under review

ஆபிரகாம் பண்டிதர்

From Tamil Wiki

To read the article in English: Abraham Pandithar. ‎

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் நூல்

ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - ஆகஸ்ட் 31, 1919) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடி. இசை ஆய்வாளர், தமிழறிஞர். சித்த மருத்துவராகவும் தமிழ் கிறித்தவ கவிஞராகவும் இருந்தார். கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூல் வழியாக தொல்தமிழ் இசையின் பண் அமைப்பு முறையை கணிதரீதியாக விளக்கினார். பண் முறையே ராகங்களாகியது என்றும் அதுவே கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையாகவும், இந்துஸ்தானி இசையின் ராகமுறையாகவும் அமைந்தது என்றார்.

ஆபிரகாம் பண்டிதர் பரோடா இசைமாநாடு

பிறப்பு, கல்வி

ஆபிரகாம் பண்டிதர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் முத்துசாமி பண்டிதர் -அன்னம்மை அம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 2, 1859-ல் பிறந்தார். அவருடைய தந்தைவழி தாத்தா முத்துசாமி நாடாரின் 11 குழந்தைகளில் பத்து குழந்தைகள் காலரா நோயால் இறந்தனர். அவர் எஞ்சிய மகனுக்காக வேண்டிக்கொண்டு கிறிஸ்தவராக மாறினார். முத்துசாமிநாடார் சாம்பவர் வடகரையில் இருந்து பங்களாச் சுரண்டைக்கு வந்து அங்கே ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரராக பணியாற்றினார்.

ஆபிரகாம் பண்டிதர் தனது ஆரம்ப கல்வியைப் பங்களாச் சுரண்டையில் முடித்தபின் 1870 முதல் 1878 வரை பன்றிகுளம் உயர்தர பள்ளியில் உயர்நிலை படிப்பை முடித்தார். அருகே உள்ள திருமலாபுரத்தில் தன் உறவினர் நடத்தி வந்த பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1874-ல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியை நடத்தி வந்த ரெவெ.யார்க் அவரை அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றும்படிக் கோரினார். அவர் இரண்டு ஆண்டுகள் அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆபிரகாம் பண்டிதர் தஞ்சை இசைமாநாடு

தனிவாழ்க்கை

ஆபிரகாம் பண்டிதர் நாஞ்சான்குளம் வேதக்கண் நாடார் மகள் ஞானவடிவு பொன்னம்மாளை டிசம்பர் 27, 1882-ல் மணம் புரிந்தார். ஞானவடிவு பொன்னம்மாள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர். திண்டுக்கல்லில் ஆபிரகாம் பண்டிதருடன் பணியாற்றியபின் தஞ்சையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த ஞானமுத்து என்பவர் தஞ்சைக்குச் சென்றால் ஞானவடிவு பொன்னம்மாளும் ஆசிரியராகப் பணியாற்றலாம் என அழைத்தார். ஆகவே 1884-ல் ஆபிரகாம் பண்டிதர் தஞ்சைக்குச் சென்றார். தஞ்சையில் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் ஆதரவில் இருவருக்கும் ஆசிரியர் பணி கிடைத்தது. ஞானவடிவு பொன்னம்மாள் தஞ்சாவூர் பூக்கடைப்பள்ளி (லேடி நேப்பியர் கேர்ஸ்ல் ஸ்கூல்) தலைமையாசிரியையாகவும் ஆபிரகாம் பண்டிதர் அங்கே தமிழாசிரியராகவும் பணியேற்றனர். ஆறாண்டுகள் அங்கே அவர்கள் பணியாற்றினர். 1890-ல் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் இங்கிலாந்து திரும்பினார். ஆபிரகாம் பண்டிதர் பணியில் இருந்து நீங்கி கர்ணானந்தர் சஞ்சீவி மருந்துகளை தயாரித்து விற்கத் தொடங்கினார்.

ஞானவடிவு பொன்னம்மாள் அன்னபூரணி, சௌந்தரவல்லி, சுந்தர பாண்டியன், ஆனந்த வல்லி, ஜோதிபாண்டியன், மரகத வல்லி என்னும் ஆறு குழந்தைகளை ஈன்றார். டிசம்பர் 15, 1911-ல் மறைந்தார். ஆபிரகாம் பண்டிதர் அதன்பின் கோயில்பாக்கியம் என்னும் பெண்மணியைமணந்து வரகுணபாண்டியன், சௌந்தர பாண்டியன், கனகவல்லி, மங்களவல்லி என்னும் நான்கு மக்களை பெற்றார்.

