under review

வேதாள ஆட்டம்

From Tamil Wiki
வேதாள ஆட்டம்

வேதாள ஆட்டம், பேயாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை கணியான் ஆட்டத்தின் துணைக்கலையாக நிகழ்த்தப்படுகிறது. வேதாள முகமூடியை அணிந்து ஆடுவதால் வேதாள ஆட்டம் என்றும், பேய் போல் அச்சமூட்டியபடி ஆடுவதால் பேயாட்டம் என்றும் பெயர் பெற்றது.

நடைபெறும் முறை

வேதாள ஆட்டத்தைக் கணியான் சாதியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவார். இவர் காப்புக் கட்டுபவரோ, மகுடம் அடிப்பவரோ அல்லாமல் இருப்பார். வேதாள ஆட்டம் ஆடுவதற்கென்றே இவரை தனியாக அழைத்து வருவர். இவர் உடலெங்கும் திருநீறு பூசியிருப்பார். வேட்டியைத் தார்ப்பாய்ச்சி அணிந்திருப்பார். இடுப்பில் அரைக்கச்சையாக காவி கட்டியிருப்பார். வேதாள வடிவம் கொண்ட பயமுறுத்தும் முகமூடியை அணிந்திருப்பார்.

சுடலைமாடன் கோவில்களில் வெள்ளிக்கிழமை கைவெட்டு முடிந்ததும், சாமிக் கொண்டாடி அருள் வந்து ஆடத் தொடங்குவார். அவர் ஆடத் தொடங்கியதும் வேதாள வேஷம் கட்டிய கணியான் அவருடன் சேர்ந்து ஆடுவார். வேதாள ஆட்டக்காரர் நின்ற இடத்தில் இருந்து ஆடத் தொடங்கி பின் ஆவேசமாக ஆட ஆரம்பிப்பார். உடனே கணியான் பெண் ஆட்டக்காரர்களும் சேர்ந்து ஆடுவர். இவர்கள் ஆடுவதில் வேதாள ஆட்டக்காரர் ஆடுவது தனித்தன்மை கொண்டதாகவும் சாமியாடியின் அருளைக் கூட்டுவதாகவும் அமையும். அவரது ஆட்டத்திற்குத் தகுந்தவாறு அண்ணாவியும் சுடலைமாடன் கதையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைப் பாடுவார். மகுடமும் அதற்கேற்றார் போல் உக்கிரமாக இசைக்கப்படும். இந்த ஆட்டம் கோவில் வழிபாட்டின் கூறாகவே நிகழ்கிறது.

நிகழும் ஊர்கள்

இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமளவிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிய அளவிலும் நடைபெறுகிறது. கோவிலின் நிதி நிலைமைப் பொறுத்து இவ்வாட்டத்தை ஏற்பாடு செய்வர்.

நிகழும் இடம்

இவ்வாட்டம் கணியான் ஆட்டம் நிகழும் சுடலைமாடன் கோவில்களில் நிகழும். கோவிலின் முன் கணியான் ஆடுவதற்கு அமைத்த திடலிலேயே இவ்வாட்டமும் நிகழும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்


✅Finalised Page