ல் காலமானார். அவரது உடலை நடுக்காவிரி குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கோவிந்தராஜ் நாட்டாருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தனர்.

நூல்கள் பட்டியல்

  • வேளிர் வரலாறு (1915)
  • நக்கீரர் (1919)
  • கபிலர் (1921)
  • கள்ளர் சரித்திரம் (1923)
  • கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926)
  • சோழர் சரித்திரம் (1926)
  • கட்டுரைத் திரட்டு
  • சில செய்யுள்கள்
  • காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது
உரைகள்
  • அகநானூறு
  • இன்னா நாற்பது
  • களவழி நாற்பது
  • கார் நாற்பது
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை (1941)
  • கொன்றை வேந்தன் (1949)
  • உலகநீதி (1949)
  • மூதுரை (1950)
  • ஆத்திசூடி (1950)
  • நல்வழி- ஒளவை (1950)
  • நன்னெறி (1952)

உசாத்துணை


✅Finalised Page