ஆபிரகாம் பண்டிதர் எடுத்த புகைப்படம் பண்டிதர்தோட்டத்து காற்றாடி

புகைப்படக்கலை

1876-ல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரெவெ யார்க் ஆபிரகாம் பண்டிதருக்கு புகைப்படக்கலையை கற்பித்தார். தனக்காக 15 x 12 டல்மெயெர் லென்சுடன் ஒரு புகைப்படக் கருவியை வாங்கி தொடர்ச்சியாகப் புகைப்படங்களை எடுக்கலானார். பல வேதிப்பொருட்களைக் கொண்டு அவரே நெகட்டிவ்களை கழுவி அவரே ப்ரிண்ட் செய்தார். பல புதிய கண்டுபிடிப்புகளையும் கழுவும் முறையில் செய்தார்.இந்தியாவின் சிறந்த அமெச்சூர் புகைப்படக்கலைஞராகவும் அவர் பிரபலமானார். 1909-ல் லண்டனில் இருந்த அரசு கலைக்கழகம் (Royal Society of Arts) அமைப்பின் உறுப்பினராக தேர்வானார்

அச்சுக்கலை

ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் இருந்த கந்தசாமிப் பிள்ளை என்பவரின் அச்சுக்கூடத்திற்குச் சென்று அச்சுமுறையை கற்றுக்கொண்டார். 1912-ல் தஞ்சையில் மின்விசையில் இயங்கும் முதல் அச்சகமாக லாலி அச்சகத்தை உருவாக்கினார். அதற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருட்டு 9 குதிரைச்சக்தி கொண்ட எரிவாயுக்கலனை நிறுவினார்.

சோதிடம்

ஆபிரகாம் பண்டிதர் சோதிடத்தின் அடிப்படைகளை கந்தசாமிப் பிள்ளையிடம் கற்றார். தஞ்சையில் பின்னர் ஜோதிடவிமர்சினி சபா என்னும் அமைப்பை நிறுவி கூட்டங்களை நடத்தினார். அதில் சோதிடத்தை கணிதநோக்கில் ஆராய்ந்தார். பின்னர் இசை ஆராய்ச்சியில் பன்னிரு ராசி சக்கரங்களின் கணிதமுறையை பயன்படுத்த இப்பயிற்சி அவருக்கு உதவியது.

மருத்துவம்

இசைமாநாடு தஞ்சை

திண்டுக்கல்லில் பணியாற்றுகையில் ஆனைமலைப்பட்டி என்னும் ஊரைச்சேர்ந்த பொன்னம்பல நாடார் என்பவரிடம் ஆபிரகாம் பண்டிதர் சித்தமருத்துவம் கற்றார். 1877-ல் அவருடன் சுருளிமலை மேல் மூலிகைதேடிச் சென்றபோது கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்து அரிய மூலிகைகளை பற்றித் தெரிந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. 1890-ல் கருணானந்தர் பெயரில் கருணானந்த சஞ்சீவினி மருந்துகளை தயாரித்து விற்க ஆரம்பித்தார். அவர் மனைவியும் பணியை உதறி அதில் ஈடுபட்டார். ஆபிரகாம் பண்டிதர் தயாரித்த செந்தூர சஞ்சீவினி என்னும் மருந்து பிளேக் நோய்க்கும் சமயசஞ்சீவினி மருந்து காலராவுக்கும் உதவுவதாக கருதப்பட்டமையால் மிகப்பெரிய வணிகவெற்றியை அடைந்தார். தஞ்சையில் 1894-ல் பெரிய பங்களாவை கட்டிக்கொண்டார்.

