under review

வீடூர் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
வீடூர் ஆதிநாதர் கோயில் (நன்றி- பத்மாராஜ்)

வீடூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) விழுப்புரம் மாவட்டம், வீடூரில் அமைந்த சமணக் கோயில். சமணத்தின் முதலாவது தீர்த்தங்கரரான ஆதிநாதரை மூலவராகக் கொண்ட கோயில்.

இடம்

திண்டிவனத்திற்கும், விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள வீரூர் அணைக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் வீடூர் ஆதிநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் திண்டிவனத்திலிருந்து இருபத்தினான்கு கிலோமீட்டர் தென்கிழக்கில் உள்ளது.

வரலாறு

பொ.யு. 10-ம் நூற்றாண்டிலிருந்தே சமணத் தலமாக விளங்கியுள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்களின் வழி அறியலாம்.

வீடூர் கல்வெட்டு

கல்வெட்டுக்கள்

இங்குள்ள கோயிலில் பண்டைக்காலத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் இருந்திருக்கவேண்டும். பின்னர் இக்கோயில் பலமுறை புதுப்பிக்கப்பட்டமையால் அவை முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கோயிலில் பண்டைய கட்டடக் கலையம்சங்கள் எவையும் இல்லை. திருச்சுற்று மதிலின் கிழக்கிலுள்ள தரைப்பகுதியில் ஏராளமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கற்கள் ஒன்றில் இராட்டிரகூட மன்னாகிய மூன்றாம் கிருஷ்ணனது (பொ.யு. 939-968) சாசனம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இதில் "ஸ்வஸ்திஸ்ரீ கன்னரதேவர்க்கு ..." என்ற வாசகமும், தானம் கொடுத்ததைக்குறிக்கும் செய்தியும் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சிதைந்தும் தேய்ந்தும் காணப்படுகிறது. இச்சாசனத்தின் அடிப்படையில் பொ.யு. 10 -ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இங்கு ஆதிநாதர் கோயில் இருந்தது என்பதை அறியலாம். தக்காணத்தை ஆட்சிபுரிந்த இராட்டிரகூட பரம்பரையில் வந்த மூன்றாம் கிருஷ்ணன் (கன்னரதேவன்) தமிழகத்தின் வடபகுதியினைக் கைப்பற்றி அரசுபுரிந்தபோது இக்கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டிருக்கிறது.

வீடூர் ஆதிநாதர்

இந்த கோயிலின் திருச்சுற்று மதிலின் வடக்குப்பகுதியில் வெளிப்புறமாக கல்வெட்டுக்களைக் கொண்ட சில கருங்கற்கள் தலைகீழாகப் பதிக்கப்பட்டிருப்பட்டிருக்கிறது. இவை பொ.யு. 12 - 13-ம் நூற்றாண்டு வரிவடிவம் பெற்றதென்பதை அறியலாம். அழிந்த நிலையிலுள்ள எழுத்துக்களைக்கொண்ட ஓரிரு உடைந்த கற்கள் கோபுரவாயிலுக்கு உட்புறமாகத் தரையில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை பொ.யு. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில் இக்கோயில் வழிபாட்டுடன் திகழ்ந்ததை உணர்த்துகிறது. எஞ்சியுள்ள சான்றுகளின் அடிப்படையில் இந்த கோயில் பொ.யு. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அறியலாம்.

அமைப்பு

முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கு எழுப்பப்பட்ட கோயில் இங்குள்ளது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் இதன் தொன்மை அழிந்துள்ளது. இக்கோயில் கருவறை, உள்ளாலை, சிகரம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், மனத்தூய்மைக் கம்பம், பலிபீடம், ராஜகோபுரம் ஆகியவற்றைக் கொண்டது. கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் திருச்சுற்று மதிலை ஒட்டி உட்புறமாக பலதூண்களைக் கொண்ட மண்டபமும், வடக்குப்புறம் சிறிய கருவறையொன்றும் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இவையனைத்தையும் உள்ளடக்கியவாறு திருச்சுற்று மதில் திராவிட கட்டடக்கலைபாணியுடன் எழுப்பப்பட்டுள்ளது.

