under review

வெண்மணிப்பூதியார்

From Tamil Wiki

வெண்மணிப்பூதியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெண்மணிப்பூதியார் என்ற பெயரிலுள்ள பூதி என்பது பூதன் என்னும் ஆண்பால் பெயருக்கான பெண்பால் பெயர். வெண்ணி என்பது கோயில் வெண்ணி என இப்போது வழங்கப்படும் ஊர். இவ்வூர், இப்புலவர் வாழ்ந்த ஊராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

வெண்மணிப்பூதியார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான குறுந்தொகையின் 299- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலை தலைவி கூற்றாக இயற்றியுள்ளார். தலைவன் சிறைப்புறத்தே நிற்ப களவில் காதலித்த தலைவியை அடிக்கடி பிரிந்து செல்வதால் தலைவியின் உடல் மெலிந்து வாடியிருப்பதை வெண்மணிப்பூதியார் தன் பாடலில் காட்டுகிறார்.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • கடற்கரையில் செழித்து வளர்ந்துள்ள புன்னை மரத்தில் பூக்கள் மலர்ந்துள்ளன.
  • தலைவனைக் கண்ட கண்ணும், கேட்ட செவியும் எவ்விதமான வேறுபாடும் இல்லாதிருக்கத் தோள்கள் மட்டும் தம் மெலிவைப் பிறர் அறியும்படி நெகிழ்ந்தன.“என்று தலைவி கூறுகிறாள். களவொழுக்கத்தின் பொழுது, பிரிதலும் கூடுதலும் இருப்பதால் அவள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் மாறிமாறி அனுபவிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால், வருத்தம் இல்லாமல் இருக்கலாம் என்று தலைவனுக்கு கேட்குமாறு, தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் நடை

குறுந்தொகை 299

நெய்தல் திணை

சிறைப்புறமாக தோழிக்கு கிழத்தி உரைத்தது

இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே.

(கடற்கரையைக் கடலின் அலைகள் தழுவித் தழுவித் திளைக்கின்றன . கடலோரப் பறவைகள் ஒலித்துக் கொண்டே உள்ளன . கடற்கானலில் செழித்து வளர்ந்துள்ள புன்னை மரத்தில் பூக்கள் மலர்ந்துள்ளன.அம்மரத்தின் குளிர்ந்த நிழலில் தலைவியைச் சந்திப்பதாகத் தலைவன் வந்திருக்கிறான் . அவனைத் தன் விழிகளால் பார்த்து விழுங்குகிறாள் அவள். அவன் பேசிய இனிய சில சொற்கள் அவள் செவிகளில் தேனாகப் பாய்ந்து இனிக்கின்றன .அவன் தழுவிய தோள்கள் இனிக்கின்றன. தலைவன் தழுவிப் பிரிந்த தோள்கள் சோர்வுற்று மெலிகின்றன)

உசாத்துணை


✅Finalised Page