வேளாண்மை

கர்ணாமிர்தசாகரம் சுருக்கம்

ஆபிரகாம் பண்டிதர் தஞ்சை அருகே 100 ஏக்கர் நிலம் வாங்கி அங்கே ஒன்பதரைக் குதிரைச்சக்தி கொண்ட கிராஸ்ல்லி இயந்திரத்தை பொருத்தி கிணற்றுநீரை இறைத்து விவசாயம் செய்தார். அங்கே அவர் முதல் முறையாக லிவர்பூலில் இருந்து இயந்திரங்களை வரவழைத்து ஆழ்துளைக்கிணறு போட்டு காற்றாடிமூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தையும் நிறுவினார். அந்த இடத்துக்கு கருணானந்தபுரம் என்று பெயரிட்டார். பண்டிதர் பண்ணை என அழைக்கப்பட்ட அந்த நிலம் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. ஆபிரகாம் பண்டிதர் அங்கே பலவகையான வேளாண்மைச் சோதனைகளை செய்தார். அவர் உருவாக்கிய புதுவகைக் கரும்பு ராஜாக்கரும்பு என பெயரிடப்பட்டது. சிவப்புச்சோளத்தை அறிமுகம் செய்து அதை உள்ளூர் தேவைக்காக வளர்த்தெடுத்தார். பல்வேறு வேளாண்மைப் பொருட்காட்சிகளில் கருணானந்தபுரம் பரிசுகள் பெற்றது. வேளாண்மைக் கண்டுபிடிப்புகளுக்காக 6 தங்கப்பதக்கங்கள், 37 வெள்ளிப்பதக்கங்கள், 7 பித்தளைப் பதக்கங்களை பண்டிதர் பெற்றார். அன்றைய கவர்னர் சர் ஆர்தர் லாலி பிப்ரவரி 22, 1890-ல் கர்ணானந்த புரத்திற்கு வந்தார். விவசாயக் கமிஷனர் சிவசாமி ஐயர், இராமநாதபுரம் அரசர் போன்றவர்களும் அவருடைய பண்ணைக்கு வந்திருக்கிறார்கள்.

இசை

ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் இருக்கையில் பிரபல பிடில் வித்வான் சடையாண்டிப் பத்தர் என்பவரிடம் இசையின் அடிப்படைகளைக் கற்றார். கர்நாடக சங்கீத இசைக்கீர்த்தனங்கள் எழுதவும் ராகக்குறிப்புகள் எழுதவும் தேர்ச்சி அடைந்தார். தொடக்கம் முதலே ஆபிரகாம் பண்டிதர் தமிழக இசை முழுக்கமுழுக்க தெலுங்கில் இருப்பதை மறுத்துவந்தார். ஆகவே 96 இசைப்பாடல்களை எழுதினார். ஜெகன்னாந்த பட்டு கோசாயி என்பவர் 41 பாடல்களுக்கு சுவரம் அமைத்தார். 55 பாடல்களுக்கு தஞ்சை அரண்மனை வித்வான் வைணிகர் வெங்கடாசல ஐயர் சுவரம் அமைத்தார். அவை தஞ்சை சாமியா பிள்ளையால் கற்பிக்கப்பட்டன. கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற பெயரில் 1917-ல் பிரிமியர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வெளிவந்தன.

வெங்கடாச்சல ஐயர், சாமி ஐயர், பஞ்சாபகேச ஐயர் ஆகியோரை தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடு செய்தார். அவர்களில் பலர் பின்னாளில் இசையாய்வாளர்களாக ஆனார்கள்.

தமிழிசை ஆய்வு

பண்டிதர் குடும்பம்

ஆபிரகாம் பண்டிதர் 1912 முதல் தமிழிசையின் அமைப்பு மற்றும் வேர்களை ஆராயத் தொடங்கினார். மே 27, 1912-ல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி 1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார். அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ராகங்கள் அமைந்துள்ள விதத்தை கணிதரீதியாக ஆராய்ந்து வரைமுறைப்படுத்தினார். அதற்கு மேலையிசையின் கணக்குமுறையை பயன்படுத்தினார். இதை அவர் ராகபுடம் என அழைத்தார். 12 ராசி சக்கரம் என்பது சோதிடம் சார்ந்தது மட்டுமல்ல, அது தொன்மையான தமிழ் வானநூல் கணக்கும் காலக்கணக்கும் பிற கணக்குகளும் ஆகும் என கூறிய அவர் அதன் அடிப்படையில் பழந்தமிழ்ப்பண்கள் எப்படி அமைந்துள்ளன என விளக்கினார். அடிப்படைச் சுருதிகள் 24 என்பது அவருடைய கணிப்பு. பழந்தமிழ்ப் பண்களுக்கு நிகரான சமகால கர்நாடக சங்கீத ராகங்களையும் அவர் சுருதிக் கணக்கின் அடிப்படையில் எழுதிக்காட்டினார். அதுவரை அவ்வாறு ராகங்களின் சுருதிக்கணக்கு கணித அடிப்படையில் எழுதப்பட்டதில்லை. தன் ஆய்வுகளை கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூலில் விளக்கினார். இந்நூல் தமிழிசையின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் ராக அடிப்படைகளே வடக்கே இந்துஸ்தானி இசையிலும் உள்ளன என்று 1916, மார்ச் 20 முதல் 24 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று விளக்கினார். அவருடைய இரு மகள்களும் வீணையில் அவர் கூறுவதை வாசித்தனர். (பார்க்க கர்ணாமிர்த சாகரம்)

