under review

வடமலையப்ப பிள்ளையன்

From Tamil Wiki

வடமலையப்ப பிள்ளையன் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப்புலவர். மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சியின் போது திருநெல்வேலியின் முக்கூடல் எனும் பகுதிக்கு வரி வசூலிக்கும் உரிமை கொண்டவராகவும், சேனாபதியாகவும் பணிபுரிந்தவர். இறையூர் வடமலை நாரணக்குடை, வடமலையப்ப பிள்ளை, வடமலை பிள்ளையன் போன்ற பெயர்களால் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள இறையூரில் பிறந்தார். இவரது பிறந்த வருடம் சரியாக அறியமுடிவதில்லை, ஆனால் 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்படுகிறது.

இளம்வயதில் பெற்றோரை இழந்த இவர் தனது சித்தப்பாவிடம் வளர்ந்தார். கஞ்சனூர் சுவாமிநாத தேசிகர், சுப்ரமணிய தேசிகர் ஆகியோர் இவரது ஆசிரியர்கள்.

திருநெல்வேலி சீமையை ஆட்சி செய்யும் அதிபதியாக இருக்கவேண்டும் என்று திருமலைநாயக்க மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி இராசபுரத்தில் தான் சார்ந்த கார்காத்த வேளாளர் சமூகத்தைக் குடியேற்றி அங்கிருந்து ஆட்சி செய்தார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள முக்கூடல் பகுதியை தலைமையாகக்கொண்டு பாளையங்களை ஒன்றிணைத்தார்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இவர் நினைவாக பிள்ளையன் மண்டபம் உள்ளது.

டச்சு போர்த்துகீசியர்களால் கடலில் எறியப்பட்ட திருச்செந்தூர் அலைவாய் கந்தனின் விக்ரகத்தை கடலிலிருந்து இவர மீட்டதாக செவிவழிக் கதை உள்ளது.

இலக்கிய பங்களிப்பு

மச்சபுராணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் சிவாலயத்தைக் குறித்து தீருநீடூர்த் தலபுராணம் எனும் நூலை இயற்றினார். தமிழ்ச்சிற்றிலக்கியங்களுள் ஒன்றான முக்கூடற்பள்ளு இவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அன்ன காவிரி யாநந்த தீர்த்தத்தில்
மன்னு பொன்னிற மாய்வெள்வ யிற்றொடு
துன்னு கால்கவை நீண்டுது லங்கிட
நன்னிலம் புகழ் ஞானஞெண் டாகியே

(திருநீடுர்த்தலபுராணம், அலவன் பூசைச்சருக்கம், பாடல் எண் 27)

உசாத்துணை


✅Finalised Page