under review

ராஜாராணி ஆட்டம்

From Tamil Wiki

ராஜாவும் ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சி ராஜாராணி ஆட்டம் எனப்படுகிறது. தஞ்சை மாவட்டப் பகுதியின் நிகழ்த்து கலை. கரகாட்டத்தின் துணை நிகழ்ச்சியாக நிகழ்ந்திருக்கிறது. ராஜாவும் ராணியும் சந்தித்து பேசி திருமணம் செய்துகொள்வதுமாக, பாட்டும், உரையாடலுமாக நடைபெறும் இந்தக் கலை இப்போது நிகழ்த்தப்படுவதில்லை.

ராஜாராணி

நடைபெறும் முறை

கரகாட்டக் கலையின் துணை நிகழ்ச்சியாக நடைபெறும் ராஜா ராணி ஆட்டத்தில் கரகாட்டக் கலையின் பெண்களும், நையாண்டி மேளக் கலைஞர்களும் பங்கு கொள்வர். இந்தக் கலை ராஜா, ராணி, சேவகன் என்ற மூன்று கதாபாத்திரங்கள் கொண்டு நடைபெறும். மூன்று பேரும் பேசியும், பாடியுமாக நிகழ்த்துவது இந்தக் கலை.

ராணி பூப்பறிக்கச் செல்வதில் இருந்து தொடங்கும் இந்த நிகழ்த்துகலையின் உரையாடல் பாலியல் தன்மை கொண்டதாக அமையும். பூப்பறிக்க வரும் ராணிக்காக ராஜா ஆவலுடன் பேசக் காத்திருப்பார். ராணி தன் தோழி பெண்களுடன் ஆடிப் பாடி தோட்டத்திற்குள் நுழையும் போது ராஜாவை கண்டு வெட்கம் கொள்வாள். ராஜா அவளுடன் எதிர் வழக்காடுவார்.

அதிலிருந்து இருவருக்கும் காதல் மலர்ந்து இறுதியில் இருவரும் திருமணம் செய்வது வரையான நிகழ்வுகள் பாட்டும் உரையாடலுமாக நடக்கும். இதன் நடுவில் ராஜா, சேவகன், ராணி இவர்கள் மூவருக்கும் நடுவில் நிகழும் உரையாடல் இரட்டை அர்த்தம் கொண்டு பாலியல் உரையாடல்களாக நிகழும். தஞ்சாவூர் பகுதியில் மட்டுமே நிகழ்ந்து வந்த இந்தக் கலை இன்று வழக்கில் இல்லை.

நிகழ்த்துபவர்கள்

  • ராஜா - கரகாட்டத்தின் கலைஞர்கள் ராஜா வேஷம் கட்டி வந்து நடிப்பர்
  • ராணி - கரகாட்டத்தில் வரும் பெண்கள் ராணி வேஷம் கட்டி நடிப்பர்
  • சேவகன் - சேவகன் இருவருக்குமான தூதாக இருப்பான்

நிகழ்ந்த ஊர்கள்

  • தஞ்சாவூர் மாவட்டம்

நடைபெறும் இடம்

இந்த கூத்து, கரகாட்டம் நடைபெறும் ஊர் பொது இடங்களிலும் கோவிலுக்கு முன் இருக்கும் திடல்களிலும் நடைபெறும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்


✅Finalised Page