ஆபிரகாம் பண்டிதர் நா மம்முது

ஆபிரகாம் பண்டிதரின் வாரிசுகள்

இசை

ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர்.ஆ.வரகுணபாண்டியன் பாணர்கைவழி யாழ் என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பேரன் பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களைப் படைத்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

புகைப்படக்கலை

ஆபிரகாம் பண்டிதரின் மகன் ஜோதிப் பாண்டியன் புகைப்படக் கலையில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றார். லண்டன் ராயல் புகைப்படக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். உலகம் முழுதும் பயணித்து தன்னுடைய புரோமைட் ப்ரிண்டுகளை காட்சிப் படுத்தினார். பண்டிதரின் கடைசி மகன் சௌந்தர பாண்டியன் தென்னிந்திய ரயில்வேயின் அதிகாரப் பூர்வமான புகைப்படக் கலைஞராக இருந்தார். ஆபிரகாம் பண்டிதரின் பேரன் தவப்பாண்டியன் தஞ்சாவூர் அமெச்சூர் புகைப்படக் கழகத்தைத் தொடங்கி நீண்ட காலம் நடத்தி வந்தார்

கிறிஸ்தவ ஆய்வு

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் டி.ஏ.தனபாண்டியன்

ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பொருட்டு "நன்முறை காட்டும் நன்னெறி" என்னும் ஆய்வுநூலை எழுதினார். பைபிளின் அடிப்படை தத்துவக்கொள்கைகள் பற்றிய ஆய்வுநூல் இது.

விருதுகள்

1909-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கியது

நாட்டுடைமை

ஆபிரகாம் பண்டிதரின் நூல்கள் தமிழக அரசால் 2008-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மறைவு

ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 31, 1919-ல் காலமானார். பண்டிதர் தோட்டத்தில் அவர் அடக்கப்பட்டார்.

நினைவகங்கள், வாழ்க்கை வரலாறுகள்

ஆபிரகாம் பண்டிதருக்கு குறிப்பிடும்படியான நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படவில்லை. தஞ்சையில் ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த தெருவிற்கு அவரது நினைவாக ஆபிரகாம் பண்டிதர் தெரு என பெயரிடப்பட்டுள்ளது.[1]

நினைவுக்குறிப்புகள்
  • ஆபிரகாம் பண்டிதரின் பேரன் பேராசிரியர் டி.ஏ. தனபாண்டியன் அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்[2]. ( து.ஆ.தனபாண்டியன்)
  • ஆபிரகாம் பண்டிதர். நா.மம்முது- சாகித்ய அக்காதமி
  • ஆபிரகாம் பண்டிதர். சண்முக செல்வகணபதி, செ கற்பகம்

தொடர்ச்சிகள்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதருக்குப் பின் தமிழிசை ஆய்வு ஒரு பண்பாட்டியக்கமாக வளர்ச்சி பெற்றது. சுவாமி விபுலானந்தர், எஸ்.இராமநாதன், கு.கோதண்டபாணி, அ.இராகவன், வரகுண பாண்டியன், வீ.ப.க.சுந்தரம், குடந்தை சுந்தரேசனார், சேலம் ஜெயலட்சுமி, நா.மம்மது போன்ற தமிழிசை ஆய்வாளர்கள் பலர் உருவாகி வந்தனர்.

(பார்க்க தமிழிசை இயக்கம் )

நூல்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page