under review

வசந்தி தயாபரன்

From Tamil Wiki
வசந்தி தயாபரன்

வசந்தி தயாபரன் (பிறப்பு : டிசம்பர் 16, 1956) ஈழத்து தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுவர் இலக்கிய நூல்களுக்காக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

வசந்தி தயாபரன் இலங்கை கொழும்பில் இராசையா, பூரணம் இணையருக்கு டிசம்பர் 16, 1956-ல் பிறந்தார். தந்தை சிறுவர் இலக்கியவாதி, தகவம் இலக்கிய அமைப்பின் ஸ்தாபகர். வசந்தி கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடத்தில் கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அம்மாவின் மூலம் கர்நாடக சங்கீதத்திலும் பரதநாட்டியத்திலும் வயலினிலும் ஆர்வம் பெற்ற இவர் வாய்ப்பாட்டில் (வ.இ.ச.சபை)யின் 5-ம் தரமும், வயலினில் 3-ம் தரமும் தேர்ச்சி பெற்றார். பரதநாட்டியத்தில் டிப்ளோமா வரை கற்றார். பண்ணிசையிலும் ஆர்வம் உடையவர்.

தனிவாழ்க்கை

வசந்தி தயாபரன் இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றினார். 1981-ம் ஆண்டு தயாபரனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். மூவரும் பொறியியலாளர்கள். வசந்தி தயாபரம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நீண்டகாலமாக ஆட்சிக்குழுவில் உறுப்பினராகச் செயலாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

வசந்தி தயாபரன் தனது 21-ஆவது வயதில் இலங்கை வங்கி மலரில் கட்டுரையும் கவிதையும் எழுதினார். 2002-ம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் 'புதிய முகம்' சிறுகதை வெளிவந்தது. டொமினிக் ஜீவாவின் ஊக்குவிப்பால் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். 2012-ல் 'காலமாம் வனம்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். நான்கு சிறுவர் இலக்கிய நூல்களும் வெளியிட்டார். சிறுவர்களுக்கான சிங்கள பாடத்துணை நூல் ஒன்றை சிங்கள மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். இலக்கியத் திறனாய்வுகளை பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுத்து வடிவிலும் மேடைகளில் உரைவடிவிலும் வழங்கினார். தமிழ்க் கதைஞர் வட்டம் அமைப்பின் செயலாளரான இவர் 2016-ம் ஆண்டில் தகவம் பரிசுக் கதைகள்- 3 தொகுதியை வெளியிட்டார்.

விருதுகள்

  • வசந்தி தயாபரனின் 'குடை நடை கடை' நூலுக்கு குழந்தை இலக்கியத்திற்கான பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருதுடன் ரூபாய் பத்தாயிரம் பொற்கிழியும் கிடைத்தது.

நூல்கள்

  • புதிய முகம்
  • காலமாம் வனம்
  • மண்புழு மாமா வேலை செய்கிறார்
  • குடை நடை கடை
  • அழகிய ஆட்டம்
  • பச்சை உலகம்

உசாத்துணை


✅Finalised Page