under review

வெண்ணிக் குயத்தியார்

From Tamil Wiki

வெண்ணிக் குயத்தியார், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவிஞர். குயவர் குலத்தைச் சேர்ந்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66-வது பாடலாக அமைகிறது. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை. வெண்ணிப்பறந்தலையில் கரிகாலனிடம் தோற்று, புறப்புண் நாணி வடக்கிருந்த சேரனை 'நின்னினும் நல்லன்' என கரிகாலனிடம் உரிமையுடன் புகழ்ந்துரைத்ததால் புகழ்பெற்ற பாடல்.

பெயர்க்காரணம்

வெண்ணிக் குயத்தியாரின் இயற்பெயர் வெண்ணி. வெண்ணி என்பது நந்தியாவட்டை பூவாகும். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். கோயில்வெண்ணி என்றும், கோயிலுண்ணி என்றும் வழங்கப்படுகிறது.இவ்வூரிலுள்ள கரும்பேசுவரர் கோயிலிலுள்ள தலவிருட்சம் வெண்ணி. குயவர் குலத்தில் பிறந்தவராதலால் வெண்ணிக்குயத்தியார் என்று வழங்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய ஓர் பாடல் புறநானூற்றில் 66-ஆவது பாடலாக இடம் பெறுகிறது. வெண்ணிப்பறந்தலை[1] என்ற ஊரில் சேரனையும் 11 குறுநில மன்னர்களையும் வென்று வாகை சூடிய கரிகாலனின் வீரத்தைப் பாடி, நெஞ்சைத் துளைத்து முதுகு வரை சென்ற கரிகாலனினஅம்பினால் ஏற்பட்ட புண்ணுக்கு நாணி உயிரை நீத்த சேரனின் உயர்வையும் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • கடலில் (முந்நீர்) கப்பலைச் செலுத்த காற்றைத் திறம்படக் கையாண்ட மன்னர்களின் வழித் தோன்றலே (மருக) என்று கரிகாலனைப் பாராட்டிவிட்டு வெண்ணிக் குயத்தியார் சேரனை வென்றதைப் பற்றிக் கூற வருகிறார். இதிலிருந்து கப்பலோட்ட காற்றைப் புரிந்து ஒட்ட வேண்டும் என்பதும் அத்திறனைக் கரிகாலனுக்கும் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள் என்பதும் புலப்படுகின்றன.
  • வெண்ணிப்பறந்தலையில் நடந்தபோரில் கரிகாலன் வென்றான்.
  • புலவர்கள் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்த மன்னனை வாகைத்திணையில் பாராட்டிப் பாடுவது வழக்கம். கரிகாலன், சேரன் பெருஞ்சேரலாதனை வென்று வந்த போது வெண்ணிக் குயத்தியார் கரிகாலனைப் புகழ்ந்துபாடும் போது, சேரன் 'உன்னைவிட உயர்ந்தவன் அன்றோ' என்கிறார்.
  • போரில் புறமுதுகிடுதல் மிக இழிவாகக் கருதப்பட்டது. நெஞ்சைத் துளைத்து முதுகு வழியே வெளிவந்தபோதும் அது முதுகுப் புண்ணானதைக் கண்டு வெட்கி சேரன் வடக்கிருந்து உயிர்நீத்தான். வீரத்தை மிகப் பெரிதாக மதித்தது அறிய வருகிறது.
  • புறமுதுகில் பட்ட அம்புக்காக, வடக்கிருந்து உயிர் துறக்கும் பழக்கம் தமிழ் மன்னர்களிடம் இருந்தது.
  • புலவர்கள் தங்கள் புலமையின் காரணமாக மன்னனையே இடித்துரைக்கவும் உன் எதிரி 'நின்னினும் நல்லன்' என அவன் எதிரியைப் புகழ்ந்துரைக்கவும் உரிமை பெற்றிருந்தனர். மன்னர்களால் மதிக்கப் பெற்றிருந்தனர்

பாடல் நடை

பாட்டுடைத் தலைவன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.

திணை: வாகை. துறை: அரச வாகை.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

பொருள்: களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ?

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. வெண்ணிப் போர் :தஞ்சாவூருக்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போராகும். இப்போர் வெண்ணி ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் நடைபெற்றது. இவ்வூர் தற்பொழுது கோயிலுண்ணி (கோயில் வெண்ணி) என வழங்கப்படுகிறது. இப்போர் ஏறத்தாழ பொ.மு.2-ம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது பொ.மு.1-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ நடந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கரிகால் சோழன் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் சேரமான் பெருஞ் சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்


✅Finalised Page