வீடூர் சிற்பங்கள்

சிற்பங்கள்

கோயிலின் கருவறையில் மூலவராக ஆதிநாதரின் சிற்பம் உள்ளது. அமர்ந்த நிலையிலிருக்கும் இவரது தலைக்குப் பின்பகுதியில் அலங்கார பிரபையும், அதற்கு மேலாக முக்குடையும் உள்ளன. கருவறையில் பிற்காலத்தைச் சார்ந்த பல தீர்த்தங்கரர்களது செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் புறச்சுவர்களிலுள்ள மாடங்களில் தற்கால திருவுருவ அமைப்புகளைக் கொண்ட மகாவீரர், பார்சுவநாதர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் விமான மேற்பகுதியிலுள்ள சுதை வடிவங்களும் தற்காலத்தில் நிறுவப் பட்டவை. முன் மண்டபத்தில் மகாவீரர், இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களைச் சிற்றுருவச் சிற்பமாகக் கொண்ட சதுர்விம்சதி திருவுருவமும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை பொ.யு. 17 அல்லது 18-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டவையாக இருக்கலாம்.

திருச்சுற்று மதிலின் மேற்குப்புறத்தில் இரு யக்ஷியர் சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இவ்விரண்டும் பத்மாவதி அல்லது அம்பிகா யக்ஷிகளைக் குறிப்பவையாக இருக்கலாம். முன்பு இவை தனியாக உள்ள கருவறைகளில் நிறுவப்பட்டு பின்னர் சிதைந்து போனமையால் திருச்சுற்று மதிலை ஒட்டியுள்ள பகுதியில் கொண்டு வைக்கப்பட்டன. இத்தேவியரது திருமேனிகளை கரண்ட மகுடம், பத்ரகுண்டலங்கள், அடுக்கடுக்கான கழுத்தணிகள், கைவளைகள், முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஆடை, சிம்மமுகமுடைய மேகலை முதலிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இவற்றின் ஆடை அலங்காரங்கள் யாவும் பொ.யு. 15-லிருந்து 16-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியினை நிறுவுகின்றன.

வீடூர் பளிங்கு சிற்பங்கள்

கோயிலின் வடகிழக்கில் பக்தார மண்டபம் ரிஷபதேவர், மானதுங்காச்சாரியார் உருவச்சிலைகளுடன் பக்தார ஸ்லோகங்களும் மற்றும் நவக்கிரக தீர்த்தங்கர உலோகச் சிலைகளும் உள்ளன. திருச்சுற்று வடபகுதியில் ஸ்ரேயாம்சநாதர் மற்றும் பார்ஸ்வநாதர் சிலைகள் அடங்கிய தனிக் கோவில் ஒன்றும் சரஸ்வதி, பிரம்மதேவர், ஜ்வாலாமாலினி, பத்மாவதி மற்றும் நவக்கரக சிலைகள் அடங்கிய சன்னதிகளும் எதிரில் க்ஷேத்ரபாலகர் சன்னதியும் உள்ளது. தீர்த்தங்கரர்கள் , உள்ளாலை வாயிலில் அழகிய கோமுக யக்ஷன் , சக்ரேஸ்வரி யக்ஷி பளிங்கு கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. யக்ஷ, யக்ஷி, நந்தீஸ்வர தீபம், மஹாமேரு போன்று பல உலோகச் சிலைகளும் மற்றும் கல்லால் அமைந்த 24 தீர்த்தங்கரர் சிலையும் உள்ளது.

வீடூர் சமண நவக்கிரகங்கள்

வழிபாடு

முப்பதுக்கும் மேற்பட்ட சமண இல்லறத்தார்கள் வாழ்ந்து வரும் வீடூரிலுள்ள இவ்வாலயத்தில் தினமும் இருவேளை பூஜைகளும் விசேஷ தினங்களில் பிரத்யேக பூஜைகளும் நடைபெறுகிறது. திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

உசாத்துணை


✅Finalised Page