under review

அஞ்சில் அஞ்சியார்

From Tamil Wiki

அஞ்சில் அஞ்சியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் அஞ்சில் அஞ்சியார் இயற்றிய ஒருபாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

அஞ்சில் ஆந்தையார் அஞ்சில் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. ஊஞ்சலாடும் பெண்ணை இவர் 'அஞ்சில் ஓதி' என்று குறிப்பிடுவதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். . எனினும் அஞ்சில் ஆந்தையார் என்ற பெயரிலுள்ள புலவர் இயற்றிய பாடலில் அஞ்சில் என்னும் சொல் வரவில்லை. எனவே அஞ்சில் என்னும் சொல் ஊரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இலக்கிய வாழ்க்கை

சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் அஞ்சில் அஞ்சியார் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. (பாடல்- 90 )

பாடல்வழி அறிய வரும் செய்திகள்

  • ஆடிப் பதினெட்டன்று பெண்கள் தூய ஆடை அணிந்து பனைநாரால் கட்டப்பட்ட ஊஞ்சல்களில் ஆடினர். நல்லுணவை உண்டனர்
  • ஊர் மக்களின் ஆடைகளைத் துவைக்கும் பெண் புலைத்தி எனப்பட்டாள்
  • பருத்தி ஆடைகளைக் கஞ்சியிட்டு உலர்த்தும் வழக்கம் அன்றும் இருந்தது.

பாடல் நடை

நற்றிணை 90

திணை: மருதம் -தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.

ஆடியல் விழவின் அழுங்கன் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறனில் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்
அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் ஊறுதொழிற் பூசல் கூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்
பயனின்று அம்மவிவ் வேந்துடை அவையே.

எளிய பொருள்;

கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இவ்வூரில் ஆடைகளை ஆராய்ந்து துவைப்பதில் தன் கை ஒழியாத வறுமையில்லாத வண்ணாத்தி இரவிலே சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடன் பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட ஊஞ்சலிலே அம் பெண்டின் சில்வளைக் குறுமகள் அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !;

உசாத்துணை


✅Finalised Page